Published : 29 Jul 2019 11:27 AM
Last Updated : 29 Jul 2019 11:27 AM

வீரர்களால்  சாதிக்க முடியாததை சாதித்த ஆஸி. வீராங்கனை: கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை 

ஹோவ்,

கிரிக்கெட் வீரர்களால் நிகழ்த்த முடியாத சாதனையை ஆஸி. வீராங்கனை நிகழ்த்தி கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக ஆயிரம் ரன்கள் அடித்து, 100 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் வீராங்கனை எனும் சாதனையை ஆஸ்திரேலிய வீராங்கனை எல்ஸி பெரி படைத்தார். இதற்கு முன் எந்த நாட்டு அணி வீரர்களும் இந்த சாதனையைச் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்துக்கு எதிராக 2-வது டி20 போட்டி நேற்ற ஹோவ் நகரில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் சேர்த்தது. 122 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி  17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் சேர்தது 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

இந்த ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதையும் பெரி வென்றார். இதில் 7 பவுண்டரி ஒரு சிக்ஸர் அடங்கும். இதன் மூலம் டி20 போட்டியில் ஆயிரம் ரன்களை எட்டிய பெருமையை பெரி பெற்றார். 

ஏற்கெனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து வீராங்கனை நாட் ஸிவர் விக்கெட்டை வீழ்த்தியபோது, 100-வது விக்கெட்டை பெரி வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் இதுபோன்ற சாதனையைச் செய்யவில்லை. பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி டி20 போட்டியில் 1,416 ரன்களும், 98 விக்கெட்டுகளையும் மட்டுமே வீழ்த்தி இருந்தார். அதற்கு அடுத்தபடியாக வங்தேச வீரர் சகிப் அல்  ஹசன் 88 விக்கெட்டுகளையும், 1471 ரன்களையும் சேர்த்துள்ளார். ஆனால், எந்த வீரரும் 100 விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பெரி கிரிக்இன்போ தளத்தில் கூறுகையில், "இது மிகச்சிறப்பான தருணம், ஆனால் இந்த சாதனையை நான் எட்டியது எனக்குத் தெரியாது. அதிகமாக ஆடவர்கள்தான் டி20 போட்டி விளையாடுவார்கள் என்ற நிலையில் நான் விரைவாக 100 விக்கெட்டுகளையும் ஆயிரம் ரன்களையும் எட்டியுள்ளேன்" எனத் தெரிவித்தார்.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x