Published : 19 May 2015 09:56 AM
Last Updated : 19 May 2015 09:56 AM

லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி சாம்பியன் பட்டம் வென்றது

ஸ்பெயினில் நடைபெற்று வந்த லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

லயோனல் மெஸ்ஸி, நெய்மர், லுயிஸ் சுவாரஸ் போன்ற முன்னணி வீரர்களை கொண்ட பார்சிலோனா அணி தனது கடைசி லீக் போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஸ்பெயினில் நடைபெறும் 20 முன்னணி கால்பந்து கிளப்பு களுக்கு இடையிலான லா லிகா போட்டி கோடிக்கணக்கான ரசிகர் களை கொண்டது. 1927-ம் ஆண்டு முதல் இப்போட்டி நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணியே சாம்பியன் பட்டம் வெல்லும்.

30 வெற்றி

இதன்படி 37 லீக் போட்டிகளில் பங்கேற்று 30 வெற்றி, 3 டிரா, 4 தோல்வி உட்பட 93 புள்ளிகள் பெற்ற பார்சிலோனா அணி முதலிடம் பிடித்து 23 வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற் றியது.

போர்ச்சுகலைச் சேர்ந்த முன்னணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம் பெற்றுள்ள ரியல் மாட்ரிட் அணி 37 போட்டிகளில் 29 வெற்றி, 2 டிரா, 6 தோல்விகளுடன் 89 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்தது.

மூன்றாவது இடத்தை 77 புள்ளிகளுடன் அட்லெடிகோ மாட்ரிட் அணி கைப்பற்றியது. கடந்த சீசனில் அட்லெடிகோ மாட்ரிட் அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகள், 2015-16-ல் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளன.

வெற்றிக்கான ஒரே கோல்

மாட்ரிட் நகரில் நடந்த கடைசி லீக் போட்டியில் பார்சிலோனா அணி அட்லெடிகோ மாட்ரிட் அணியை எதிர்கொண்டது. இதில் முதல் பாதி, கோல் எதுவுமின்றி முடிந்தது. இரண்டாவது பாதியில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். கடைசி வரை வரை போராடிய அட்லெடிகோ மாட்ரிட் அணி வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில் பார்சிலோனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் போட்டியில் வெற்றி பெற்றதுடன் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.

23-வது முறையாக சாம்பியன்

லா லிகா போட்டியில் பார்சிலோனா அணி இப்போது 23-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ரியல் மாட்ரிட் அணி இதுவரை 32 முறை சாம்பியன் பட்டம் வென்று அதிக முறையாக சாம்பியனான அணிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 3-வது இடத்தில் 10 முறை சாம்பியனான அட்லெடிகோ மாட்ரிட் அணி உள்ளது.

மெஸ்ஸி மேஜிக்

2013-14-ம் ஆண்டு சீசனில் குறிப்பிடத்தக்க வகையில் சிறப் பாக விளையாடாத மெஸ்ஸி 2014-15-ம் ஆண்டு சீசனில் தனது ஆட்டத்திறனை மீண்டும் மீட்டுள்ளார். அதற்கு லா லிகா போட்டியும் முக்கிய காரணமாக அமைந்தது. இந்த முறை மெஸ்ஸி அடித்த ஒரு கோல்தான் பார்சி லோனா அணி சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தது.

இந்த சீசனில் அவர் இதுவரை 54 போட்டிகளில் பங்கேற்று 54 கோல் அடித்துள்ளார். 27 கோல் அடிக்க உதவியுள்ளார். கடந்த சீசனில் 46 போட்டிகளில் பங்கேற்ற மெஸ்ஸி 41 கோல் மட்டுமே அடித்தார். 14 கோல்களை அடிக்க உதவிகரமாக இருந்தார். 27 வயதாகும் மெஸ்ஸி அர்ஜென்டீனா அணியின் கேப்ட னாகவும் உள்ளார்.

கோல் பட்டியலில் ரொனால்டோ முதலிடம்

இப்போட்டித் தொடரில் அதிக கோல் அடித்தவர் பட்டியலில் ரியல் மாட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடம் பிடித்தார். அவர் 45 கோல்களை அடுத்து அசத்தியுள்ளார். பார்சிலோனா அணியின் லயோனல் மெஸ்ஸி 41 கோல் அடித்து 2-வது இடத்தைப் பிடித்தார்.

பார்சிலோனா அணியின் நெய்மர், அட்லெடிகோ மாட்ரிட் அணியின் ஆண்டனி கிரிஸ்மேன் ஆகியோர் தலா 22 கோல்கள் அடித்து 3-வது இடத்தை பகிர்ந்து கொண்டனர்.

இது தவிர, அதிக 'ஹாட்ரிக்' கோல் அடித்த வீரர்கள் பட்டியலிலும் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார். அவர் இத்தொடரில் 7 முறை ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார். அதற்கு அடுத்ததாக மெஸ்ஸி 5 முறை ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x