Published : 03 May 2015 12:10 PM
Last Updated : 03 May 2015 12:10 PM

இந்தியா-ஜப்பான் ஹாக்கி தொடர்: புவனேசுவரத்தில் இன்று தொடக்கம்

இந்தியா-ஜப்பான் அணிகளுக்கு இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடர் ஒடிசா தலைநகர் புவனேசுவரத்தில் இன்று தொடங்குகிறது.

வரும் ஜூனில் உலக ஹாக்கி லீக்கின் அரையிறுதி நடைபெறவுள்ளதால் கலிங்கா மைதானத்தில் நடைபெறும் இந்தத் தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமானதாகும்.

சமீபத்தில் நடந்த அஸ்லன் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் அசத்தலாக ஆடி 3-வது இடத்தைப் பிடித்த இந்திய அணி, இந்தத் தொடரில் ஜப்பானை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொள்கிறது. சர்வதேச தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 16-வது இடத்தில் இருக்கும் ஜப்பானுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விரு அணிகளும் இதற்கு முன்னர் 2013-ல் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சந்தித்தன. அதில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் தோல்வி கண்டது. அந்தத் தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்தப் போட்டி இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x