Published : 04 Jun 2015 09:42 PM
Last Updated : 04 Jun 2015 09:42 PM

ஆஸ்திரேலிய விக்கெட்டுகள் சரிவு: தேவேந்திர பிஷூ லெக்ஸ்பின்னில் திணறல்

டொமினிகா, விண்ட்சர் பார்க்கில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று ஆஸ்திரேலியா உணவு இடைவேளை வரை தன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 153 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

நேற்று முதல் நாள் ஆட்டத்தில் அனுபவமற்ற மே.இ.தீவுகள் அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்து 148 ரன்களுக்குச் சுருண்டது. மிட்செல் ஜான்சன், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும், நேதன் லயன், ஸ்டீவ் ஸ்மித் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து நேற்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங், மே.இ.தீவுகளின் துல்லியமான பந்துவீச்சுக்கு முன்பாக திணறத் தொடங்கியது, வார்னர் 8 ரன்னிலும், மார்ஷ் 19 ரன்னிலும், கிளார்க் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர், ஆஸ்திரேலியா 85/3 என்று நேற்று ஆட்டத்தை முடித்தது.

இதனையடுத்து வியாழக்கிழமையான இன்று 2-ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலியா தேவேந்திர பிஷூ-வின் அபாரமான லெஸ் ஸ்பின் பந்து வீச்சுக்கு ஸ்மித், வாட்சன், ஹேடின் ஆகியோர் விக்கெட்டுகளை பறிகொடுத்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

சுமார் 90 பந்துகளில் 1 பவுண்டரியுடன் திணறலான 25 ரன்களை எடுத்த ஸ்மித் இன்று காலை பிஷூவின் பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்றார். ஆனால் பிஷூ அருமையாக அவரை தன் ஃபிளைட்டில் ஏமாற்ற, பந்து சிக்கவில்லை, ராம்தின் ஸ்டம்ப்டு செய்தார்.

2 ஓவர்களுக்குப் பிறகு 11 ரன்கள் எடுத்திருந்த ஷேன் வாட்சனை தனது அருமையான பிளைட் மூலம் முன்னால் வந்து ஆடச்செய்த பிஷூ பந்தை வெளிப்புறமாகத் திருப்ப டிரைவ் ஆடி எட்ஜ் செய்தார் வாட்சன், அங்கு ஜேசன் ஹோல்டர் அருமையான தாழ்வான கேட்ச் ஒன்றை அள்ளினார்.

விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஒரு லெக்ஸ்பின்னருக்கான கனவுப்பந்தை வீசினார் பிஷூ, அதாவது மிடில்-லெக் ஸ்டம்ப் திசையில் பிட்ச் ஆகி லெக்ஸ்பின்னாகி ஹேடின் மட்டையைக் கடந்து சென்று ஆஃப் ஸ்டம்பின் மேற்புறத்தைத் தாக்கியது. விளையாட முடியாத பந்தாகும் இது.

அவர் கிரீசில் நிற்காமல் மேலேறி வந்திருந்தால் ஓரளவுக்காவது சமாளித்திருக்கலாம். ஆனால் ஹேடின் கிரீஸில் தேங்கிவிட்டார்.

ஒரு முனையில் ஆடம் வோஜஸ் தற்போது 45 ரன்களுடன் போராட, ஜான்சன் 14 ரன்களுடன் அவருடன் இருக்கிறார். ஆஸ்திரேலியா சற்று முன் வரை 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது.

தேவேந்திர பிஷூ 20 ஓவர்கள் 4 மைடன்களுடன் 59 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x