Published : 04 Apr 2014 11:05 AM
Last Updated : 04 Apr 2014 11:05 AM

2-வது அரையிறுதி: இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2-வது அரையிறுதி ஆட்டம் வங்கதேசத்தின் மிர்பூரில் இன்று நடைபெறுகிறது.

இந்த உலகக் கோப்பையில் இதுவரை ஒரு ஆட்டத்தில்கூட தோற்காமல் அசைக்க முடியாத அணியாகத் திகழும் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. துரதிருஷ்டக்கார அணியான தென் ஆப்பிரிக்காவோ உலகக் கோப்பையில் முதல்முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது.

யுவராஜுக்கு காயம்

இந்திய அணி ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி, யுவராஜ் சிங், ரெய்னா, கேப்டன் தோனி என வலுவான பேட்ஸ்மேன்களைக் கொண்டிருந்தாலும், ஷிகர் தவண் தொடர்ந்து சொதப்பி வருவது கவலையளிக்கிறது. இதேபோல் அதிரடி பேட்ஸ்மன் யுவராஜ் சிங் பயிற்சியின்போது கால்பந்து விளையாடியதில் அவருடைய கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் கேப்டன் தோனிக்கும், பயிற்சி யாளர் டங்கன் பிளெட்சருக்கும் அது சற்று கவலையை ஏற்படுத் தியுள்ளது.

எனினும் யுவராஜ் இந்தப் போட்டி யில் விளையாட தகுதிபெற்று விடுவார் என எதிர்பார்க்கப்படு கிறது. ஆஸ்திரே லியாவுக்கு எதிராக 43 பந்துகளில் 60 ரன்கள் குவித்த யுவராஜ் சிங், அரையிறுதி யில் விளையாடும்பட்சத்தில் இந்திய அணியின் மிகப்பெரிய பலமாகத் திகழ்வார் என்பதில் சந்தேகமில்லை.

கடும் போட்டி

ஒருவேளை யுவராஜ் சிங் இடம்பெறாத பட்சத்தில் அஜிங்க்ய ரஹானே சேர்க்கப்படுவார். ஆனால் யுவராஜ் சிங் முழு உடற்தகுதி பெறும்பட்சத்தில் ஆடும் லெவனில்" அஜிங்க்ய ரஹானேவை சேர்ப்பதா அல்லது தொடர்ந்து தடுமாறி வரும் ஷிகர் தவணை சேர்ப்பதா என்ற இக்கட்டான சூழல் கேப்டன் தோனிக்கு ஏற்பட் டுள்ளது. இதுவரை 3 போட்டி களில் விளையாடியுள்ள தவண் மொத்தம் 31 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதேபோல் வேகப்பந்து வீச்சில் புவனேஸ்வர் குமாருடன் முகமது சமியை இறக்குவதா அல்லது மோஹித் சர்மாவுக்கு வாய்ப்பளிப்பதா என்ற சிக்கலில் தோனி இருக்கிறார். ஆனாலும் முகமது சமிக்கே தோனி முன்னுரிமை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிரட்டும் மிஸ்ரா

பந்துவீச்சைப் பொறுத்தவரை யில் அமித் மிஸ்ரா, அஸ்வின் கூட்டணி இந்த முறையும் கலக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரும் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக இருப் பார்கள் என்பதில் சந்தேக மில்லை. இதுவரை 4 போட்டிகளில் விளையாடி யுள்ள மிஸ்ரா 9 விக்கெட்டு களையும், அஸ்வின் 7 விக்கெட்டு களையும் வீழ்த்தியுள்ளனர்.

டிவில்லியர்ஸை நம்பி…

பேட்டிங்கைப் பொறுத்தவரையில் டிவில்லியர்ஸ், கேப்டன் டூ பிளெஸ்ஸி, அல்பி மோர்கல் ஆகியோர் எப்படி விளையாடு கிறார்கள் என்பதை பொறுத்தே அந்த அணியின் வெற்றி வாய்ப்பு அமையும். இதேபோல் கடந்த ஜனவரியில் நடைபெற்ற இந்தியா வுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3 சதங்கள் அடித்த குயின்டன் டி காக் மீதும் எதிர் பார்ப்பு உள்ளது.

ஆனாலும் ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவம் பெற்றவரான டிவில்லியர்ஸ், டூ பிளெஸ்ஸிக்கு நிகராக டி காக் ஆடுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்க தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் நிச்சயம் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.

இதேபோல் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் எப்படி பந்துவீசுகிறார் என்பதைப் பொறுத்தே அந்த அணியின் வெற்றி வாய்ப்பு அமையும். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் மோர்ன் மோர்கல் முழு உடற்தகுதியை எட்டும்பட்சத்தில் அணிக்குத் திரும்புவார். அவருக்கு வழிவிடும் வகையில் ஹென்ரிக்ஸ் அல்லது வேயன் பர்னெல் நீக்கப் படுவார்.

சுழற்பந்து வீச்சில் அந்த அணி இம்ரான் தாஹிரை மட்டுமே நம்பியுள்ளது. அவர் இதுவரை 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த உலகக் கோப்பை போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் 2-வது இடத்தில் உள்ளார். ஆனாலும் அவரை இந்திய பேட்ஸ்மேன்கள் எவ்வித சிரமமுமின்றி எளிதாக எதிர்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

துரத்தும் துரதிர்ஷ்டம்

தென் ஆப்பிரிக்க அணி உலகின் வலுவான அணிகளுள் ஒன்றாகத் திகழ்ந்தாலும், 50 ஓவர் உலகக் கோப்பை, மினி உலகக் கோப்பை (சாம்பியன்ஸ் டிராபி), டி20 உலகக் கோப்பை ஆகியவற்றில் இன்று வரை அரையிறுதியைத் தாண்டியதில்லை.உலகக் கோப்பை போட்டி என்பது எப்போதுமே தென் ஆப்பிரிக்காவுக்கு துரதிருஷ்டமானதாகத்தான் இருந்திருக்கிறது.

2009-ல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி வரை முன்னேறிய தென் ஆப்பிரிக்க அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது. தொடர்ந்து துரத்தும் துரதிருஷ்டத்துக்கு இந்த முறையாவது தென் ஆப்பிரிக்கா முற்றுப்புள்ளி வைக்குமா, கோப்பையை வெல்லும் அதிர்ஷ்டம் தங்கள் அணிக்கு கிட்டுமா என்பதே அந்நாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

போட்டி நேரம் : மாலை 6.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் கிரிக்கெட்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x