Published : 17 Jul 2015 03:24 PM
Last Updated : 17 Jul 2015 03:24 PM

டெஸ்ட் வெற்றி தோல்வியை டாஸ் தீர்மானிப்பது வெட்கக் கேடானது: மைக்கேல் வான் கடும் சாடல்

முதல் டெஸ்ட் போட்டியில் கார்டிப்பில் அபார வெற்றி பெற்ற பிறகு இங்கிலாந்து லார்ட்ஸ் பிட்ச் மூலம் பின்னோக்கி அடி எடுத்து வைத்துள்ளது என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான் கடுமையாக சாடியுள்ளார்.

டெலிகிராப் பத்திரிகையில் அவர் எழுதியுள்ள பத்தியில் இது குறித்து கூறியிருப்பதாவது:

“கார்டிப் வெற்றிக்குப் பிறகே, அதனை தக்கவைக்குமாறு பிட்ச் அமைக்கப்படவேண்டும், ஆனால் லார்ட்ஸ் பிட்ச் செத்த பிட்ச் ஆக உள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில் அணிகளின் வெற்றி தோல்வியை டாஸ் தீர்மானிப்பது வெட்கக் கேடானது.

இந்த லார்ட்ஸ் பிட்சில் ஒரு வாரத்துக்கு முன்னதாக புல் இருந்தது. ஆனால் தற்போது புல் வேண்டுமென்றே அகற்றப்பட்டுள்ளது. கார்டிப் வெற்றிக்குப் பிறகே ஆஸ்திரேலியா மிகவும் பலவீனமாக உணர்ந்திருந்தனர், இந்நிலையில் இது போன்ற பிட்சை 2-வது டெஸ்டுக்கு தயாரித்திருப்பது ஆஸ்திரேலிய அணி மீண்டும் இந்தத் தொடரில் ஆதிக்கம் செலுத்த வழிவகுக்கவே செய்யும்.

பிட்சிலிருந்து வேகத்துக்கான கூறுகளை அகற்றி விட்டு டாஸிலும் தோற்றால் என்ன நடக்குமோ அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. டாஸில் தோற்றாலும் இங்கிலாந்து தனது பவுலிங் சிறப்புறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துமாறு பிட்ச் இருப்பது அவசியம். தற்போதைய இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் தாக்குதல் ஆட்டம் ஆடுகின்றனர். இந்நிலையில் வேகத்துக்கு தடை போடும் இத்தகைய பிட்சினால் மிட்செல் ஜான்சன், ஸ்டார்க் ஆகியோருக்கு எதிராக நம் பேட்ஸ்மென்கள் மீதான நம்பிக்கையை குறைவாக எடைபோடுவதாக அமைகிறது.

இப்போது ஆஸ்திரேலியா பெரிய அளவுக்கு முதல் இன்னிங்ஸில் ரன் குவித்தால், இங்கிலாந்துக்கு இரண்டக நிலை ஏற்படும். அடித்து ஆடுவதா, அல்லது விக்கெட்டுகளை பாதுகாப்பதா என்ற இரட்டை மனநிலையில் பேட்ஸ்மென்கள் ஆட வேண்டி வரும்.

பெரிய ஸ்கோர் வந்து விட்டால் கிளார்க் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார். நிச்சயம் கடும் நெருக்கடி கொடுப்பார். இங்கிலாந்தின் பெரிய தலைவலி ராஜர்ஸ், அவரை வீழ்த்த இன்னமும் உத்திகளை இங்கிலாந்து கண்டுபிடிக்கவில்லை. மொயீன் அலிக்கும் அனுபவம் போதாது. இந்த நிலையில் டிரா செய்ய இங்கிலாந்துக்கு பெரிய மனோபலம் தேவைப்படும். இன்னும் 4 நாட்கள் இங்கிலாந்துக்கு பெரும் நெருக்கடிதான்” இவ்வாறு கூறியுள்ளார் மைக்கேல் வான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x