Published : 16 May 2015 08:13 PM
Last Updated : 16 May 2015 08:13 PM

கிங்ஸ் லெவன் பஞ்சாபை நசுக்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்

மொஹாலியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப், நல்ல பந்து வீச்சு மற்றும் மோசமான ஷாட் தேர்வு ஆகியவற்றினால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 130 ரன்களை மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதை உறுதி செய்தது.

இன்னும் 2 வெற்றிகள் போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிக்கு முன்னேறி விடும்.

17-வது ஓவரை அனுரீத் சிங் வீச, தோனி இரண்டு அபாரமான சிக்சர்களை விளாசினார், பிறகு ஒரு ரன் எடுத்து ரெய்னாவிடம் கொடுக்க அவர் தேர்ட் மேன் திசையில் மோசமான பீல்டிங் காரணமாக பவுண்டரி சென்ற பந்தில் வெற்றியை ஈட்டினார்.

சுரேஷ் ரெய்னா 34 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்தும், கேப்டன் தோனி 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தும் நாட் அவுட்டாக திகழ்ந்தனர்.

2014-இல் எப்படி இருந்த கிங்ஸ் லெவன் 2015-ல் இப்படியான கதை!

2014 ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 11 வெற்றி 3 தோல்வி என்று இருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் 2015 தொடரில் 14 போட்டிகளில் 3 வெற்றி 11 தோல்விகள் என்று ஆனது. எண்ணிக்கையில் சிறிய இடமாற்றம்தான், ஆனால் வித்தியாசமோ பெரிதிலும் பெரிது.

கிங்ஸ் லெவன் அணியிலிருந்து அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலிலோ, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலிலோ ஒருவர் கூட இல்லை

பெஸ்ட்டிலிருந்து வொர்ஸ்டுக்கு கட்டெறும்பாகத் தேய்ந்து போனது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

சென்னை அணியில் டிவைன் ஸ்மித், மோஹித் சர்மாவுக்குப் பதிலாக மைக் ஹஸ்ஸி மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா விளையாடினர்.

டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் முதலில் பேட் செய்தது.

பவன் நேகியை வைத்துத் தொடங்கினார் தோனி. மனன் வோரா, சஹா களமிறங்கினர். ஈஷ்வர் பாண்டேயை அருமையான புல் ஷாட்டில் சிக்ஸ் அடித்தார் சஹா.

ஆனால் 15 ரன்கள் எடுத்த அவர் நெகியின் 2-வது ஓவரில் 2-வது பந்தில் சாதுரியமான பந்து வீச்சுக்கு கவர் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பெய்லி 2 பவுண்டரிகள் அடித்து 12 ரன்களில் நெஹ்ரா பந்தை எட்ஜ் செய்து அவுட் ஆனார். தோனி நீண்ட நாட்களுக்குப் பிறகு வலது புறம் டைவ் அடித்து கேட்ச் பிடித்தார்.

மனன் வோரா மீண்டும் 4 ரன்களில் சொதப்பி தேர்ட்மேனில் கேட்ச் கொடுத்து ஈஷ்வர் பாண்டேயிடம் வீழ்ந்தார். பவர் பிளே முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள்.

மேக்ஸ்வெல், குர்கீரத் சிங் ஒன்று சேர, தோனி, அஸ்வினைக் கொண்டு வந்தார். அஸ்வின் படு சிக்கனமாக வீசினார். அவரது 2-வது ஓவரில் குர்கீரத் சிங் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். அவர் மேலேறி வருவதைப் பார்த்த அஸ்வின் பிளைட்டில் அவரை ஏமாற்ற தோனி ஸ்டம்ப்டு செய்தார்.

மேக்ஸ்வெல் 14 பந்துகளில் 6 ரன்களை மட்டுமே எடுத்து ஜடேஜாவின் அருமையான திரும்பிய பந்துக்கு பவுல்டு ஆனார். இடது கை ஸ்பின்னரின் கனவுப்பந்து அது. 10 ஓவர்களில் 56/5 என்று ஆனது கிங்ஸ் லெவன். அதிரடி வீரர் மில்லர் 11 ரன்களில் நெகியிடம் வீழ்ந்தார். ஜடேஜா மிக அருமையாக ஓடிச் சென்று அதனைப் பிடித்தார்.

கடைசியில் அக்சர் படேல் 29 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 32 ரன்கள் எடுக்க, ரிஷி தவன் 20 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 25 ரன்கள் எடுக்க கிங்ஸ் லெவன் 130 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய கிங்ஸ் லெவன் அணியில் மைக் ஹஸ்ஸி, 1 ரன்னில் சந்தீப் சர்மாவின் அருமையான ஸ்விங் பந்தை எட்ஜ் செய்து வெளியேறினார்.

மெக்கல்லம் 6 ரன்களில் ஹெண்ட்ரிக்ஸ் பந்தில் பிளேய்ட் ஆன் ஆகி வெளியேறினார். 10/2 என்ற நிலையில் டுபிளெஸ்ஸிஸ் (55), ரெய்னா (41) இணைந்து ஸ்கோரை 102 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். டுபிளெஸ்ஸிஸ் 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிச்சருடன் 55 ரன்னில் வெளியேறினார்.

அதன் பிறகு தோனி, ரெய்னா வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.

ஆட்ட நாயகனாக 4 ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றிய பவன் நெகி தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x