Published : 22 Jun 2015 10:14 AM
Last Updated : 22 Jun 2015 10:14 AM

முஸ்தபிஸுரிடம் மூழ்கியது இந்திய அணி: தொடரை வென்றது வங்கதேசம்

முஸ்தபிஸுர் ரஹ்மானின் விக்கெட் மழையில் மூழ்கிய இந்தியாவை வீழ்த்தி, ஒருநாள் போட்டித் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்கதேசம் வென்றது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ரஹானேவுக்குப் பதிலாக அம்பட்டி ராயுடு சேர்க்கப்பட்டார். கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கிய உமேஷ் யாதவ், மோஹித் சர்மா ஆகியோருக்குப் பதிலாக தவல் குல்கர்னி, அக் ஷர் படேல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோஹித் சர்மாவும், ஷிகர் தவனும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை வீசிய முஸ்தபிஸுர் ரஹ்மான், 2-வது பந்தில் ரோஹித் சர்மாவை (0) வீழ்த்தி இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்தார்.

இதையடுத்து ஷிகர் தவனுடன் இணைந்தார் விராட் கோலி. இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 12.1 ஓவர்களில் 74 ரன்கள் சேர்த்தது. கோலி 27 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் தோனி களம்புகுந்தார். மறுமுனையில் பந்துகளை வீணடிக்காமல் விளையாடிய தவன் 54 பந்துகளில் அரைசதம் கண்டார்.

இந்தியா 109 ரன்களை எட்டியபோது தவன் 53 ரன்களில் (60 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன்) ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த அம்பட்டி ராயுடு டக் அவுட்டாக, தோனியுடன் இணைந்தார் ரெய்னா. 5-வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை முஸ்தபிஸுர் ரஹ்மான் பிரித்தார். 55 பந்துகளைச் சந்தித்த ரெய்னா 34 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதன்பிறகு முழுமையாக ஆதிக்கம் செலுத்திய முஸ்தபிஸுர் ரஹ்மான், 40-வது ஓவரில் தோனி (75 பந்துகளில் 47 ரன்கள்), அக்ஷர் படேல் (0) ஆகியோரை வீழ்த்தினார். பின்னர் வந்த அஸ்வின் 4 ரன்கள் எடுத்த நிலையில் முஸ்தபிஸுர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதையடுத்து ஜடேஜாவுடன் இணைந்தார் புவனேஸ்வர் குமார். இந்தியா 43.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்திருந்தபோது பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது ஜடேஜா 19 ரன்களுடனும், புவனேஸ்வர் குமார் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது 47 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. ஆனால் அடுத்த 7 பந்துகளில் இரு விக்கெட்டுகளை இழந்த இந்தியா 200 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஜடேஜா 19 ரன்களிலும், புவனேஸ்வர் குமார் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஆட்டத்தில் குறுக்கிட்ட மழை காரணமாக, டக்வொர்த் லீவிஸ் விதிப்படி வங்கதேச அணிக்கு 47 ஓவர்களில் 200 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த அணி பேட் செய்ய ஆரம்பித்தது.

துவக்க ஆட்டக்காரர்களான தமீம் இக்பால் 13 ரன்களும், சர்க்கார் 34 ரன்களும் சேர்த்தனர். லிட்டன் தாஸ் 36 ரன்களும், முஸ்தபிஸுர் ரஹ்மான் 31 ரன்களும் எடுத்தனர். ஹசன் ஆட்டமிழக்காமல் 51 ரன்களும், சபீர் ரஹ்மான் ஆட்டமிழக்காமல் 22 ரன்களும் சேர்த்து வெற்றி இலக்கை எளிதில் எட்ட வழிவகுத்தனர். 38 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எளிதில் எட்டியது வங்கதேசம்.

இதன்மூலம், இந்தியாவுக்கு மொத்தம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் அசத்தலாக கைப்பற்றியது வங்கதேச அணி.

முஸ்தபிஸுர் சிறப்பிடம்

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமான முஸ்தபிஸுர் ரஹ்மான், அந்த ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், 2-வது ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தியுள்ளார்.

இதன்மூலம் முதல் இரு போட்டிகளில் 5 விக்கெட்டுகளை சாய்த்த 2-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முதல் வீரர் ஜிம்பாப்வேயின் பிரையன் விட்டோரி ஆவார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x