Last Updated : 03 Jul, 2015 08:05 PM

 

Published : 03 Jul 2015 08:05 PM
Last Updated : 03 Jul 2015 08:05 PM

பெர்த்தில் ஜஸ்டின் லாங்கர், ஜெஃப் மார்ஷிடம் கவுதம் கம்பீர் தீவிர பயிற்சி

இந்திய அணியில் மீண்டும் நுழைய தீவிரமாக முயற்சி எடுத்துவரும் கவுதம் கம்பீர், இதற்காக, ஆஸ்திரேலியா சென்று ஜஸ்டின் லாங்கர், மற்றும் ஜெஃப் மார்ஷ் மேற்பார்வையில் பயிற்சியில் ஈடுபட்டார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் இட்டுள்ள பதிவில், “பெர்த்தில் ஜெஃப் மார்ஷ், மற்றும் லாங்கருடன். மிகச்சிறந்த மனிதர்கள், என்னை வரவேற்றனர். பயிற்சிக்காக நான் இங்கு இருக்கக் காரணமான இருவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்போது ஜஸ்டின் லாங்கர், ஜெஃப் மார்ஷ் மேற்பார்வையில் அவர் தனது பயிற்சி முறைகளில் ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் கலப்பு போர்க்கலைகளை சேர்த்துள்ளார்.

56 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய கம்பீர் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளை ஹெடிங்லே மற்றும் ஓவலில் ஆடினார். பிராட், ஜிம்மி ஆண்டர்சன் ஸ்விங்குக்கு இவர் உடல்தான் ஸ்விங் ஆனதே தவிர மட்டை வெறுமனே தொங்கியது. பந்துகள் அதனை தடவிச் சென்று கொண்டிருந்தன.

இந்நிலையில் பெர்த்தில் வலைப்பயிற்சியில் மார்ஷ், லாங்கர் ஆகியோரது வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்.

பயிற்சியில் ஜிம்னாஸ்டிக்ஸை சேர்த்துள்ளதால் அவரது கால்நகர்வுகள் இன்னும் விரைவாக மாறும் வாய்ப்புள்ளது, போர்க்கலைகளை கற்பதால் ரிப்ளெக்ஸ் துரிதமாகும் வாய்ப்புள்ளது.

டென்னிஸ் வீரர்கள் போல் தனக்கென்ற பயிற்சியாளர்களை வைத்துக் கொள்ளும் மோஸ்தர் இந்திய வீரர்களையும் தொற்றிக் கொண்டுள்ளது, ராபின் உத்தப்பாவுக்கு ஒரு பிரவீண் ஆம்ரே போல் கம்பீர் தற்போது தனது மானசீக குருவான ஜஸ்டின் லாங்கரிடம் பயிற்சி பெறுகிறார். லாங்கர் இன்றைய கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த பேட்டிங் பயிற்சியாளராக அறியப்படுபவர்.

தற்போது 33 வயதாகும் கம்பீருக்கு அக்டோபரில் 34 வயது பூர்த்தியடைகிறது. மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பிருந்தால் ஒரு 3 ஆண்டுகள் நன்றாக ஆட வாய்ப்பிருக்கிறது. 3-ம் நிலையில் களமிறங்கலாம், அல்லது முன்பு லஷ்மண் களமிறங்கிய அதே நிலையில் களமிறங்கி டெய்ல் எண்டர்களை வைத்துக் கொண்டு சுதந்திரமாக பங்களிப்புகள் செய்யலாம், வாய்ப்பிருக்கிறது... அதனால்தான் அவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்று எண்ணத் தோன்றுகிறது.

இதுவரை 56 டெஸ்ட் போட்டிகளில் 4046 ரன்களை 42.58 என்ற சராசரியில் பெற்றுள்ளார் கம்பீர். 9 சதங்கள், 21அரைசதங்கள் இதில் அடங்கும், 147 ஒருநாள் போட்டிகளில் 5238 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 11 சதங்களும், 34 அரைசதங்களும் அடங்கும். டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருமுறை 206 ரன்கள் விளாசியதே அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர். ஒருநாள் போட்டிகளில் 150 நாட் அவுட் அதிகபட்ச ஸ்கோர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x