Published : 29 Jul 2019 08:52 PM
Last Updated : 29 Jul 2019 08:52 PM

பாகிஸ்தான் ரசிகர்களின் ‘உள்ளம் கவர்ந்த 1999 சென்னை டெஸ்ட் வெற்றி’ - கருத்துக் கணிப்பில் ரசிகர்கள் கருத்து 

1999-ம் ஆண்டு சென்னையில் சச்சின் டெண்டுல்கர் கடைசி வரை போராடினார் ஆனால் போட்டியை முடித்துக் கொடுக்க முடியாமல் ஆட்டமிழந்த போது பாகிஸ்தான் 12 ரன்களில் வெற்றி பெற்றது. இந்த புகழ்பெற்ற டெஸ்ட் போட்டிதான் அனைத்து கால சிறந்த டெஸ்ட் போட்டி என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கருத்துக் கணிப்பில் அதிகம் வாக்களித்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தன் அதிகாரபூர்வ முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் ஜூஅலி 26 முதல் 29 வரை கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் 65% ரசிகர்கள் 1999 சென்னை டெஸ்ட் போட்டிதான் கிரேட்டஸ்ட் டெஸ்ட் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானிய வீரர்களுக்கு சென்னை ரசிகர்கள் வெற்றிக்குப் பிறகு எழுந்து நின்று கரகோஷம் செய்து வாழ்த்தியதும் நடந்தது, பொதுவாக அப்போதைய சென்னை ரசிகர்கள் கிரிக்கெட் ஆட்டத்தை அதன் திறன் வெளிப்பாட்டுக்காக ரசிக்கக் கூடியவர்கள். 

ஆனால் இந்திய ரசிகர்களின் மனம் உடைந்த நாளாகும் அது. வாசிம் அக்ரம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 238 ரன்கள் எடுத்தது, அனில் கும்ப்ளே 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 254 ரன்கள் எடுத்தது, சக்லைன் முஷ்டாக் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வாசிம் அக்ரம், ரமேஷ், லஷ்மணை எல்.பி.செய்ய, இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரை சக்லைன் டக்கில் வீழ்த்தினார். ராகுல் திராவிட்  53 ரன்களையும் கங்குலி 54 ரன்கள் என்று அரைசதம் எடுத்தனர். சுனில் ஜோஷி கடைசியில் 25 ரன்களை எடுக்க இந்திய அணி 16 ரன்கள் முன்னிலை பெற்று 254 என்ற ஸ்கோரை எட்டியது. 

பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் ஷாகித் அப்ரீடியின் 141 ரன்கள் சதத்துடன் 286 ரன்களுக்குச் சுருண்டது. வெங்கடேஷ் பிரசாத் 33 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைபற்றினார். 

இந்திய அணி 271 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய போது எஸ்.ரமேஷ் (5), லஷ்மண் (0) ஆகியோரை வகார் யூனிஸ் பெவிலியன் அனுப்ப ராகுல் திராவிட் 10 ரன்களில் வாசிம் அக்ரம் பந்தில் பவுல்டு ஆனார். கேப்டன் அசாருதீன் (7), கங்குலி (2) ஆகியோர் சக்லைன் சுழலில் சிக்கி வெளியேறினர். 82/5 என்ற நிலையில் மாஸ்டர் பேட்ஸ்மென் சச்சின், நியான் மோங்கியா கடும் நெருக்கடியில் ஸ்கோரை 218 ரன்களுக்கு கொண்டு சென்றனர், அப்போது 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்த மோங்கியா வாசிம் அக்ரம் பந்தை மிக அசிங்கமாக ஒரு சுழற்று சுழற்றி கேட்ச் ஆனார்.  பிற்பாடு மோங்கியாவின் இந்த ஸ்ட்ரோக் சச்சின் டெண்டுல்கரின் கடும் கோபத்திற்கு ஆளானதும், நயன் மோங்கியா மீது சூதாட்டப்புகார்களும் எழுந்தது வேறு கதை.

சச்சின் டெண்டுல்கர் ஸ்கோரை 254 வரை கொண்டு சென்றார் வெற்றி பெற இன்னும் 18 ரன்கள்தான் தேவை ஆனால் சக்லைன் முஷ்டாக் பந்தை சிக்ஸ் அடிக்கப்போய் சச்சின் 136 பந்துகளில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு 4 ரன்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் வென்றது, இந்திய ரசிகர்களின் மனம் உடைந்தது. 

அந்தப் போட்டியை நேரில் பார்த்த ரசிகர்கள் சிலர், பாகிஸ்தான் வீரர் சலீம் மாலிக் பவுண்டரியில் நின்று கொண்டு சச்சின் டெண்டுல்கரைக்  கைகாட்டி ரசிகர்களிடம் ‘அவர் போய் விட்டால் அவ்வளவுதான்’ என்று கூறியது பிரபலம். 

இந்நிலையில் பாகிஸ்தான் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த டெஸ்ட் போட்டியாக இது தேர்வாகியுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x