Published : 06 May 2015 10:17 PM
Last Updated : 06 May 2015 10:17 PM

கிறிஸ் கெய்ல் சிக்சர் மழையில் நனைந்தது பெங்களூரு: சரவெடி சதம்

பெங்களூருவில் நடைபெறும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கிறிஸ் கெய்ல் 57 பந்துகளில் 117 ரன்கள் விளாச பெங்களூரு அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ரன்கள் குவித்தது.

டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் தெரியாத்தனமாக பெங்களூருவை பேட் செய்ய அழைத்தது. மேலும் சேவாகை, மனன் வோராவுக்காக ‘டிராப்’ செய்தது கிங்ஸ் லெவன், ஆனால் மனன் வோராவோ எளிதான கேட்சை கெயிலுக்கு ‘டிராப்’ செய்தார். அப்போது கெயில் அரைசதம் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கிறிஸ் கெயில் தினமானது இன்று. ஒரு முறை புனே வாரியர்ஸ் கெயிலின் மட்டை ஆவேசத்துக்குச் சிக்கியது போல் இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் சிக்கியது. தனது இன்னிங்சில் 7 பவுண்டரிகளையும் 12 அதிரடி சிக்சர்களையும் விளாசி கடைசியில் அக்சர் படேலின் திடுக்கிடும் ‘ரிடர்ன் கேட்ச்’சிற்கு அவுட் ஆனார் கெயில்.

மிட்செல் ஜான்சனை டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் முதல் முறையாக 20 ரன்கள் விளாசிய கெயில்:

முதல் ஓவரை சந்தீப் சர்மா வீச அடக்கம் காண்பித்தார் கெயில் ஒரு ரன் மட்டுமே வந்தது.

2-வது ஓவரை மிட்செல் ஜான்சன் வீச கெயிலிடம் ஆவேசம் புகுந்தது. முதல் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு மிட்விக்கெட்டில் பவுண்டரி பறந்தது.

3-வது பந்து ஓவர் பிட்சாக அமைய லாங் ஆஃப் திசையில் மாட்டடி சிக்ஸ் அடித்தார் கெயில். பிறகு அடுத்த பந்து இன்னும் நேராக ஒரு சக்திவாய்ந்த சிக்சர். அடுத்த பந்தை அது சென்ற வழியில் மட்டையை வைத்து ஸ்கொயர்லெக்கில் திருப்பி விட பவுண்டரி ஆனது. மொத்தம் 20 ரன்களை அந்த ஓவரில் விளாசினார் கெயில்.

அடுத்த சந்தீப் சர்மா ஓவரில் மிட்விக்கெட்டில் ஒரு சுழற்று சுழற்றி சிக்சருக்கு அனுப்பினார் கெயில், ஆனால், அடுத்த பந்து சரியாக சிக்காத ஷாட் மேலெழும்ப மிட் ஆஃபில் பெய்லி தவறாகக் கணித்து வாய்ப்பை கோட்டை விட்டதோடு பந்து பவுண்டரிக்கும் சென்றது.

பிறகு ஒரு புல்டாஸை பந்து உடையுமாறு சிக்ஸ் அடித்த கெயில் கடைசி பந்தை பவுண்டரிக்கு ஊதினார். இந்த ஓவரில் 24 ரன்கள்.

இந்த 18 பந்துகளில் கோலிக்கு 3 பந்துகளே ஆடக் கிடைத்தது அதில் அவர் 2 ரன்களை எடுத்திருந்தார்.

பிறகு ஜான்சனின் அடுத்த ஓவரில் ஒதுங்கிக் கொண்டு கவர் திசையில் ஒரு பவுண்டரி விளாசினார் கோலி. 4வது ஓவரில் ஸ்கோர் 51 இதில் கோலி 8 ரன்களே.

மீண்டும் 6-வது ஓவரில் ஜான்சன் ஒரு தோள்பட்டை உயர பந்தை வீச அதனை கவலைப்படாமல் மிட்விக்கெட்டில் சிக்சர் தூக்கினார்.ஜான்சனின் இந்த ஓவரிலும் 10 ரன்கள். 22 பந்துகளில் 4 பவுண்டரி 5 சிக்சருடன் கெயில் அரைசதம் கண்டார்.

கெயில் 53 ரன்களில் இருந்த போதுதான் சேவாகுக்கு பதில் சேர்க்கப்பட்ட மனன் வோரா, கெயில் அடித்த கேட்ச் ஷாட்டை ஸ்கொயர் லெக் பவுண்டரி அருகே கோட்டைவிட்டார்.

10-வது ஓவரில் மேக்ஸ்வெல் வந்தார், அவரை லாங் ஆனில் ரசிகர்கள் மத்தியில் ஒரு சிக்சர் அடித்த கெயில், அடுத்த பந்தை இறங்கி வந்து லாங் ஆஃபில் தூக்கி சிக்சர் அடித்தார்.

அக்சர் படேல் வீசிய 11-வது ஓவரில் அக்சர் படேலை லாங் ஆன் திசையில் மேற்கூரைக்கு ஒரு சிக்சரையும், மீண்டும் அதே இடத்தில் மற்றொரு சிக்சரையும் விளாசினார்.

12-வது ஓவரில் கோலி 32 ரன்களில் சந்தீப் சர்மாவிடம் பவுல்டு ஆனார். 11.2 ஓவர்களில் தொடக்க விக்கெட்டுக்காக 119 ரன்கள் விளாசப்பட்டது.

13-வது ஓவரில் கரன் வீர் சிங்கை மேலும் 2 சிக்சர்களை அடித்து நொறுக்கினார் கெயில். இம்முறையும் மைதான மேற்கூரையில் போய் விழுந்தது ஒரு சிக்ஸ்.

14-வது ஓவரை ஜான்சன் வீச ஷார்ட் பைன் லெக்கில் பந்தை திருப்பி பவுண்டரி அடித்து தனது சதத்தை 46-வது பந்தில் எடுத்து முடித்தார் கெயில். டி20 கிரிக்கெட்டில் அவரது 14-வது சதமாகும் இது.

டிவில்லியர்ஸின் அதிரடி:

கரண் வீர் சிங் இன்று யார் முகத்தில் விழித்தெழுந்தார் என்று தெரியவில்லை, கெயிலிடம் சிக்கி சின்னாபின்னமாகி, மற்றொரு அதிரடி வீரர் டிவில்லிய்ர்ஸிடமும் சிக்கினார், இவரது ஒரே ஓவரில் டிவில்லியர்ஸ் மிட்விக்கெட், எக்ஸ்ட்ரா கவர், கவர் ஆகிய திசைகளில் தொடர்ச்சியாக 3 சிக்சர்களை விளாசினார்.

17-வது ஓவரில் கெயில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்து அக்சர் படேலின் திகைப்பூட்டும் ரிடர்ன் கேட்சுக்கு 117 ரன்களில் அவுட் ஆனார்.

டிவில்லியர்ஸ் 24 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 47 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ராயல் சாலஞ்சர்ஸ் அணி 226 ரன்கள் குவித்தது. மொத்தம் 18 சிக்சர்கள், 14 பவுண்டரிகள் விளாசப்பட்டது.

இலக்கைத் துரத்திய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சேவாகுக்கு பதில் தேர்வு செய்த மனன் வோரா விக்கெட்டை அவரது சொந்த எண்ணிக்கையான 2 ரன்களில் இழந்தது. ஸ்டார்க் இவரது விக்கெட்டை வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x