Published : 17 Jul 2019 02:31 PM
Last Updated : 17 Jul 2019 02:31 PM

நான்கு ரன்கள் ஓவர் த்ரோவை ஸ்கோரில் சேர்க்க வேண்டாம் - நடுவர்களிடம் ஸ்டோக்ஸ் கேட்டுக் கொண்டதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் தகவல்

உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் பல்வேறு சர்ச்சைகளில் பிரதான சர்ச்சையான கடைசி ஓவரில் கப்தில் வீசிய த்ரோ ஸ்டோக்ஸ் மட்டையில் பட்டு 4 ஓவர் த்ரோவாகச் செல்ல 6 ரன்கள் வழங்கப்பட்டது.  இது இங்கிலாந்தின் வெற்றியைத் தீர்மானித்தது.

இது பெரிய சர்ச்சையாக நடுவர் சைமன் டாஃபல் 6 ரன்கள் கொடுத்திருக்கக் கூடாது 5 ரன்கள்தான் கொடுத்திருக்க வேண்டும் என்று விமர்சனம் செய்திருந்தார், மேலும் 6 ரன்கள் என்பது விதிப்படி தவறு, நடுவர் தவறிழைத்து விட்டார் என்றார்.

பென் ஸ்டோக்ஸும் இதற்காக தான் வருந்துவதாகவும் நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சனிடம் வாழ்நாள் முழுதும் மன்னிப்புக் கேட்க போவதாகவும் தெரிவித்தார்.  கேன் வில்லியம்சன் இதனைப் பெரிதாக பொருட்படுத்தவில்லை. 

இந்நிலையில் நடுவர்களிடம் அந்த 4 ஓவர் த்ரோ ரன்களை ஸ்கோர் போர்டில் சேர்க்க வேண்டாம், அதை நீக்கி விடவும் என்று பென் ஸ்டோக்ஸ் கேட்டுக் கொண்டதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்தார். 

“கிரிக்கெட் நாகரீகம் என்னவெனில் ஸ்டம்புக்கு அடிக்கப்பட்ட த்ரோ நம் மேல் பட்டுவிட்டால், பவுண்டரிக்கு ஓவர் த்ரோவாகச் சென்றால் அது நான்கு ரன்கள் தான் இது விதி, இதனை நாம் ஒன்றும் செய்ய முடியாது. 

இது தொடர்பாக மைக்கேல் வானிடம் நான் பேசிய போது, உண்மையில் பென் ஸ்டோக்ஸ் நடுவரிடம் சென்று  ‘அந்த 4 ரன்களை எண்ணிக்கையிலிருந்து எடுக்க முடியுமா? எங்களுக்கு அந்த ரன்கள் வேண்டாம்’ என்று கூறியதாக தெரிவித்தார். ஆனால் விதிகளின் படி அவ்வாறு செய்ய  முடியாது, நடந்தது நடந்ததுதான். 

இது வீரர்கள் மத்தியிலும் எங்கும் ஒரு பேச்சாக அமைந்தது. உண்மையில் அது ‘டெட்’ பால் என்று இருந்தால் நல்லது” என்றார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

பென் ஸ்டோக்ஸ், அந்த 4 ரன்களை “ஃப்ளூக்” என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x