Published : 22 May 2015 11:39 AM
Last Updated : 22 May 2015 11:39 AM

சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் இன்று அக்னி பரீட்சை

இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது யார்?

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்று நடைபெறும் ஐபிஎல் 2-வது தகுதிச்சுற்று போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸும் மோதுகின்றன.

இன்றைய ஆட்டத்தில் வென் றால் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இரு அணிகளுக்குமே இது அக்னி பரீட்சைதான். இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி யான சென்னை சூப்பர் கிங்ஸ், முதல் தகுதிச்சுற்றில் மும்பையிடம் தோற்றதால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை நழுவவிட்டது. ஆனால் இந்த முறை அதுபோன்று நடந்துவிடக்கூடாது என்பதில் தோனி படை உறுதியாக இருக்கும்.

இதுவரை கோப்பையை வெல் லாத அணியான கோலி தலைமை யிலான பெங்களூர் அணி இந்த முறை எப்படியாவது கோப்பையை வென்றுவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதைவிட அந்த அணிக்கு இன்னொரு நல்ல வாய்ப்பு கிடைக்காது. இதுதவிர இந்திய டெஸ்ட் கேப்டன் கோலி, ஒருநாள் போட்டி கேப்டன் தோனி ஆகியோரின் உத்திகளை சோதிக்கும் ஒரு போட்டியாக இந்த ஆட்டம் பார்க்கப்படுகிறது.

வாய்ப்பு எப்படி?

இந்த சீசனில் லீக் சுற்றில் இவ்விரு அணிகளும் மோதிய ஆட்டங்கள் இரண்டிலுமே சூப்பர் கிங்ஸ் வெற்றி கண்டுள்ளது. முதல் ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 24 ரன்கள் வித்தியாசத்திலும் பெங்களூரை வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ். இந்த வெற்றிகள் சூப்பர் கிங்ஸுக்கு கூடுதல் சாதகமாக பார்க்கப் பட்டாலும், டி20 போட்டியைப் பொறுத்தவரையில் அன்றைய தினத்தில் சிறப்பாக ஆடும் அணியே வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமின்றி பெங்களூர் அணி கடைசிக் கட்டத்தில் நல்ல பார்மில் உள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் எல்லா சீசன்களிலும் சிறப்பாக ஆடி வந்திருக்கிறது சூப்பர் கிங்ஸ். கடந்த 7 சீசன்களில் 5 முறை இறுதிச்சுற்று வரை முன்னேறியுள்ளது. எனினும் வலுவான பெங்களூரை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல.

பார்ட்னர்ஷிப் முக்கியம்

பெங்களூர் அணியை வீழ்த்த வேண்டுமெனில் சூப்பர் கிங்ஸ் அணி வலுவான ஸ்கோரை குவித்தாக வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்ச்சியாக ரன் குவித்து வந்த நியூஸிலாந்து கேப்டன் பிரென்டன் மெக்கல்லம், இங்கிலாந்துடனான தொடரில் விளையாடுவதற்காக சென்றுவிட்டார். இது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் கிங்ஸ் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் பார்ட்னர்ஷிப் அமைக்காததும் மும்பைக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் தோற்றதற்கு ஒரு காரணம் ஆகும். எனவே இன்றைய ஆட்டத்தில் தொடக்க வீரர்களான ஸ்டீவன் ஸ்மித்-மைக் ஹசி ஜோடி நல்ல தொடக்கம் ஏற்படுத்துவது மிக முக்கியமானதாகும். மிடில் ஆர்டரில் சுரேஷ் ரெய்னா, டூ பிளெஸ்ஸி, பிராவோ, கேப்டன் தோனி ஆகியோர் சிறப்பாக ஆடுவதைப் பொறுத்துதான் சூப்பர் கிங்ஸின் ரன் குவிப்பு அமையும்.

நெஹ்ரா கூட்டணி சாதிக்குமா?

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஆசிஷ் நெஹ்ரா, டுவைன் பிராவோ, மோஹித் சர்மா கூட்டணியை நம்பியுள்ளது. இந்த சீசனில் பிராவோ 23 விக்கெட்டுகளும், நெஹ்ரா 19 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர். எனினும் இவர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசுவதைப் பொறுத்தே பெங்களூர் அணியை கட்டுப்படுத்த முடியும். சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா, பவன் நெஹி ஆகியோரை நம்பியுள்ளது சூப்பர் கிங்ஸ். மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 187 ரன்களை வாரி வழங்கிய சூப்பர் கிங்ஸ் பவுலர்கள், இந்த முறை அதே தவறை செய்யாமல் இருப்பது அவசியம்.

பலம் வாய்ந்த பெங்களூர்

‘எலிமினேட்டர்’ சுற்றில் (வெளியேற்றும் சுற்று) ராஜஸ்தானை பந்தாடிய நிலையில் கள மிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ், சூப்பர் கிங்ஸை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் வலுவான வீரர்களை கொண்டிருப்பது அந்த அணியின் கூடுதல் பலமாகும்.

பேட்டிங்கைப் பொறுத்த வரையில் கிறிஸ் கெயில், கேப்டன் விராட் கோலி, டிவில்லியர்ஸ், மன்தீப் சிங் ஆகியோர் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். இவர்களில் யார் களத்தில் நின்றாலும் அந்த அணி எளிதாக 200 ரன்களை எட்டிவிட வாய்ப்புள்ளது. இந்த சீசனில் டிவில்லியர்ஸ் 512 ரன்களும், கோலி 493 ரன்களும், கெயில் 450 ரன்களும் குவித்துள்ளனர். இந்த 4 பேரையும் ஆரம்பத்திலேயே வீழ்த்துவதைப் பொறுத்துதான் சென்னை அணியின் வெற்றி வாய்ப்பு அமையும். இவர்கள் தவிர பின்வரிசையில் தினேஷ் கார்த்திக், சர்ஃப்ராஸ் கான், டேவிட் வியெஸ் ஆகியோர் பலம் சேர்க் கின்றனர்.

மிரட்டும் மிட்செல் ஸ்டார்க்

வேகப்பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் தொடர்ந்து மிரட்டி வருகிறார். இந்த சீசனில் 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஸ்டார்க் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அவருக்கு பக்கபலமாக நாத் அரவிந்த், ஹர்ஷால் படேல், டேவிட் வியெஸ் ஆகியோர் பந்து வீசி வருகின்றனர். சுழற்பந்து வீச்சில் யுவேந்திர சாஹலை நம்பியுள்ளது பெங்களூர். அந்த அணியின் துருப்பு சீட்டாக திகழ்ந்து வரும் அவர் இதுவரை 21 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்

இதுவரை

இவ்விரு அணிகளும் இதுவரை 19 ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் சென்னை 11 ஆட்டங்களிலும், பெங்களூர் 7 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. ஓர் ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x