

கோப்புப்படம்
புதுடெல்லி: 20-வது ஆசிய விளையாட்டு போட்டி வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை ஜப்பானில் உள்ள ஐச்சி-நாகோயா நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடரில் 492 வீரர், வீராங்கனைகள் அடங்கிய குழு கலந்துகொள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.
இதில் 265 வீரர்களும், 227 வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக தடகளத்தில் 73 பேர் இடம் பெற்றுள்ளனர். ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா, நீளம் தாண்டுதல் வீரர் முரளி சங்கர், நீண்ட தூர ஓட்டப் பந்தய வீரர் குல்வீர் சிங், டெகத்லான் வீரர் தேஜஸ்வின் சங்கர், 100 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்ட வீராங்கனை ஜோதி யாராஜி ஆகியோர் முதன்மை வீரர்களாக களம் காண்கின்றனர்.
20 பேரை உள்ளடக்கிய பாட்மிண்டன் அணியில் பி.வி.சிந்து, ஆயுஷ் ஷெட்டி, லக் ஷ்யா சென் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர். சமீபத்தில் காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹெய்ன் (75 கிலோ), நரேந்தர் பெர்வால் (+90 கிலோ), ஜது மணி சிங் (55 கிலோ) உட்பட 11 வீரர்கள் குத்துச்சண்டை பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.