Last Updated : 21 Jul, 2015 09:40 AM

 

Published : 21 Jul 2015 09:40 AM
Last Updated : 21 Jul 2015 09:40 AM

ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக ஆடியிருக்கிறோம்: இந்திய கேப்டன் ரஹானே பெருமிதம்

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் எங்கள் வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள் என இந்திய கேப்டன் அஜிங்க்ய ரஹானே தெரிவித்துள்ளார்.

ரஹானே தலைமையில் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆனால் டி20 தொடரின் 2-வது ஆட்டத்தில் ஜிம்பாப்வேயிடம் தோல்வி கண்ட இந்திய அணி, தொடரை 1-1 என சமனில் முடித்தது.

2-வது ஆட்டம் முடிந்த பிறகு ஹராரேவில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஹானே, இது தொடர்பாக மேலும் கூறியதாவது: இந்தத் தொடரில் எல்லா வீரர்களுமே சிறப்பாக ஆடினார்கள். அம்பட்டி ராயுடு, கேதார் ஜாதவ் ஆகியோர் சதமடித்தனர். நானும், முரளி விஜயும் அரை சதமடித்தோம். எனினும் எங்களுடைய பேட்டிங் இன்னும் வலுப்பெற வேண்டும். ஆரோக்கியமான போட்டி என்பது எப்போதுமே நல்ல விஷயம்தான். அப்படியிருந்தால் ரசித்து விளையாடலாம்.

கடைசி டி20 போட்டியில் ஜிம்பாப்வேயிடம் தோல்வி கண்டது ஏமாற்றமளித்தது. எனினும் எங்கள் வீரர்கள் சிறப்பாக ஆடியிருக்கிறார்கள் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜிம்பாப்வே தொடர் முழுவதும் எங்கள் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். டி20 போட்டியில் எது வேண்டு மானாலும் நடக்கலாம் என்றார்.

2-வது ஆட்டத்தில் வெற்றி கண்ட ஜிம்பாப்வே அதற்கு தகுதியான அணி என்று குறிப்பிட்ட ரஹானே, “ஜிம்பாப்வே அணியிரை பாராட்டியே ஆக வேண்டும். ஏனெனில் அவர்கள் மிகச்சிறப்பாக ஆடியதாக உணர்ந்தேன். இந்தத் தொடர் முழுவதுமே அவர்கள் நன்றாக ஆடினார்கள்.

இன்றைய (நேற்று முன்தினம்) ஆட்டத்தில் அந்த அணியின் பந்துவீச்சும், பீல்டிங்கும் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்தது. அவர்கள் மிகுந்த ஆற்றலோடு ஆடினார்கள். சுழற் பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசினர். அந்த அணியினர் இரு ரன் அவுட்களை செய்ததோடு, சில நல்ல கேட்சுகளையும் பிடித்தனர். அதனால் அவர்கள் பாராட்டுக்குரியவர்கள். அவர்களின் பேட்டிங் நன்றாக இருந்தது என்றால், பவுலிங்கும், பீல்டிங்கும் மிக அற்புதமாக அமைந்தது” என்றார்.

இந்திய அணியின் செயல்பாடு குறித்துப் பேசிய ரஹானே, “நாங்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. முதல் 6 ஓவர்களுக்குப் பிறகும்கூட ஒரு பந்துக்கு ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலைதான் இருந்தது. ஆனால் நாங்கள் சிறப்பாக பேட் செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறோம். கடைசி ஆட்டத்தில் கண்ட தோல்வி ஏமாற்றமளித்தாலும், ஒட்டுமொத்தத்தில் இந்த தொடரில் சிறப்பாக ஆடியதில் மகிழ்ச்சியே” என்றார்.

மூத்த சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்குக்கு ஓய்வளித்தது சரியே எனக்கூறிய ரஹானே, “அவர் அனுபவம் வாய்ந்த பவுலர் மட்டுமல்ல, மேட்ச் வின்னரும்கூட என்பது அனைவருக்குமே தெரியும். எனினும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்க விரும்பினோம். அதனால் ஹர்பஜனுக்கு ஓய்வளித்தோம்” என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x