Published : 12 Jun 2015 04:37 PM
Last Updated : 12 Jun 2015 04:37 PM

ரஹானேயின் தன்னலமற்ற ஆட்டம்: 3-ம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 462/6

பாதுல்லாவில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட போது இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 462 ரன்கள் எடுத்துள்ளது.

தேநீர் இடைவேளையின் போது கனமழை பெய்யத் தொடங்கியதை அடுத்து 103.3 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் ஆட்டம் மழையால் இன்று முடித்து கொள்ளப்படுவதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது. அஸ்வின் 2 ரன்களுடனும், ஹர்பஜன் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஷாகிப் அல் ஹசன் 24.3 ஓவர்களில் 105 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை அதிகபட்சமாகக் கைப்பற்றினார்.

இன்று 47.3 ஓவர்களே ஆட்டம் நடைபெற்றது. இந்திய-வங்கதேச டெஸ்ட் போட்டியா அல்லது இந்தியா, வங்கதேச அணிகளின் மழைக்கு எதிரான டெஸ்ட் போட்டியா என்ற கேள்வி எழுகிறது.

லெக் ஸ்பின்னர் ஜுபைர் ஹுசைன் விராட் கோலி, மற்றும் விருத்திமான் சஹா ஆகியோரை நல்ல பந்தில் வீழ்த்தினார். மற்றபடி அந்த அணியின் பந்து வீச்சில் ஒன்றுமில்லை.

இன்று காலை 239/0 என்று தொடங்கிய இந்திய அணி முன்னதாக டிக்ளேர் செய்யும் நோக்கத்துடன் அதிரடி முறையைக் கையாண்டது. முரளி விஜய் தனது 3-வது டெஸ்ட் 150 ரன்களை எடுத்தார். ஆனால் அஜிங்கிய ரஹானேயின் தன்னலமற்ற இன்னிங்ஸ் இன்று ‘டிரெண்ட்’ ஆகிக் கொண்டிருக்கிறது. அவர் 103 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 98 ரன்களில் ஷாட் அடிக்கப் போய் அவுட் ஆனார்.

தாக்குதல் ஆட்டம் ஆட முடிவெடுத்ததால் விக்கெட்டுகள் கொத்தாக விழுந்தன, முதலில் ஷிகர் தவண், ரோஹித் சர்மா, விராட் கோலி, அடுத்ததாக விஜய், சஹா, ரஹானே ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

மீண்டும் ஷாகிப் உல் ஹசன் தாமதமாகவே அழைக்கப்பட்டார். அவர் வந்தவுடனேயே ஷிகர் தவன் விரைவு ரன்களை எடுக்க முயன்றதால் சில மிஸ்-ஹிட்கள் ஏற்பட்டது. இப்படியாக 3-வது மிஸ் ஹிட் முன்புற விளிம்பில் பட்டு பவுலர் ஷாகிப் உல் ஹசனிடமே கேட்ச் ஆனது. தவண் 195 பந்துகளில் 23 பவுண்டரிகளுடன் 173 ரன்களுக்கு அவுட் ஆனார்.

ரோஹித் சர்மா இறங்கி ஒரு பவுண்டரி அடித்து 6 ரன்களில் இருந்த போது விரைவு ரன் குவிப்புக்கான பரிந்துரை நிலவியதால், ஷாட்டிற்குச் சென்றார்.

ஷாகிப் உல் ஹசன் ஒரு பந்தை உள்ளே திருப்ப ஒரு பெரிய கவர் டிரைவுக்குச் சென்ற ரோஹித் சர்மா மட்டைக்கும், பேடிற்கும் இடையே பந்தை புக அனுமதிக்க பவுல்டு ஆனார். ஒன்று ஷார்ட் தேர்வில் தவறு, மற்றொன்று அதனை அடித்த முறையும் தவறு. ஒரு அனுபவ வீரர் இப்படி அவுட் ஆகியிருக்க கூடாது.

கோலியுன் விரைவு ரன்களுக்காகவே ஆடினார். 14 ரன்களில் 2 பவுண்டரிகளுடன் ஆடி வந்த போது ஜுபைர் ஹுசைனின் கூக்ளியை கணிக்கவில்லை. மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார்.

ரஹானேவை ஜுபைர் ஹுசைன் பீட் செய்தார். நெருக்கமான ஒரு எல்.பி.முறையீடும் எழுந்தது. மீண்டும் ஒரு பந்தில் பீட்டன் ஆனார் ரஹானே. அதன் பிறகு தளர்வான பந்து வீச்சை ரஹானே விளாசினார்.

முரளி விஜய் தனது ஆஸ்திரேலியா ஃபார்மை அப்படியே தொடர்ந்து 201 பந்துகளில் 10 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் சதம் எடுத்தார். ரஹானே 6 பவுண்டரிகளுடன் 64 பந்துகளில் அரைசதம் எடுக்க உணவு இடைவேளையின் போது இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 398 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 144 ரன்களுடனும் ரஹானே 55 ரன்களுடனும் உணவு இடைவேளைக்குச் சென்றனர்.

150 ரன்களை எட்டிய முரளி விஜய் ஒரு மிகப்பெரிய ஸ்வீப் செய்து பந்தை விட்டார் எல்.பி என்று தீர்ப்பளிக்கப்பட்டது, ஆனால் பந்து லைனில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 90 ரன்களில் வந்த போதும் ரஹானே தன்னலமற்று ஆடி இரண்டு பவுண்டரிகளை அடித்து 98 ரன்களில் வந்தார்.

100 நிச்சயம் என்று எதிர்பார்த்த நிலையில் ஷாகிப் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆட முயன்று பவுல்டு ஆனார். முன்னதாக சஹா 6 ரன்னில் ஜுபைரின் அருமையான கூக்ளிக்கு பவுல்டு ஆனார்.

462/6 என்ற நிலையில் மழை குறுக்கிட்டது, ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. நாளை 4-ம் நாள். இந்தியா 500 ரன்கள் எடுக்குமா அல்லது அதற்கு முன்னரே கோலி டிக்ளேர் செய்வாரா என்பதைப் பார்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x