Published : 25 Jul 2019 03:29 PM
Last Updated : 25 Jul 2019 03:29 PM

இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியிலிருந்து மறைகிறது சீனாவின் ‘ஓப்போ’

இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஜெர்ஸியில் காணப்படும் சீன மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ‘ஒப்போ’வின் பெயர் மறைகிறது, அதற்குப் பதிலாக பெங்களூருவைச் சேர்ந்த கல்வி தொழில்நுட்ப  ஆன்லைன் டியூட்டோரியல் நிறுவனமான ‘பைஜு’ இடம்பிடித்துள்ளது. 

2017-ல் பிசிசிஐ ‘ஓப்போ’வுடன் மேற்கொண்ட 5 ஆண்டுகால ஒப்பந்தம் ரூ.1079 கோடி மதிப்புடையது.  இந்நிலையில் ‘ஓப்போ’வுக்குப் பதில் இனி பைஜு என்ற பெயரை இந்திய வீரர்களின் ஜெர்சியில் பார்க்கலாம். 

விராட் கோலி படை செப்15ம் தேதி தொடங்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடரில் இந்த புதிய  ‘பைஜு’ ஜெர்சியை அணியவிருக்கிறது. 

இந்த மாற்றம் ‘மும்முனை ஒப்பந்தம்’ அடிப்படையில் ஓப்போ முடிந்து பைஜுவுக்கு மாறுகிறது. அதாவது ஓப்போ, பைஜு, பிசிசிஐ ஆகியோரிடையே இன்று (வியாழன்) ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. 

இது தொடர்பாக பெயர் கூற விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஓப்போவும் பைஜுவும் தங்களுக்கிடையே பேச்சு வார்த்தை நடத்தி இந்திய கிரிக்கெட் வீரர்கள் சட்டை ஸ்பான்சர் ஒப்பந்த கைமாற்றை ஏற்படுத்திக்கொண்டனர், இது குறித்து உச்ச நீதிமன்றம் நியமித்த நிர்வாகக் கமிட்டிக்கும் தெரியப்படுத்தப்பட்டது” என்றார். 

கடந்த மார்ச் 2017-ல் விவோ மொபைலை முறியடித்து இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சிக்கான ஸ்பான்ஸர் உரிமைகளை ஓப்போ பெற்றது.  இந்த ஒப்பந்தங்களின் படி இருதரப்பு தொடர்களில் ஒவ்வொரு போட்டிக்கும் பிசிசிஐ-க்கு ஓப்போ ரூ.4.61 கோடியும், ஐசிசி தொடரில் ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.1.56 கோடியும் அளிக்க வேண்டும். 

இதனையடுத்து தற்போது ஸ்பான்ஸர் நிறுவனங்கள் தங்களுக்கிடையே பேச்சு நடத்தி பரஸ்பர உடன்படிக்கை மேற்கொண்டதால் பிசிசிஐக்கு எந்த வித நஷ்டமும் இல்லை. ஓப்போ என்ன ஒப்பந்தத் தொகையை அளித்ததோ அதனை பைஜுவும் அளிக்க வேண்டும்.

ஸ்பான்சர்ஷிப் பரிமாற்ற ஒப்பந்தம் பிசிசிஐ விதிகளில் உள்ளது, இது ரகசிய உடன்படிக்கை என்பதால் இதன் நிதி விவகாரங்கள் வெளிப்படுத்தப் பட மாட்டாது என்கிறார் பிசிசிஐ அதிகாரி. 

இன்னும் சொல்லப்போனால் இந்த மாற்றத்தினால் பிசிசிஐக்கு மேலும் பணம் அதிகம் வரும் என்றார் இன்னொரு அதிகாரி. 

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x