Published : 19 May 2014 06:15 PM
Last Updated : 19 May 2014 06:15 PM

அணியில் தேவையில்லாத மாற்றங்களைச் செய்து தோல்வியடைந்த ராஜஸ்தான்

அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.

42 வயது ஸ்பின்னர் பிரவீண் டாம்பேயை இந்தப் பிட்சில் விளையாடவைக்காமல் ஓய்வு அளித்து ராஜஸ்தான் ராயல்ஸ் தவறு செய்தது. அதேபோல் அஜின்கியா ரஹானேயிற்கு பதிலாக டெல்லி வீரர் உன்முக்த்சந்தை களமிறக்கியதும், வேகப்பந்து வீச்சாளர் கேன்் ரிச்சர்ட்சனை உட்கார வைத்ததும் ராஜஸ்தான் பின்னடைவுக்குப் பிரதான காரணமாக அமைந்தது.

ராஜஸ்தான் துவக்க வீரர் கருண் நாயர் அபாரமாகத் துவங்கினார் அவர் மட்டும் ஒருமுனையில் அனைத்து பவுலர்களையும் சரியாக வாங்கினார். அவர் 24 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 48 ரன்களை எடுத்தார். இவர் 7வது விக்கெட்டாக அவுட் ஆகும்போது ராஜஸ்தான் 12 ஓவர்கள் முடிவில் 75 ரன்களையே எடுத்திருந்தது

உன்முக்த்சந்த் (2), வாட்சன் (5), சஞ்சு சாம்சன் (2), கூப்பர் (5), அன்கிட் ஷர்மா (4), ஸ்டூவர்ட் பின்னி (2) ஆகியோர் பிராக்யன் ஓஜா, ஹர்பஜன், எஸ்.கோபால் ஆகியோரது சில நல்ல பந்து வீச்சிற்கும் பெரும்பாலும் மோசமான ஷாட்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர்.

கடைசியில் 8 ஓவர்களில் 103 ரன்கள் தேவை என்ற நிலையில் பெரிய ஹிட்டரகளான பிராட் ஹாட்ஜ் மற்றும் ஜேம்ஸ் பாக்னர் களத்தில் இருந்தனர். பிராட் ஹாட்ஜ் 30 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 40 ரன்களையும், பாக்னர் 21 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 31 ரன்களையும் எடுத்தனர். ஆனால் மேட்ச் 12வது ஓவரிலேயே முடிந்து போன ஒன்றானதால் இந்த இருவரின் அடியும் பயனில்லாமல் போனது.

ஸ்பின் பந்து வீச்சிற்கு சாதகமான ஆட்டக்களத்தில் ஓஜா, ஹர்பஜன், கோபால் ஆகியோர் சிறப்பாக வீசி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக மைக் ஹஸ்ஸி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியை மும்பைக்குத் தாரை வார்த்ததன் மூலம் ராஜஸ்தான் மும்பை கனவுகளைத் தக்கவைத்ததோடு கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை சொந்த மண்ணில் மும்பையையும் எதிர்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளுடன் ராஜஸ்தான் தற்போது தேக்கமடைந்துள்ளது.

இன்றைய ஆட்டத்தின் முக்கிய அம்சம் கெய்ரன் போலார்ட், கூப்பருக்குப் பிடித்த கேட்ச். இது கிறிஸ் லின் பவுண்டரி அருகே பிடித்த கேட்சைவிடவும் சிறந்ததா அல்லது மிகச்சிறந்த கேட்சே இதுதானா என்ற அளவில் விவாதங்களைக் கிளப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியில் மைக் ஹஸ்ஸி இன்று 56 ரன்களை விளாசினார். மேற்கிந்திய அணியின் லெண்டில் சிம்மன்ஸ் 62 ரன்களை எடுக்க துவக்க விக்கெட்டுக்காக இருவரும் இணைந்து 87 பந்துகளில் 120 ரன்களைச் சேர்த்தனர்.

30 ஆட்டங்களுக்குப் பிறகு இருவர் இணைந்து 100 ரன்களை மும்பை இந்தியன்ஸிற்காக சேர்த்திருக்கின்றனர். 2012ஆம் ஆண்டு டிவைன் ஸ்மித், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸிற்கு எதிராக 163 ரன்களைச் சேர்த்த பிறகு இந்த ஜோடிதான் 100 ரன்களுக்கும் மேல் சேர்த்துள்ளது.

மைக் ஹஸ்ஸி 39 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் சகிதம் 56 ரன்களையும் லெண்டில் சிம்மன்ஸ் 51 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 62 ரன்கள் சேர்த்தார்.

கடைசியில் களமிறங்கி ரோகித் சர்மா தனது பவரைக் காட்டினார். 19 பந்துகளில் 4 சிக்சர்கள் 3 பவுண்டரிகளை விளாசினார் அவர். கெய்ரன் போலார்ட் 14 ரன்களை மந்தமாகவே எடுத்தார். இருவரும் இணைந்து 5 ஓவர்களில் 56 ரன்களை 3வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

துவக்கத்தில் எச்சரிக்கையுடன் ஆடிய ஹஸ்ஸி, சிம்மன்ஸ் ஜோடி பிறகு அனாயசமாக ஆடியது. மைக் ஹஸ்ஸி கடும் பயிற்சி மேற்கொண்டது அவரது ஷாட்களின் துல்லியம் எடுத்துக் காட்டியது. இருவரும் அடிக்கத் துவங்க 6.4 ஓவர்களில் முதல் 50-ஐ எட்டியது மும்பை. ஃபாக்னர் ஒரு பந்தை ஷாட் பிட்சாக வீச மைக் ஹஸ்ஸி அதனை அப்படியே மிட்விக்கெட்டில் சிக்ஸருக்குத்தூக்கினார். பிறகு அங்கிட் ஷர்மா வீசிய இடது கை சுழற்பந்து ஒன்றை ஸ்லாக் ஸ்வீப் செய்து அதே திசையில் 2வது சிக்சர் அடித்தார் ஹஸ்ஸி.

சிம்மன்ஸ் தன் பங்கிற்கு ரஜத் பாட்டியாவை ஒரு சிக்சர் அடித்தார். பிறகு கெவன் கூப்பர் பந்தை லாங் ஆஃப் திசையில் மேலும் ஒரு சிக்சரை அடித்தார். ஹஸ்ஸி 32 பந்துகளில் அரை சதம் எட்டினார். ஆனால் சிம்மன்ஸ் அரை சதம் எட்ட 43 பந்துகள் ஆடினார். 13வது ஓவரில் இவர்கள் இருவரும் இணைந்து ஸ்கோரை 100ஆக உயர்த்தினர். இந்த சீசனில் மும்பையின் முதல் சதக் கூட்டணியாகும் இது.

அங்கிட் சர்மா பிறகு இருவரையும் வீழ்த்தினார். அன்கிட்தான் 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை 23 ரன்களில் வீழ்த்தி சிக்கனம் காட்டிய பவுலராகத் திகழ்ந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x