Published : 10 Jun 2015 04:00 PM
Last Updated : 10 Jun 2015 04:00 PM

அதிரடி தவன் 150*, நிதான முரளி 89*: மழை குறுக்கிட்ட முதல் நாளில் இந்திய அணி ஆதிக்கம்

வங்கதேசத்துக்கு எதிராக ஃபதுல்லாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 239 ரன்களைக் குவித்தது. ஷிகர் தவன் 150 ரன்களுடனும், முரளி விஜய் 89 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்திய - வங்கதேச அணிகள் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தின் ஃபதுல்லா நகரில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்து ஆடிய இந்தியா, ஆரம்பத்திலிருந்தே நிலையானதும் அதிரடியானதுமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

துவக்க வீரர்கள் தவன், விஜய் இருவரும் சரியான இணையாக நிலைத்து நின்றனர். தவன் வேகமாக ரன் சேர்க்க, விஜய் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஷிகர் தவன் 158 பந்துகளில் 150 ரன்கள் விளாசினார். முரளி விஜய் 178 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்துள்ளார்.

உணவு இடைவேளைக்கு முன்பாகவே மழையால் தடைபட்ட ஆட்டம், 3 மணி அளவில்தான் மீண்டும் தொடர்ந்தது. அப்போதும் இந்திய அணியின் வேகம் தடைபடாமல் தொடர்ந்தது.

கடைசி வரை துவக்க வீரர்கள் இருவரையும் களத்தை விட்டு வெளியேற்ற முடியாமல் வங்கதேச பந்துவீச்சாளர்கள் தடுமாறினர்.

இன்றைய ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 239 ரன்களைக் குவித்து விக்கெட் இழப்பின்றி இருந்தது. முரளி விஜய்க்கு சாதகமாக முடிந்த சில லெக் பிஃபோர் முடிவுகள் சந்தேகத்தை ஏற்படுத்தினாலும், மற்றபடி இந்திய அணியே இன்று களத்தில் ஆதிக்கம் செலுத்தியது.

நாளைய போட்டியில் அதிக ரன்களைக் குவிக்கும் பட்சத்தில், வங்கதேசத்தை நெருக்க இந்திய அணிக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

கோலி தலைமை

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கேப்டன் தோனி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணி யின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டார். எனினும் முழு நேர கேப்டனாக கோலி களமிறங்கும் முதல் போட்டி இதுதான்.

அதனால், அவருடைய கேப்டன் ஷிப் திறமையை சோதனை செய்யும் போட்டியாக இது பார்க்கப்படுகிறது. கோலி வெற்றிகரமான பேட்ஸ்மேனாக பரிணமித்திருந்தாலும், அவர் கேப்டனாக இந்திய அணியை எப்படி வழிநடத்தப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டெஸ்ட் போட்டியில் தோனி இல்லாமல் இந்திய அணி எப்படி விளையாடப் போகிறது என்பதை சோதிக்கும் போட்டியாகவும் இது பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் இந்திய அணிக்கு சாதகமாகவே இருந்தது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x