Last Updated : 13 May, 2015 09:57 AM

 

Published : 13 May 2015 09:57 AM
Last Updated : 13 May 2015 09:57 AM

அர்ஜுனா விருது: இந்திய கால்பந்து கேப்டன் சுப்ரதா பாலின் பெயர் பரிந்துரை

கிளிமேக்ஸ் லாரன்ஸ், மகேஷ் கவ்லி, சுப்ரதா பால், ஒய்னம் பெம்பெம் தேவி ஆகியோரின் பெயரை அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைத்துள்ளது அகில இந்திய கால்பந்து சம்மேளனம். இவர்களில் லாரன்ஸ், மகேஷ் ஆகியோர் இந்திய அணிக்காக விளையாடி ஓய்வு பெற்ற கால்பந்து வீரர்கள் ஆவர்.

36 வயதான லாரன்ஸ் 2002-லிருந்து 10 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடிய மிட்பீல்டர் ஆவார். தற்போது ஐ-லீக் போட்டியில் மும்பை எப்.சி. அணிக்காக விளையாடி வருகிறார்.

பின்கள வீரரான மகேஷ் கவ்லி, ஒரு காலத்தில் ஐ-லீக்கில் அதிக பணம் கொடுத்து வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமைக்குரியவர். 1999-ம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடத் தொடங்கிய இவர், 2011-ல் ஓய்வு பெறும் வரை முன்னணி வீரராக திகழ்ந்தார். 1998-99-ல் தனது கிளப் கால்பந்து வாழ்க்கையை கொச்சி எப்.சி. அணியிலிருந்து தொடங்கிய இவர், சர்ச்சில் பிரதர்ஸ், ஈஸ்ட் பெங்கால், மகேந்திரா யுனைடெட், டெம்போ ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

2007-08-லிருந்து இந்திய அணிக்காக விளையாடி வரும் சுப்ரதா பால், தற்போது இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்து வருகிறார். இந்தியாவின் முதல் நிலை கோல் கீப்பரான இவர், ஈஸ்ட் பெங்கால், மோகன் பகான் உள்ளிட்ட பல்வேறு அணி களுக்காக விளையாடியுள்ளார். ஐ-லீக்கில் சல்கோகர் அணிக்காக விளையாடி வரும் சுப்ரதா பால், இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) போட்டியில் மும்பை சிட்டி அணிக்காக விளையாடி வருகிறார்.

35 வயது இந்திய கால்பந்து வீராங்கனையான பெம்பெம் தேவி, இந்திய அணிக்காகவும், தனது மாநில அணியான மணிப்பூர் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.

மல்யுத்தத்தில் நால்வர்

மல்யுத்த வீரர்கள் அமித் குமார் தாஹியா, பஜ்ரங், வீராங்கனை பபிதா குமாரி ஆகியோரின் பெயரை அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைத்துள்ளது இந்திய மல்யுத்த சம்மேளனம்.

55 கிலோ ப்ரீஸ்டைல் போட்டிகளில் பங்கேற்று வரும் 25 வயதான பபிதா குமாரி, கடந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதோடு, கடந்த ஓர் ஆண்டாக சிறப்பாக ஆடி வருகிறார்.

21 வயதான அமித் குமார் 2012 ஒலிம்பிக்கில் பங்கேற்றார். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் இளம் மல்யுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 2013-ல் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதோடு, காமன்வெல்த் போட்டியில் 57 கிலோ ப்ரீஸ்டைல் டிவிசன் பிரிவில் தங்கம் வென்றார்.

21 வயதான பஜ்ரங், 61 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவு போட்டிகளில் பங்கேற்று வருகிறார். காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இவர், 2013-ல் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x