Published : 31 Jul 2019 02:57 PM
Last Updated : 31 Jul 2019 02:57 PM

கேப்டன் கோலி என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள்ளட்டும்: கோச் தேர்வுக்குழுவில் உள்ள அன்ஷுமன் கெய்க்வாட் காட்டம்

அடுத்தப் பயிற்சியாளரைத் தேர்வு செய்வதில் கேப்டன் விராட் கோலியின் வார்த்தைகளுக்கு செல்வாக்கு இருக்குமா என்ற கேள்விக்கு கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டியில் இருக்கும் முன்னாள் தொடக்க வீரர் அன்ஷுமன் கெய்க்வாட் அப்படி எந்த ஒரு கட்டாயமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ரவிசாஸ்திரியே தலைமைப் பயிற்சியாளராகத் தொடர்ந்தால் நல்லது, மகிழ்ச்சி என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்ததையடுத்து அவரை இதில் ஈடுபடுத்தும் கட்டாயம் எதுவும் இல்லை என்று அன்ஷுமன் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் குழுவில் கபில்தேவ், அன்ஷுமன் கெய்க்வாட், முன்னாள் மகளிர் அணி கேப்டன் ஷாந்தா ரெங்கசாமி ஆகியோர் உள்ளனர். 

தற்போதுள்ள பயிற்சிக்குழுவான ரவிசாஸ்திரி தலைமைக் குழுவுக்கு மே.இ.தீவுகள் தொடர் வரை நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அன்ஷுமன் கெய்க்வாட் கூறும்போது, “நாம் திறந்த மனதுடன் செல்ல வேண்டும். இன்னும் நேர்காணல்கள் நடத்தப்பட வேண்டியுள்ளது. இந்தியாவிலிருந்தும் அயல்நாடுகளிலிருந்தும் ஏகப்பட்ட பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆகவே நாங்கள் அதையெல்லாம் மதிப்பிட வேண்டும். 

இது தொடர்பாக கேப்டன் என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள்ளட்டும் அது எங்களுக்குக் கவலையில்லை. இது கமிட்டியாகும்.  இது அவரது கருத்து, பிசிசிஐ அதனை குறித்துக் கொண்டுள்ளது, நாங்கள் இல்லை. பிசிசிஐ-யைப் பொறுத்ததே, பிசிசிஐ வழிகாட்டுதலின் படி நாங்கள் செல்வோம். மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளரைத் தேர்வு செய்த போது நாங்கள் யாரையும் தொடர்பு கொள்ளவில்லையே. 

நாங்களாகவேதான் தேர்வு செய்தோம்.  பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவோர்களுக்கு வீரர்களை நிர்வகிக்கும் திறன்,  திட்டமிடுதல், உத்தி ரீதியான நிபுணத்துவம் இதைத்தான் அளவுகோலாக வைத்திருக்கிறோம். 

பிசிசிஐ வழிகாட்டுதலுக்காகக் காத்திருக்கிறோம். எப்படித் தேர்வு செய்வது? அதன் வழிகாட்டுதல் என்னென்ன என்பதற்காக பிசிசிஐயின் அறிவுறுத்தல் வந்தவுடன் தேர்வு நடைமுறைகள் தொடங்கும்” என்றார் அன்ஷுமன் கெய்க்வாட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x