Published : 06 Mar 2015 10:17 AM
Last Updated : 06 Mar 2015 10:17 AM

காலிறுதி முனைப்பில் இந்தியா: மே.இ.தீவுகளுடன் இன்று மோதல்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெர்த் நகரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவும், மேற்கிந்தியத் தீவுகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. தொடர்ச்சியாக 3 வெற்றிகளைப் பெற்றுள்ள இந்தியா, இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறுவதில் தீவிரமாக உள்ளது.

தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய வலுவான அணிகளை வீழ்த்தியுள்ள இந்திய அணி, இந்த ஆட்டத்திலும் அபாரமாக ஆடும் என்பதில் சந்தேகமில்லை.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே வலுவாக உள்ளது. ஷிகர் தவன், விராட் கோலி ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருவது இந்திய அணியின் பெரிய பலமாகும்.

முதல் இரு ஆட்டங்களில் ரன் குவிக்காத ரோஹித் சர்மா, எமிரேட்ஸுக்கு எதிராக அரைசதமடித்து பார்முக்கு திரும்பினார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அவர் எப்போதுமே சிறப்பாக ஆடியிருப்பதால் இந்த ஆட்டத்திலும் ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிடில் ஆர்டரில் அஜிங்க்ய ரஹானே, சுரேஷ் ரெய்னா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். எனினும் கேப்டன் தோனி பார்மில் இல்லாதது கவலையளிக்கிறது.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் புவனேஸ்வர் குமாருக்குப் பதிலாக முகமது சமி சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றபடி எந்த மாற்றமும் இருக்காது. சுழற்பந்துவீச்சில் அஸ்வின், ஜடேஜா ஆகியோரை நம்பியுள்ளது இந்திய அணி. இதுவரை 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் அஸ்வின், மேற்கிந்தியத் தீவுகளுக்கு சவாலாக இருப்பார் என நம்பலாம்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடர்ச்சியாக சிறப்பாக ஆடாதது அந்த அணியின் மிகப்பெரிய பலவீனமாக உள்ளது. கிறிஸ் கெயில், டுவைன் ஸ்மித், சாமுவேல்ஸ் என அதிரடி பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் இருந்தாலும், அவர்களில் யாரும் நம்பிக்கை அளிக்கும் அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

ஜிம்பாப்வேக்கு எதிராக 215 ரன்கள் குவித்த கெயில், பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொற்ப ரன்களில் வீழ்ந்தார். 2006-ல் இந்தியாவுக்கு எதிராக சதமடித்த கெயில், அதன்பிறகு கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிராக 19 இன்னிங்ஸ்களில் ஆடியபோதும் ஒரு சதம்கூட அடிக்கவில்லை.

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஜெரோம் டெய்லர் மட்டுமே ஓரளவு நம்பிக்கையளிக்கிறார்.

இதுவரை…

உலகக் கோப்பையில் இதுவரை இவ்விரு அணிகளும் 8 முறை மோதியுள்ளன. அதில் இந்தியா 4 முறையும், மேற்கிந்தியத் தீவுகள் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1992-க்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெறவில்லை. கடைசி இரு உலகக் கோப்பை ஆட்டங்களில் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளில் 7-ல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

கோலிக்கு பிசிசிஐ எச்சரிக்கை

பத்திரிகையாளரை திட்டிய விவகாரம் தொடர்பாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வீரர்கள் அதுபோன்று மோசமாக நடந்து கொள்ள கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு பெர்த் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கோலி, அங்கிருந்து திரும்பும் வழியில் பத்திரிகையாளர் ஒருவரை வாய்க்கு வந்தபடி வசைபாடிய விவகாரத்தால் சர்ச்சைக் குள்ளாகியுள்ளார். தன்னையும், தனது காதலியையும் பற்றி செய்தி வெளியிட்டதால் திட்டியதாகக் கூறிய கோலி, அதுபோன்ற செய்தி வெளியிட்டது வேறு ஒருவர் என்று தெரிந்த பின்பு, மற்றொரு பத்திரி கையாளர் மூலம் நடந்த சம்பவத் துக்கு மன்னிப்பு கோரினார்.

முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியிருப்பதாவது: கண்ணாடி முன் நின்று எனக்கு பிரச்சி னையை ஏற்படுத்தக் கூடிய விஷயங்களிலிருந்து மீண்டு வர முயற்சிப்பேன். கிரிக்கெட்டை முன்னெடுத்து செல்வதற்கு வீரர்கள், நிர்வாகிகள், ஊடகங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்றார்.

லட்சுமண் கூறுகையில், “சம்பந்தப்பட்ட பத்திரிகையாளரை சந்தித்து கோலி மன்னிப்பு கோருவதுதான் சரியான வழியாக இருக்கும். இருவரும் பரஸ்பரமாக பேசி இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x