Published : 25 Apr 2015 08:04 PM
Last Updated : 25 Apr 2015 08:04 PM

மலிங்கா, மெக்லினாகன் அபாரம்: ஹைதராபாத்தை வீழ்த்தி மும்பை இண்டியன்ஸ் 2-வது வெற்றி

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது மும்பை இண்டியன்ஸ். இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை 2-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

முதலில் பேட் செய்த மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் அதிரடி தொடக்கம் கண்டும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளாமல் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது.

மும்பையில் சனிக்கிழமை நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளிலும் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. மும்பை அணியில் ஹார்டிக் பாந்த்யா, பூம்ரா ஆகியோருக்குப் பதிலாக சுசித், வினய் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். சன்ரைஸர்ஸ் அணியில் ஹென்ரிக்ஸ், பிபுல் சர்மா ஆகியோருக்குப் பதிலாக டிரென்ட் போல்ட், ஹனுமா விஹாரி ஆகியோர் இடம்பெற்றனர்.

டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்ய, லென்ட் சிம்மன்ஸும், பார்திவ் படேலும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். டிரென்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே சிம்மன்ஸ் இரு பவுண்டரிகளை விளாசினார். மறுமுனையில் வேகமாக ஆட முயன்ற பார்திவ் படேல் 17 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டெயின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

சிம்மன்ஸ் அரை சதம்

பின்னர் வந்த உன்முக்த் சந்த் 5 ரன்களில் நடையைக் கட்ட, சிம்மன்ஸுடன் இணைந்தார் கேப்டன் ரோஹித் சர்மா. இந்த ஜோடி அதிரடியாக ஆட, 10 ஓவர்களில் 72 ரன்களை எட்டியது மும்பை. ஸ்டெயின் வீசிய 13-வது ஓவரின் முதல் இரு பந்துகளில் பவுண்டரிகளை விரட்டி 41 பந்துகளில் அரைசதம் கண்ட சிம்மன்ஸ், அடுத்த பந்தில் போல்டு ஆனார். அவர் 42 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்தார்.

பின்னர் வந்த போலார்ட் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்க, கரண் சர்மா வீசிய அடுத்த ஓவரில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 15 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு வந்த அம்பட்டி ராயுடு 7 ரன்களிலும், ஹர்பஜன் சிங் ரன் ஏதுமின்றியும் வெளியேறினர்.

மறுமுனையில் அதிரடியாக ரன் சேர்த்தார் போலார்ட், புவனேஸ்வர் குமார் வீசிய கடைசி ஓவரில் போல்டு ஆனார். அவர் 24 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்தது மும்பை.

சன்ரைஸர்ஸ் தரப்பில் புவனேஸ்வர் குமார் 4 ஓவர்களில் 26 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஷிகர் தவன் அதிரடி

பின்னர் ஆடிய சன்ரைஸர்ஸ் அணிக்கு ஷிகர் தவன்-டேவிட் வார்னர் ஜோடி அதிரடி தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. ஹர்பஜன் சிங் வீசிய 4-வது ஓவரை எதிர்கொண்ட ஷிகர் தவன், அதில் 3 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விளாச, அந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள் கிடைத்தன. ஆனால் 5-வது ஓவரை வீசிய மலிங்கா, வார்னரை வீழ்த்தினார். 7 பந்துகளில் 9 ரன்கள் எடுத்த வார்னர், அம்பட்டி ராயுடுவிடம் கேட்ச் ஆனார்.

மெக்லினாகன் வீசிய அடுத்த ஓவரில் ஷிகர் தவன் ஆட்டமிழந்தார். அவர் 29 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த நமன் ஓஜா 9 ரன்களில் நடையைக் கட்ட, 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்திருந்தது சன்ரைஸர்ஸ்.

இதன்பிறகு லோகேஷ் ராகுலுடன் இணைந்தார் ரவி போபாரா. பந்துகளை வீணடிக்காமல் விளையாடிய இந்த ஜோடி 36 ரன்கள் சேர்த்தது. அந்த அணி 104 ரன்களை எட்டியபோது ராகுல் 25 ரன்களில் (27 பந்துகளில்) ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு போபாராவுடன் இணைந்தார் ஹனுமா விஹாரி. அப்போது சன்ரைஸர்ஸ் வெற்றி பெற கடைசி 5 ஓவர்களில் 54 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. வினய் குமார் 16-வது ஓவரில் இரு பவுண்டரிகளையும், மலிங்கா வீசிய 17-வது ஓவரில் ஒரு பவுண்டரியையும் ஹனுமா விஹாரி விளாச, அந்த ஓவர்களின் மூலம் 20 ரன்கள் கிடைத்தன.

மெக்லினாகன் திருப்புமுனையும் மலிங்காவின் ஒரே ஓவர் 3 விக்கெட்டுகளும்

இதனால் கடைசி 3 ஓவர்களில் 34 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. மெக்லீனா கான் வீசிய 18-வது ஓவரில் போபாரா 23 ரன்களில் (27 பந்துகளில்) ஆட்டமிழந்தார். இதையடுத்து கரண் சர்மா களம் கண்டார். அதேநேரத்தில் மெக்லினாகன் ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. இந்த ஓவர்தான் திருப்புமுனையாக அமைந்தது.

19-வது ஓவரை வீசிய மலிங்கா முதல் பந்தில் ஹனுமா விஹாரியையும் (10 பந்துகளில் 16 ரன்கள்), 3-வது பந்தில் பிரவீண் குமாரையும் (0), 4-வது பந்தில் ஸ்டெயினையும் (0) வீழ்த்தினார். இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது சன்ரைஸர்ஸ். கரண் சர்மா 2, புவனேஸ்வர் குமார் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

மும்பை தரப்பில் மலிங்கா 4 ஓவர்களில் 23 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், மெக்லீனாகான் 4 ஓவர்களில் 20 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x