Published : 23 Jul 2019 11:37 AM
Last Updated : 23 Jul 2019 11:37 AM

கோலியும்... தோனியும்.... என்ன நினைக்கிறார் முன்னாள் வீரர் பத்ரிநாத்? 

ஆர்.கிருஷ்ணகுமார்

விராட் கோலி சிறந்த கேப்டன் என்பதில் சந்தேகம் இல்லை. எம்.எஸ்.தோனி ஓய்வு பெற வேண்டுமா, இல்லையா என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும் என்கிறார்  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத். 

மாநில அளவிலான `பாரத் சூப்பர் லீக்’ கபடிப் போட்டி கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, ஜோலார்பேட்டை, நாமக்கல், கரூர், வேலூர் மாவட்டங்களில் நடைபெற்றன. உள்ளூர் கபடி வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் 128 அணிகள் பங்கேற்றன. லீக் முறையில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டன. பின்னர், கோவையில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் கோவை, சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்கள் கலந்துகொண்டன. இதில் பங்கேற்ற வீரர்களை கோவையில் நேற்று இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தார். அவரிடம் பேசினோம்.

“கிரிக்கெட் விளையாட்டைத் தாண்டி, கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவு அதிகரித்து வருகிறது. பெரிய நிறுவனங்கள் கபடி, கால்பந்து, கூடைப்பந்துப் போட்டிகளைத் தேர்ந்தெடுத்து, வீரர்களுக்கு உதவுகின்றன. மாநில, தேசிய அளவில் போட்டிகளும் நடத்துகின்றன. இதன் மூலம் உள்ளூர் வீரர்கள், தேசிய, சர்வதேச அளவில் பிரகாசிக்க முடிகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. அரை இறுதி வரை தொடர் வெற்றிகளைக் குவித்தது. விராட் கோலி சிறந்த கேப்டன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்திய அணியை நன்றாக வழிநடத்தி, அரையிறுதி வரை கொண்டு சென்றார்.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்!

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடினர். அதேசமயம், `மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்’ தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். உலகக்கோப்பை அணி வீரர்கள் தேர்வுக்கு போதிய நேரம் இருந்தது. ஆனாலும், தேர்வு முறையில் தவறு செய்துவிட்டனர். இதுவே அரையிறுதிப் போட்டியில் தோல்வியைப் பெற்றுத்தந்துவிட்டது. இங்கிலாந்து மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானவை என்று தெரிந்தும், அதற்கு ஏற்றாற்போல திட்டமிடவில்லை. இனியாவது அணி வீரர்கள் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

எம்.எஸ்.தோனி ஓய்வு பெற வேண்டுமா என்பது, அவரது தனிப்பட்ட விருப்பம், உடல்தகுதி ஆகியவற்றைச் சேர்ந்தது. அவர் ஓய்வுபெற வேண்டுமென மற்றவர்கள் கட்டாயப்படுத்தக்கூடாது. அதேவேளையில், இளம் வீரர்களை வளர்த்தெடுப்பதும் தற்போதைய சூழலில் மிகுந்த அவசியமானதாகும்.  ரிஷப் பந்த் போன்ற இளம் வீரர்களை ஊக்குவித்து, அடுத்த உலகக்கோப்பை போட்டிக்குத் தயார் செய்ய வேண்டும்.

திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு!

இந்திய அணியில் தமிழக வீரர்களை தேர்வு செய்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. திறமையான வீரர்கள் நிச்சயம் அணியில் இடம்பெறுகிறார்கள். இந்திய அணியில் இடம் பெறும் அளவுக்கு மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பிரகாசிக்க வேண்டும். தகுதி இருப்பின் நிச்சயம் வாய்ப்புக் கிடைக்கும். உலகக் கோப்பையில் விஜய்சங்கருக்கு வாய்ப்புக் கிடைத்தும், பெரிய அளவுக்கு ஜொலிக்கவில்லை.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, தமிழில் வர்ணனை செய்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. எங்கள் வர்ணனையை தமிழக மக்கள்  பெரிதும் வரவேற்றனர். 

ஆர்.ஜே.பாலாஜி திரைப்பட நடிகர் என்பதால், கொஞ்சம் கலாய்த்திருக்கலாம். ஆனாலும், அது ரசிக்கும்படியாக இருந்தது. நான் தொழில்நுட்ப விவரங்களுடன்தான் வர்ணனை செய்தேன்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்  இறுதிப் போட்டியில்தான் நடுவர் தவறு செய்துவிட்டதுபோல விமர்சிக்கிறார்கள். 
அது சரியல்ல. பொதுவாகவே, நடுவர்கள் தவறு செய்வது சகஜம்தான். மனிதத் தவறுகள் நடப்பது வழக்கம்தான். அந்த சூழலில் நடுவர் எடுக்கும் முடிவு, பின்னர் தவறாகத் தெரியலாம். 

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி முழுவதுமே பல தவறுகள் நடந்த சூழலில், இறுதிப் போட்டியின் நடுவரை மட்டுமே குறைசொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. கிரிக்கெட் விதிகளில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாக உரிய விவாதங்கள் நடத்தி, மாற்றம் தொடர்பாக பரிசீலனை செய்யலாம்” என்றார் பத்ரிநாத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x