Published : 04 Feb 2015 12:08 pm

Updated : 04 Feb 2015 12:08 pm

 

Published : 04 Feb 2015 12:08 PM
Last Updated : 04 Feb 2015 12:08 PM

உலகத்தோட உசுரு எதுல இருக்கு?

செல்லக் குழந்தைகளே, குளம், ஏரி பக்கத்துல போகும்போது என்னை நீங்க பார்த்திருந்தாலும், தண்ணீல வாழ்ற ஏதோ ஒரு குட்டிப் பறவைன்னு நினைச்சிருப்பீங்க. பார்க்கிறதுக்குக் கறுப்பா இருக்கிற என்னோட பேரு முக்குளிப்பான்.

குளம், குட்டை, ஏரிகள்ல வாத்து மாதிரி நீந்திகிட்டு இருப்பேன். என்னை நீங்க கவனிச்சுப் பார்க்கலனாலும்கூட, நான் வாழ்ற நீர்நிலைகளை நிச்சயமா பார்த்திருப்பீங்க. ஏன்னா, நீர்நிலைகள் என்னைவிட ரொம்பப் பெரிசு. அதோட நீர்நிலை பக்கமா ஜில்லுனு வீசுமே இதமான தென்றல் காத்து, அதை மறந்திருக்க மாட்டீங்க.


நானும் என் அண்ணன், அக்கா, அம்மா, அப்பாவும் வாழ நீர்நிலைகள்தான் ஆதாரமா இருக்கு. எங்களால ரொம்ப தூரம் பறக்க முடியாது. எங்களுக்கு நல்லா நீந்த மட்டும்தான் தெரியும். ஆனா, நீர்நிலை வத்திப் போச்சுன்னா, அப்போ புதுசா வேற நீர்நிலைக்குப் பறந்து போயிடுவோம்.

ஆனா, இப்ப அப்படிப் பறந்து போய் வாழ்றதுக்கு எங்களைச் சுத்தி நிறைய நீர்நிலைகள் இல்லே. இங்கேயே ஜாக்கிரதையா இருந்துக்கோ செல்லம்னு அம்மா சொன்னாங்க.

எல்லா ஊர்கள்லயும் ஆறு ஓடுறதில்லையே. அந்த நேரத்துல, அந்த ஊர்ல இருக்குற குளம், ஏரிகள்ல இருந்துதான் குடிக்க தண்ணி, விவசாய நிலங்களுக்குத் தண்ணி கிடைக்குது. ஆனா, எல்லா நீர்நிலைகளும் கொஞ்சம் கொஞ்சமாக அழிஞ்சுக்கிட்டே வந்தா என்ன ஆகும்?

ஒரு நாள் மொத்தமா காணாமப் போயிடும், இல்லையா? நிறைய ஊர்ல பஸ் ஸ்டாண்டே நீர்நிலைகள் மேலதான் கட்டியிருக்காங்க. அப்படியும் இல்லேன்னா ஊரோட குப்பையெல்லாத்தையும் கொண்டுபோய், மொத்தமா கொட்டி வைக்கிறாங்க.

ஆனா, பஸ் ஸ்டாண்ட், கட்டிடங்கள், வீடுகள், மார்கெட்டை எல்லாம் கட்டுறதுனால மக்களுக்கு நல்லது தானேன்னு நீங்க கேட்கலாம். ஆனா, நீர்நிலைகளை மண்ணைப் போட்டு மூடி கட்டிடம் கட்டிட்டா, மழை பெய்யுற தண்ணி தேங்க எப்படி எடம் கிடைக்கும்? வெள்ளம் வந்ததும் மக்கள் அவஸ்தைப்படுவாங்க.

அதைவிடக் கொடுமை என்னன்னு கேட்டீங்கன்னா, இதே மக்கள் வெயில் காலத்துல குடத்தத் தூக்கிக்கிட்டு தெருத்தெருவா தண்ணியத் தேடி ஓடுவாங்க பாருங்க, அதுதான். இதுக்கு நல்ல உதாரணம் தமிழகத்தோட தலைநகரமான சென்னை. அங்க நல்லா மழை பெய்யும், அப்போ ஊரே வெள்ளக்காடா கிடக்கும். ஆனா, வெயில் காலத்துல தண்ணிக்கு அலைவாங்க. ஒரு குளத்தையோ, ஏரியையோ யாரு அழிச்சாலும், கடைசில இதுதான் பலனா கிடைக்குது.

ஏன்னா, நீர்நிலைகள்தான் மழைக்காலத்துல ‘ஸ்பாஞ்ச்’ மாதிரி தண்ணிய சேர்த்து வைச்சுக்கிட்டு, வெயில் காலத்துல தண்ணி கிடைக்க உதவுது. இத நாம முதல்ல புரிஞ்சுக்கணும். அது மட்டுமில்ல, நீர்ப்பிடிப்புப் பகுதிகள்லதான் குளம், ஏரியெல்லாம் இயற்கையாவே அமையும்.

இந்த நீர்ப்பிடிப்பு பகுதிகளைக் கண்டுபிடிச்சுத்தான் பழைய காலத்துல ஏரி, குளமெல்லாம் வெட்டினாங்க. அசோகர் மரம் நட்டார்னு சொல்றது மாதிரி, தமிழ்நாட்டுல சோழர் காலத்துல நிறைய குளங்கள் வெட்டினதா சொல்வாங்க.

பெரிய கோயில் இருக்குற பெரும்பாலான ஊர்கள்ல கோயிலுக்குன்னு தனியா குளம் இருக்கும். ஊரே அதைச் சுத்தித்தான் உருவாகியிருக்கும். அந்தக் குளத்துக்கு ஆத்துலேர்ந்தோ, ஏரிலேர்ந்தோ தண்ணி போகும். பக்கத்துல இருக்குற கிணறுகள்லயும் நல்லா தண்ணி கிடைக்கும்.

ஒவ்வொரு வருஷமும் குளத்தை மையமா வச்சு திருவிழாக்கள் நடக்கும். குளத்தையும் ஏரியையும் மக்களே தூர்வாருவாங்க. ஏரி வத்தப் போற நேரத்துல ஊரே சேர்ந்து மீன் பிடிச்சு கோலாகலமா சாப்பிடுவாங்க. இன்னைக்கு எல்லாமே காணாமப் போச்சு. கிணறு இல்ல, குளத்தைக் காணோம், ஏரியையும் அங்க இருந்த மீன்களையும் காணோம். குளத்துக்குப் போகும் நீர்ப்பாதைகள் இல்லாததால, குளங்கள் தூர்ந்து போச்சு.

மிச்சம் இருக்குற குளம், ஏரிகள்லயும் ஊரோட சாக்கடை, கழிவைக் கலக்குறாங்க. இதனால தண்ணி மாசுபட்டு விஷமா மாறுது. அது மட்டுமில்லாம கிருமிகள் அதிகரிச்சு, நோய்கள் பெருகவும் காரணமாக இருக்குது.

உங்க ஊர்ல நீர்நிலைகள் என்ன நிலைமைல இருக்குன்னு பாருங்களேன். நல்லா இருந்தா அதைப் பராமரிங்க. மோசமாக இருந்தா, சீரமைக்க முயற்சி பண்ணுங்க. இப்பவாவது காப்பாத்துங்க. அங்க இருக்குற தண்ணி, தாவரங்கள், பறவைகள், உயிரினங்களைக் காப்பாத்துனாதான் ஊரும் நல்லா இருக்கும்; நாமளும் நல்லா இருக்க முடியும். இதை எப்பவும் மறந்துடாதீங்க.

முக்குளிப்பான்வாத்துநீர்ப்பிடிப்பு பகுதிகள்விழிப்புணர்வு

You May Like

More From This Category

More From this Author