Published : 21 Jul 2019 05:13 PM
Last Updated : 21 Jul 2019 05:13 PM

நான் தவறு செய்துவிட்டேன்: உலகக்கோப்பை பைனலில் ஓவர் த்ரோவுக்கு 6 ரன் வழங்கிய நடுவர் தர்மசேனா ஒப்புதல்

 

கொழும்பு, பிடிஐ

 

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து வீரர் கப்தில் வீசிய ஓவர் த்ரோவுக்கு 6 ரன்கள் வழங்கி தவறு செய்துவிட்டேன். ஆனால் அந்த தவறுக்கு ஒருபோதும் நான்வருத்தம் தெரிவிக்கமாட்டேன் என்று இலங்கை நடுவர் தர்மசேனா தெரிவித்துள்ளார்.

 

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தும், நியூஸிலாந்தும் மோதின. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 241 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

 

கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் இங்கிலாந்துக்கு தேவைப்பட்டது. டிரன்ட் போல்ட் பந்துவீச களத்தில் ஸ்டோக்ஸ், ரஷித் இருந்தனர். ஸ்டோக்ஸ் தான் சந்தித்த 2 பந்துகளில் ரன் ஏதும் அடிக்கவில்லை. 3-வது பந்தில் ஸ்டோக்ஸ் மிட்விக்கெட்டில் காலை மடக்கிக்கொண்டு அபாரமான சிக்ஸரை அடித்தார். 4-வது பந்தில் ஸ்டோக்ஸ்  2 ரன்கள் ஓட முயற்சிக்கும்போது, கப்தில் பீல்டிங் செய்து விக்கெட் கீப்பருக்கு எறிந்தார். ஆனால், தனது விக்கெட்டை காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில், பாய்ந்தபோது அவரின் பேட்டில் பந்து ஓவர் த்ரோவாக பவுண்டரி சென்றதால், இங்கிலாந்துக்கு 6 ரன்கள் கிடைத்தது.

 

இந்த ஓவர் த்ரோதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. ஆனால் ஓவர் த்ரோ செய்யும் போது ஸ்டோக்ஸ் 2-வது ரன்னை முழுமையாக ஓடி முடிக்காத காரணத்தால், 5 ரன்கள் மட்டுமே நடுவர் வழங்கி இருக்க வேண்டும். ஆனால், 6 ரன்கள் வழங்கி நடுவர் தர்மசேனா தீர்ப்பு வழங்கினார். இதனால், கடைசியில் ஆட்டம் டிராவில் முடியும் நிலை ஏற்பட்டது.

அப்போது களத்தில் நடுவராக இருந்த இலங்கை நடுவர் தர்மசேனா, லெக் அம்பயர் மராயஸ் எராஸ்மஸுடன் கலந்துபேசி, போட்டி நடுவர்களுடன் பேசியபின்புதான் ஓவர் த்ரோவுக்கு 6 ரன்கள் வழங்கினார். ஆனால், சிறிதுநேரத்துக்குப்பின் டி.வி.ரீப்ளேயில் பார்த்தபின்புதான் ஸ்டோக்ஸ் 2-வது ரன்னை முழுமை செய்யவில்லை, அதனால் 6 ரன்கள் வழங்கியது தவறு எனத் தெரிந்தது.

 

ஓவர் த்ரோவுக்கு 6 வழங்கியது தவறான முடிவு, 5 ரன்கள்தான் வழங்கி இ ருக்க வேண்டும் என்று மூத்த நடுவர் சைமன் டாபுல், ஹரிஹரன் ஆகியோர்  விமர்சித்திருந்தனர்.

 

அதன்பின் சூப்பர் ஓவருக்கு போட்டி சென்று அதிலும் போட்டி டிரா ஆனபின், அதிகமான பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது.

 

இதில் நடுவர் தர்மசேனா வழங்கிய 6 ரன்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. முன்னாள் வீரர்கள் பலரும், முன்னாள் நடுவர்களும் விமர்சித்திருந்தனர்.

 

இந்த சூழலில் நடுவர் தர்மசேனா சண்டே டைம்ஸ் நாளேட்டுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

 

டி.வி.ரீப்ளேயில் காட்சிகளை பார்த்துக்கொண்டு அனைத்துக்கும் கருத்துக்கள் சொல்வது சிலருக்கு எளிதானதாகத்தான் இருக்கும். உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிஆட்டத்தில் நியூஸிலாந்து வீரர் கப்தில் ஓவர் த்ரோவுக்கு இங்கிலாந்து அணிக்கு 6 ரன்கள் வழங்கிய எனது முடிவு தவறானதுதான் என்பதை நான் தொலைக்காட்சி ரீப்ளேவை பார்த்தபோது ஒப்புக்கொண்டேன்

 

 

ஆனால், மைதானத்தில் நான் நடுவர் பணி செய்யும்போது, என்னால் டிவி ரீப்ளையை பார்க்க முடியாது, எந்த வசதியும் எனக்கு இல்லையே. நான் தவறு செய்துவிட்டேன் இல்லை எனச் சொல்லவில்லை, ஆனால், அந்த தவறுக்காக நான் வருத்தப்படமாட்டேன். ஏனென்றால், நான் அந்த நேரத்தில் அளித்த முடிவுக்கு, ஐசிசி என்னை அழைத்துப் பாராட்டியது.

 

அதுமட்டுமல்லாமல் அதுபோன்ற சிக்கலான நேரத்தில் மூன்றாவது நடுவரை அழைத்து பேசி முடிவு எடுக்க வேண்டும் என எந்தவிதமான ஐசிசி விதிமுறையிலும் இல்லை. நான் களத்தில் இருந்த லெக் அம்பயருடன் வாக்கிடாக்கியில் பேசினேன், என்னுடைய உரையாடலை அனைத்து நடுவர்களும் கேட்டார்கள். அப்போது டிவி ரீப்ளேயை பார்த்து சொல்ல முடியாத நிலையில், ஸ்டோக்ஸ் 2-வது ரன்னை முழுமை செய்துவிட்டார் என்றுநினைத்துதான் 6 ரன்கள் வழங்கினோம்" எனத் தெரிவித்தார். 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x