Last Updated : 05 Apr, 2015 01:17 PM

 

Published : 05 Apr 2015 01:17 PM
Last Updated : 05 Apr 2015 01:17 PM

அஸ்லன் ஷா கோப்பை ஹாக்கி: இந்தியா-தென் கொரியா மோதல்

24-வது அஸ்லன் ஷா கோப்பை ஹாக்கி போட்டி மலேசியாவின் ஈபோ நகரில் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா, மலேசியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூஸி லாந்து, கனடா, தென் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன.

இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் தென் கொரியாவும் மோதுகின்றன. ஆசிய சாம்பியனான இந்தியா, ஏற்கெனவே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுவிட்டது. அதனால் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவதற்கு இந்தப் போட்டி இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்கள், இந்தப் போட்டியின் மூலம் நல்ல அனுபவத்தை பெறுவார்கள் என நம்பலாம்.

கடந்த டிசம்பரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் விளை யாடிய சர்தார் சிங் தலைமை யிலான இந்திய அணியில் இப்போது 3 மாற்றங்கள் மட்டுமே செய்யப் பட்டுள்ளன. மிட்பீல்டர் டேனிஷ் முஜ்தபா, ஸ்டிரைக்கர் லலித் உபத்யாய், குருஜிந்தர் சிங் ஆகியோ ருக்குப் பதிலாக சிங்லென்சனா சிங், சத்பீர் சிங், மன்தீப் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அஸ்லன் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டி ‘இன்வைட் டேஷன்’ போட்டியாக இருந்தாலும், இந்திய அணிக்கும், புதிய பயிற்சியாளரான நெதர்லாந்தின் பால் வான் அஸ்ஸுக்கும் முக்கியமான போட்டியாகும். ஏனெனில் வான் தலைமையில் இந்தியா பங்கேற்கவுள்ள முதல் சர்வதேச போட்டி இதுதான். அதனால் அவர் கடும் நெருக்கடியில் உள்ளார்.

கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியின் அரையிறுதியில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் இந்தியாவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் தென் கொரியா விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் சர்தார் சிங் தலைமையிலான இந்திய அணியும் மிக வலுவாக உள்ளதால் இந்த ஆட்டம் கடும் சவாலாக இருக்கும் என நம்பலாம்.

இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, கனடாவையும், 3-வது ஆட்டத்தில் மலேசியா, நியூஸிலாந்தையும் சந்திக்கின்றன.

இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்தைச் சந்திக்கிறது. இந்த ஆட்டம் நாளை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 7-ம் தேதி மலேசியாவையும், 9-ம் தேதி கனடாவையும், 11-ம் தேதி ஆஸ்தி ரேலியாவையும் சந்திக்கிறது இந்தியா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x