Published : 21 Jul 2015 03:02 PM
Last Updated : 21 Jul 2015 03:02 PM

4 பந்துகளில் 3 விக்கெட்டுகள்: தென் ஆப்பிரிக்காவை மிரட்டும் முஸ்தபிசுர் ரஹ்மான்

சிட்டகாங்கில் நடைபெறும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணிக்காக அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆடும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

இதனால் தென் ஆப்பிரிக்கா அணி தற்போது 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கலக்கல் அறிமுகம் கண்ட முஸ்தபிசுர் ரஹ்மான் தற்போது டெஸ்ட் போட்டியில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், முதல் நாளான இன்று டாஸ் வென்ற ஆம்லா தலைமை தென் ஆப்பிரிக்க அணி பேட் செய்து வருகிறது. 59 ஓவர்கள் முடிவில் 173/3 என்று நல்ல நிலையில் இருந்தது.

அப்போது 60வது ஓவரை வீச இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் வந்தார். முஸ்தபிசுர் ரஹ்மானின் 14-வது ஓவர் அது.

ஆம்லா 13 ரன்களில் முஸ்தபிசுர் பந்தை ஆம்லா தனது உடலுக்கு தொலைவில் மட்டையைக் கொண்டு சென்று ஆடினார் அதனால் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸிடம் கேட்ச் ஆனது.

2-வது பந்து ஜே.பி. டுமினி எதிர்கொண்டார். ஃபுல் லெந்த்தில் உள்ளே வந்த பந்து டுமினி கால்காப்பை தாக்கியது. முறையீட்டை நடுவர் மறுக்க, கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் மேல்முறையீடு செய்தார். பந்து மட்டையில் படவில்லை என்பது உறுதியானதோடு, லெக் அண்ட் மிடிலுக்கு நேராக டுமினி வாங்கியது தெரியவந்ததால் அவுட் என்று தீர்மானிக்கப்பட்டார்.

முஸ்தபிசுர் ரஹ்மான் ஹேட்ரிக் வாய்ப்பு பெற்றார். குவிண்டன் டி காக் கடும் நெருக்கடியில் ஸ்டம்புக்கு வந்த பந்தை தடுத்தாடி ஹேட்ரிக்கை முறியடித்தார்.

ஆனால் அடுத்த பந்தே ஆஃப் ஸ்டம்ப் பறந்தது. தடுப்பாட்டத்தில் குவிண்டன் டி காக் தாமதமாக செயல்பட்டதால் ஆஃப் ஸ்டம்ப் பறந்தது.

ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி கலக்கினார் முஸ்தபிசுர் ரஹ்மான்.

முன்னதாக தொடக்க வீரர் வான் சில் 34 ரன்களுக்கு லெக் திசையில் விழுந்து சென்ற பந்துக்கு மஹமுதுல்லாவிடம் அனாவசியமாக விக்கெட்டைக் கொடுத்து வெளியேறினார். டீன் எல்கர் 47 ரன்களுக்கு பொறுமையாக ஆடினார், ஆனால் அவரும் தைஜுல் இஸ்லாம் திரும்பாத, ஆனால் சற்றே எழும்பிய சுழற்பந்தை எட்ஜ் செய்ய அதனை தட்டுத் தடுமாறி விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் பிடித்தார். ஆனால் 2-வது முறையாக அவர் பிடிக்க செய்த முயற்சி பாராட்டுக்குரியது.

டுபிளெஸ்ஸிஸ் 48 ரன்கள் எடுத்து ஷாகிப் பந்தில் எல்.பி.ஆனார். வங்கதேசம் தீவிரமாக ஆடிவருகிறது தென் ஆப்பிரிக்கா பயந்து பயந்து ஆடுகிறது.

தற்போது டெம்பா பவுமா 32 ரன்களுடனும், வெர்னன் பிலாண்டர் 5 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர், இன்று இன்னமும் 24 ஓவர்கள் மீதமுள்ளன. தென் ஆப்பிரிக்கா தாக்குப் பிடிக்குமா என்பதைப் பார்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x