Last Updated : 13 May, 2015 09:45 AM

 

Published : 13 May 2015 09:45 AM
Last Updated : 13 May 2015 09:45 AM

2-வது இடத்துக்கு முன்னேறுவதில் பெங்களூர் தீவிரம்: பஞ்சாப்புடன் இன்று மோதல்

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதுகின்றன.

பிளே ஆப் சுற்று வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொள்வதில் தீவிரம் காட்டி வரும் பெங்களூர் அணி, இந்த ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி உள்ள பெங்களூர் அணி 6 வெற்றிகளைப் பெற்று 13 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தும்பட்சத்தில் 15 புள்ளிகளை எட்டும் பெங்களூர் அணி, ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தாவை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்தைப் பிடிக்கும்.

ஆனால் பஞ்சாப் அணியோ 12 ஆட்டங்களில் விளையாடி அதில் 10 ஆட்டங்களில் தோற்றிருப்பதோடு, பிளே ஆப் வாய்ப்பையும் இழந்துவிட்டது. அதேநேரத்தில் பெங்களூரில் நடந்த ஆட்டத்தில் 138 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க பஞ்சாப் முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்மூர்த்திகள்

பெங்களூர் அணி ஏற்கெனவே பஞ்சாப்பை பந்தாடியுள்ளதால் இந்த ஆட்டத்தை மிகுந்த நம்பிக்கை யோடு எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த அணி யின் மும்மூர்த்திகளான கிறிஸ் கெயில், கேப்டன் விராட் கோலி, ஏ.பி.டிவில்லியர்ஸ் ஆகியோர் ருத்ரதாண்டவம் ஆடி வருகின்றனர்.

அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் டிவில்லியர்ஸ் (436 ரன்கள்) 3-வது இடத்திலும், விராட் கோலி (417) 5-வது இடத்திலும் உள்ளனர். கெயில் 370 ரன்களுடன் 7-வது இடத்தில் உள்ளார். இந்த மூவரில் யார் நின்றாலும் பஞ்சாப்பின் பாடு சிக்கல்தான். பஞ்சாப்புக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் சதமடித்த கெயில் இந்த முறையும் அசத்தலான ஓர் இன்னிங்ஸை ஆட முயற்சிப்பார் என நம்பலாம். மும்பைக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் சதமடித்த டிவில்லியர்ஸின் அதிரடி இன்றைய ஆட்டத்திலும் தொடரலாம். மிடில் ஆர்டரில் மன்தீப் சிங், தினேஷ் கார்த்திக், சர்ஃப்ராஸ் கான், டேவிட் வியெஸ் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

மிரட்டும் மிட்செல்

வேகப்பந்து வீச்சைப் பொறுத்த வரையில் மிட்செல் ஸ்டார்க் தலை மையிலான கூட்டணி, பஞ்சாப் பேட்ஸ்மேன்களுக்கு நெருக் கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க் கப்படுகிறது. இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஸ்டார்க் 16 விக்கெட்டுகளுடன் இந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டு களை வீழ்த்தியவர்கள் வரிசையில் 4-வது இடத்தில் உள்ளார். அரவிந்த், டேவிட் வியெஸ், ஹர்ஷல் படேல் ஆகியோரும் ஸ்டார்க்குக்கு பக்கபலமாக பந்துவீசி வருகின்றனர்.

சுழற்பந்து வீச்சைப் பொறுத்த வரையில் யுவேந்திர சாஹலையே நம்பியுள்ளது பெங்களூர். இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 15 விக்கெட்டுகளை வீழத்தியுள்ளார்.

மில்லர் ஆறுதல்

கடந்த முறை இறுதிச்சுற்று வரை முன்னேறிய பஞ்சாப் அணி, இந்த முறை பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்திருக்கிறது. தொடர்ச்சியாக 7 ஆட்டங்களில் தோல்வியை சந்தித் துள்ள அந்த அணி புள்ளிகள் பட்டிய லிலும் கடைசி இடத்துக்கு தள்ளப் பட்டுள்ளது. ஏராளமான முன்னணி வீரர்கள் இடம்பெற்றிருந்தபோதும், பஞ்சாப் அணியால் வெற்றி பெற முடியவில்லை.

இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் உள்ளூர் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் பஞ்சாப் ஆக்ரோஷமாக ஆட முயற்சிக்கும். முரளி விஜய், மனன் வோரா, விருத்திமான் சாஹா, கிளன் மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், கேப்டன் பெய்லி ஆகியோர் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த அணியின் ரன் குவிப்பு அமையும்.

சன்ரைஸர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தி யாசத்திலேயே தோற்றது பஞ்சாப். அந்த ஆட்டத்தில் 44 பந்துகளில் 9 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் குவித்த மில்லர், இன்றைய ஆட்டத்தில் இன்னொரு பெரிய இன்னிங்ஸை ஆடும்பட்சத்தில் அது பஞ்சாப்புக்கு பலம் சேர்ப்பதாக அமையும். ஷான் மார்ஷ், மிட்செல் ஜான்சன் ஆகியோர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கு தயாராவதற்காக நாடு திரும்பிவிட்டனர்.

மீளுமா பஞ்சாப்?

வேகப்பந்து வீச்சைப் பொறுத்த வரையில் சந்தீப் சர்மா, அனுரீத் சிங் ஆகியோரையும், சுழற்பந்து வீச்சில் அக் ஷர் படேலையும் நம்பி யுள்ளது பஞ்சாப். கடைசி இரு ஆட்டங்களில் பஞ்சாப், மும்பை அணிகளுக்கு எதிராக முறையே 226 மற்றும் 236 ரன்கள் குவித்த பெங்களூர் அணி, இந்த ஆட்டத்திலும் 200 ரன்களுக்கு மேல் குவிக்குமா? இல்லை பஞ்சாப் தோல்வியிலிருந்து மீளுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

போட்டி நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்

இதுவரை

இவ்விரு அணிகளும் இதுவரை 15 முறை மோதியுள்ளன. அதில் பஞ்சாப் 9 முறையும், பெங்களூர் 6 முறையும் வெற்றி கண்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x