Published : 04 Mar 2015 03:49 PM
Last Updated : 04 Mar 2015 03:49 PM

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 25 அணிகள் விளையாட வேண்டும்: சச்சின் டெண்டுல்கர் விருப்பம்

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் முதன்மை நிலையில் உள்ள 10 அணிகள் மட்டுமே இடம்பெறும் என்ற ஐசிசி-யின் பரிசீலனைகளை சச்சின் டெண்டுல்கர் விமர்சனம் செய்துள்ளார்.

இது கிரிக்கெட்டிற்கு ‘பின்னோக்கிய நகர்வு’ என்றும் அசோசியேட் அணிகளுக்கு செய்யப்படும் ‘நியாயமின்மை’ என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்,

ஐசிசி சார்பாக உலகக்கோப்பை தூதராக செயல்பட்டு வரும் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டை குறுக்குவதில் பயனில்லை மேலும் உலகமயமாகி 25 அணிகள் உலகக்கோப்பையில் இடம்பெற வேண்டும் என்கிறார்.

சிட்னியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சச்சின் டெண்டுல்கர் கூறும்போது, “அடுத்த உலகக்கோப்பையில் 10 அணிகளே இடம்பெறும் என்பது ஏமாற்றமளிக்கிறது. ஒரு கிரிக்கெட் வீரனாக ஆட்டம் உலகமயமாக வேண்டும். ஆகவே 10 அணி உலகக்கோப்பை என்பது பின்னோக்கிய நகர்வு.

அசோசியேட் அணிகளை மேம்படுத்தும் வழிமுறைகளை நாம் காண வேண்டும்.

இந்த அணிகள் ஒவ்வொரு உலகக்கோப்பை தொடரிலும் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி அளித்து வரவே செய்கின்றனர். இதனை அவர்கள் சீராக செய்ய வேண்டுமெனில் அவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த சிறந்த சூழலை அமைத்துத் தருவதுதான் சிறந்த வழி.

4 ஆண்டுகளுக்கு ஒரு முறையே அவர்கள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா போன்ற முதன்மை அணிகளுடன் விளையாட முடிகிறது. இது அவர்களுக்கு செய்யப்படும் நியாயமாகாது.

ஏன் ஆஸ்திரேலியா ஏ, இந்தியா ஏ, நியூசிலாந்து ஏ, இங்கிலாந்து ஏ, தென்னாப்பிரிக்கா ஏ அணிகள் இந்த நாட்டில் சென்று தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளை ஆடக்கூடாது. 14 அணிகள் என்பதே போதாது என்று கருதப்படும் வேளையில் 10 அணிகள் என்பது ஏமாற்றமளிக்கிறது. உலகக்கோப்பையில் 25 அணிகள் விளையாடுமாறு செய்யவேண்டும்.

கிரிக்கெட் ஆட்டம் முதன்மை 6 அல்லது 7 அணிகள் மட்டுமே சொந்தமானதல்ல. நிறைய அணிகள் ஆடினால்தான் நிறைய ரசிகர்கள் உலகம் முழுதும் கிரிக்கெட் பக்கம் வருவார்கள்.

அவர்கள் ஆடும் ஆட்டத்தின் முடிவுகள் நல்ல நிலையில் அமைந்தால் அதிக ரசிகர்கள் கிடைப்பார்கள். ஒரு ஆட்டத்தில் அதிர்ச்சி அளித்த பிறகு ஒன்றுமில்லாமல் ஆகி அடுத்த 4 ஆண்டுகள் தகுதிச் சுற்றுக்களில் விளையாடி மீண்டும் பெரிய அணிகளைச் சந்திக்கும் நிலைமையில் உள்ளது அசோசியேட் அணிகள்.

எனவே ஐசிசி இதனை பரிசீலனை செய்ய வேண்டும், பரிசீலிப்பார்கள் என்று நம்புகிறேன்.

டெஸ்ட் கிரிக்கெட் இருக்கும், டி20 கிரிக்கெட்டும் இருக்கும் ஆனால் 50 ஓவர் கிரிக்கெட் கொஞ்சம் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க இருப்பதால் கொஞ்சம் சோர்வளிக்கிறது. 15-வது ஓவர் முதல் 35-வது ஓவர் வரை ஆட்டம் எப்படி ஆடப்படும் என்பது தெரிந்து விடுவதால் சோர்வளிக்கிறது. எனவே எதிர்பாராதது நடக்குமாறு வடிவத்தில் சில மாறுதல்கள் அவசியம்.” என்கிறார் சச்சின்.

அவர் ஏற்கெனவே ஒருநாள் போட்டியை இன்னிங்ஸ் அடிப்படையில் நடத்த யோசனை வழங்கியிருந்தார். அதாவது முதல் 50 ஓவர்களில் ஒவ்வொரு அணிக்கும் 25 ஓவர் பிறகு இரு அணிகளும் 25 ஓவர்கள் விளையாட வேண்டும் என்று ஒரு யோசனையை வழங்கியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x