Published : 24 May 2014 10:00 AM
Last Updated : 24 May 2014 10:00 AM

சென்னை லீக்: ரயில்வேயிடம் ஏஜிஓ அதிர்ச்சி தோல்வி - சாம்பியன் பட்ட வாய்ப்புக்கு பின்னடைவு

சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் ரயில்வே அணி 2-1 என்ற கோல் கணக்கில் தலைமைக் கணக்காளர் அலுவலக மனமகிழ் மன்ற (ஏஜிஓஆர்சி) அணியைத் தோற்கடித்தது. சாம்பியன் பட்டம் வெல்லக்கூடிய அணிகளுள் ஒன்றாகக் கருதப்பட்ட ஏஜிஓ அணிக்கு இந்த தோல்வி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ரயில்வே அபாரம்

சென்னை நேரு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரயில்வே அணி புதிய ஸ்டிரைக்கர் ஹர்ஷீத், புதிய வலது பின்கள வீரர் முகமது ஃபாசில் ஆகியோரின் வருகையால் மிகப்பெரிய பலம் பெற்றது. அந்த அணியின் ‘ரைட் விங்கர்’ சிராஜுதீன், மற்றொரு ஸ்டிரைக்கர் ரிஜு ஆகியோர் அபாரமாக ஆட, 13-வது நிமிடத்திலேயே ரயில்வே கோலடித்தது. சிராஜுதீன் இந்த கோலை அடித்தார்.

தொடர்ந்து அபாரமாக ஆடிய சிராஜுதீன், மிட்பீல்டில் இருந்து ரிஜுவுக்கு பந்தை கடத்த, அதை வாங்கிய ரிஜு மிக எளிதாக முன்னோக்கி பந்தைக் கொண்டு சென்றார். அப்போது அதைத்தடுப்பதற்காக ஏஜிஓ கோல் கீப்பர் அலெக்சாண்டர் முன்னேறினார். ஆனால் மிக சாதுர்யமாக செயல்பட்ட ரிஜு, பந்தை நிறுத்தி, அலெக்சாண்டரை தடுமாறவைத்து, கோல் கம்பத்தின் மிக அருகில் நின்ற மற்றொரு ஸ்டிரைக்கர் ஹர்ஷீத்துக்கு ‘பாஸ்’ செய்தார். அதில் அவர் எளிதாக கோலடிக்க, 30-வது நிமிடத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது ரயில்வே.

சிராஜுதீன் கலக்கல்

ரயில்வே அணியில் ரிஜு, சிராஜுதீன் ஆகியோர் தொடர்ந்து அபாரமாக ஆடினர். சிராஜுதீன் தொடர்ந்து கோல் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டேயிருக்க, அவை நூலிழையில் நழுவின. இதனிடையே ஏஜிஓ ‘லெப்ட் விங்கர்’ வினோத் குமார், கார்னர் கிக் மூலம் கொடுத்த நல்ல ‘கிராஸை’ விக்ரம் பாட்டீல் வீணடித்தார். 44-வது நிமிடத்தில் ஏஜிஓ அணியின் வலது பின்கள வீரர் ஜோபினிடம் பந்து செல்ல, அற்புதமாகக் கோலடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் ரயில்வே 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் சிராஜுதீன் ஆதிக்கம் செலுத்தினார். அந்த அணியின் ஸ்டிரைக்கர் ஹர்ஷீத்தின் ஆட்டம் ரசிகர்களை கவர்ந்தது. கடகடவென பந்தை மாற்றிமாற்றி கடத்தி ஏஜிஓ வீரர்களை திணறடித்தார். ஏஜிஓ அணியின் ஜோபின் கொடுத்த ‘கிராஸை’ ஸ்டிரைக்கர் ரீகன் கோலாக்குவார் என எதிர்பார்க்கப்பட்டபோது, அவர் தடுமாறி கீழே விழ ஏமாற்றத்தில் முடிந்தது.

2-வது பாதியில் கோல் இல்லை

இதன்பிறகு சிராஜுதீன் அடுத்தடுத்து இரு கோல் வாய்ப்புகளை உருவாக்கினார். இதில் 2-வது வாய்ப்பில் அவர் அற்புதமாக பந்தை ‘கிராஸ்’ செய்த நிலையில், ஸ்டிரைக்கர் ஹர்ஷீத் விரைவாக முன்னேறி வராததால் கோல் நழுவியது. கடைசிக் கட்டத்தில் ரிஜு கொடுத்த நல்ல ‘பாஸில்’ எளிதாக கோலடிக்க வேண்டிய நிலையில், சிராஜுதீன் வேகமாக உதைத்து பந்தை வெளியில் அடித்தார். 2-வது பாதி ஆட்டம் கோலின்றி முடிய, ரயில்வே 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

சிராஜுதீன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் ரயில்வே அணி 8 ஆட்டங்களில் விளையாடி 14 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில் இந்த சீசனில் முதல் தோல்வியை சந்தித்துள்ள ஏஜிஓ அணி பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஏஜிஓ 14 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ள நடப்பு சாம்பியன் ஏரோஸ், அடுத்த 5 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெறும்பட்சத்தில் மீண்டும் சாம்பியனாகிவிடும்.

முன்னதாக நடைபெற்ற முதல் டிவிசன் லீக் போட்டியில் சேலஞ்சர்ஸ் யூனியன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் சென்னை எப்.சி. அணியைத் தோற்கடித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x