Published : 04 Feb 2015 18:21 pm

Updated : 04 Feb 2015 18:21 pm

 

Published : 04 Feb 2015 06:21 PM
Last Updated : 04 Feb 2015 06:21 PM

இலங்கை தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்பும் முயற்சியைக் கைவிடுங்கள்: தொல்.திருமாவளவன் கோரிக்கை

விரும்பும் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் முகாம்களிலும் முகாம்களுக்கு வெளியிலும் தஞ்சமடைந்து வாழ்ந்துவரும் சுமார் ஒரு லட்சம் ஈழத் தமிழ் அகதிகளை அவர்களது விருப்பத்துக்கு மாறாக இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது.

இதற்காக இலங்கை அரசின் பிரதிநிதிகளோடு டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையை ஒத்திவைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையைப் புறக்கணித்து இந்தப் பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்தியிருப்பது கண்டனத்துக்குரியது.

இலங்கையில் ஆட்சி மாற்றம் நடந்து ஒருசில வாரங்கள்தான் ஆகிறது. தமிழர் பிரச்சனை தொடர்பாக புதிய அரசின் அணுகுமுறை இன்னும் தெளிவாகவில்லை. தமிழர் பகுதிகளில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தைத் திரும்பப்பெறுவதற்கோ, அவர்களால் அபகரிக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் நிலங்களைத் திருப்பிக்கொடுப்பதற்கோ, சிறைகளில் வாடும் ஆயிரக்கணக்கான தமிழர்களை விடுதலை செய்வதற்கோ மைத்ரிபாலா தலைமையிலான புதிய அரசு எந்தவொரு நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. மாறாக, புலம்பெயர் நாடுகளில் செயல்படும் ஈழத் தமிழர் அமைப்புகளின் மீது இராஜபக்சே விதித்த தடைகள் தொடரும் என்று மைத்ரிபாலா தெரிவித்திருக்கிறார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டவற்றை நடைமுறைப்படுத்தவும், தமிழ் மீனவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தவும் இலங்கை அரசை வலியுறுத்தி நடவடிக்கை எடுப்பதில் முனைப்புக் காட்டாத இந்திய அரசு, இங்கிருக்கும் அகதிகளைத் திருப்பி அனுப்புவதில் குறியாக இருப்பது ஏன்? இலங்கையில் இயல்புநிலை வந்துவிட்டது என உலக நாடுகளுக்குக் காட்டி அடுத்துவரும் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் போர்க்குற்ற விசாரணை தொடர்பாக வரவிருக்கும் தீர்மானத்தை முறியடிப்பதற்கு இலங்கை அரசுக்கு உதவ வேண்டும் என்பது தவிர இந்த அவசரத்துக்கு வேறு காரணம் இருக்க முடியாது. இது அப்பட்டமான தமிழர் விரோதச் செயல் அல்லாமல் வேறு ஒன்றுமில்லை.

1995ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து திருப்பி அழைத்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான ஈழத்தமிழ் அகதிகளை வவுனியாவில் இருக்கும் சிதம்பரபுரம் என்ற இடத்தில் முகாம்களில் தங்கவைத்தார்கள். இருபது ஆண்டுகளாகியும் அவர்கள் மறுகுடியமர்த்தம் செய்யப்படவில்லை. தமிழ்நாட்டில் இருப்பதை விடவும் மோசமான முகாம்களில் அவர்கள் இப்போதும் அல்லல்படுகிறார்கள்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு திரும்பிச் சென்றவர்களின் கதியே அப்படி இருக்கும்போது இங்கிருப்பவர்களையும் அங்கே அனுப்பினால் என்ன ஆகும் என்பதை இந்திய அரசு எண்ணிப் பார்க்க வேண்டும்.

அகதிகளை வலுக்கட்டாயமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் முயற்சியைக் கைவிடுமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்திய குடியுரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தை நீக்கி விரும்பும் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.


இலங்கை தமிழ் அகதிகள்இந்தியாமோடி அரசுதொல் திருமாவளவன்விடுதலச் சிறுத்தைகள்

You May Like

More From This Category

More From this Author