

புதுடெல்லி: பாஜகவின் தேசிய நிர்வாகக் குழு அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாஜகவின் புதிய தேசிய நிர்வாகக் குழுவின் உயர்நிலைக் கூட்டம், கட்சித் தலைவர் நிதின் நவீன் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் ஜென் ஸீ தலைமுறையினரை கவர்வதற்காக பிரசாரக் குழு அமைக்கப்பட்டது.
பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் தலைமையிலான இந்த குழுவில் ஸ்மிருதி இரானி, வினோத் தாவ்டே, ஹர்ஷ் சங்வி, ஓ.பி. சவுத்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் வந்தே மாதரம் தேசிய பாடல் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் இரு சரணங்கள் மட்டுமே பாடப்படும் என்று அந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த முடிவை பாஜக மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
கடந்த 1937-ம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் இதே முடிவு எடுக்கப்பட்டது. இதுவே இரு நாடுகள் கொள்கைக்கு வித்திட்டது. தேசத்தந்தை காந்தியடிகள், வந்தே மாதரம் பாடல் முழுமையாகப் பாடப்படுவதை ஆதரித்தார். ஆனால் இதற்கு முகமது அலி ஜின்னா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, வந்தே மாதரம் பாடலின் கவுரவத்தைக் காக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு (திருத்த) சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. இதன்மூலம் வந்தே மாதரம் தேசிய பாடலுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
கடந்த சுதந்திர தின விழாவின்போது செங்கோட்டையில் வந்தே மாதரம் தேசிய பாடல் முழுமையாகப் பாடப்பட்டது. ஆனால் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சோனியா காந்தி தேசிய பாடலை அவமதித்தார். வாக்கு வங்கி அரசியலை முன்னிறுத்தி சோனியாவும் ராகுல் காந்தியும் செயல்படுகின்றனர்.
பாஜகவைப் பொறுத்தவரை வந்தே மாதரம் தேசிய பாடலின் கவுரவத்தைக் காப்போம். அதன் பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாப்போம். இதுதொடர்பாக தேசிய அளவில் பிரம்மாண்ட பிரச்சாரத்தை மேற்கொள்வோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை பாஜகவின் புதிய நிர்வாகிகளை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.