Published : 29 Jun 2015 02:03 PM
Last Updated : 29 Jun 2015 02:03 PM

ஜிம்பாப்வே தொடரில் ரஹானே தலைமையில் ஆச்சரிய அணி

ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகியவற்றில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு அஜிங்க்ய ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கேப்டன் மகேந்திர சிங், டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, அஸ்வின், ஷிகர் தவன், உமேஷ் யாதவ் ஆகிய 7 பேருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் கூறுகையில், “வீரர்கள் தங்களுக்கு ஓய்வு வேண்டும் என்று கேட்காத பட்சத்தில் நாங்கள் ஓய்வு கொடுக் கமாட்டோம். அதனால் வங்கதேச தொடருக்கு முழுபலம் கொண்ட அணியை அனுப்பினோம். ஆனால் இந்த முறை சில வீரர்கள் தங்ளுக்கு ஓய்வு வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்படி அவர்களுக்கு ஓய்வளிக்கப் பட்டுள்ளது” என்றார்.

ஜடேஜா நீக்கம்

அதேநேரத்தில் தொடர்ந்து சொதப்பி வந்த ரவீந்திர ஜடேஜா வின் பெயர் 15 பேர் கொண்ட அணியிலும் இல்லை. ஓய்வளிக் கப்பட்ட வீரர்கள் பட்டியலிலும் இல்லை. அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் தெரிவித் துள்ளார். உலகக் கோப்பை தொடங்கி கடைசி 10 ஆட்டங்களில் 10 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கும் ஜடேஜா, 108 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

ஜிம்பாப்வே தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியில் ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பர் யாரும் இடம்பெறவில்லை. அதேநேரத்தில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக ராபின் உத்தப்பா, கேதார் ஜாதவ், அம்பட்டி ராயுடு ஆகிய 3 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் உத்தப்பா ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மணீஷ் பாண்டே, மனோஜ் திவாரி ஆகியோரும் 15 பேர் கொண்ட அணியில் இடம்பிடித்துள்ளனர். இவர்களில் பாண்டே, விஜய் ஹசாரே டிராபியில் அதிக ரன் குவித்தவர் ஆவார். இந்திய டெஸ்ட் அணியின் ஸ்பெஷலிஸ்ட் தொடக்க வீரரான முரளி விஜய், ரஹானேவுடன் தொடக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற வங்கதேசதத்துக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்ற மூத்த சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், ஜிம்பாப்வே தொடரில் இடம்பிடித்துள்ளார். அவர் ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் விளை யாடும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். வங்கதேசத் தொடரில் விளை யாடிய அக் ஷர் படேலுடன் 3-வது சுழற்பந்து வீச்சாளராக கரண் சர்மா இடம்பெற்றுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரையில் தவல் குல்கர்னி, ஸ்டூவர்ட் பின்னி, புவனேஸ்வர் குமார், மோஹித் சர்மா ஆகியோர் தங்களின் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். பஞ்சாப்பைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா புதிதாக அணியில் இடம்பிடித்துள்ளார். சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவம் இல்லாதவரான சந்தீப் சர்மா, விஜய் ஹசாரே போட்டியில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர்கள் வரிசையில் 2-வது இடத்தைப் பிடித்திருந்தார். இந்தியா-ஜிம்பாப்வே தொடர் வரும் 10-ம் தேதி ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் தொடங்குகிறது.

இந்திய ஏ அணி மற்றும் ஆஸ்திரேலிய ஏ அணிகள் இடையே 2 நான்கு நாள் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்திய ஏ அணிக்கு சேதேஷ்வர் புஜாரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் போட்டி வரும் 22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரையிலும், 2-வது போட்டி ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரையிலும் சென்னையில் நடைபெற வுள்ளன.

இந்திய அணி:

அஜிங்க்ய ரஹானே (கேப்டன்), முரளி விஜய், அம்பட்டி ராயுடு, மனோஜ் திவாரி, கேதார் ஜாதவ், ராபின் உத்தப்பா, மணீஷ் பாண்டே, ஹர்பஜன் சிங், அக் ஷர் படேல், கரண் சர்மா, தவல் குல்கர்னி, ஸ்டூவர்ட் பின்னி, புவனேஸ்வர் குமார், மோஹித் சர்மா, சந்தீப் சர்மா.

இந்திய ஏ அணி:

கே.எல்.ராகுல், அபினவ் முகுந்த், சேதேஷ்வர் புஜாரா (கேப்டன்), கருண் நாயர், ஷ்ரேயாஸ் ஐயர், நமன் ஓஜா, விஜய் சங்கர், அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா, ஷர்துல் தாக்குர், வருண் ஆரோன், அபிமன்யூ மிதுன், உமேஷ் யாதவ், ஷ்ரேயாஸ் கோபால், அபராஜித்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x