Published : 03 Feb 2015 02:53 PM
Last Updated : 03 Feb 2015 02:53 PM

கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் அதிரடி சதங்களில் நிலைகுலைந்த பாகிஸ்தான் தோல்வி

நேப்பியரில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் 119 ரன்கள் வித்தியாசத்தில் வென்று நியூசிலாந்து அணி பாகிஸ்தானை நசுக்கியது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை வென்றது.

முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 369 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 43.1 ஓவர்களில் 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் தொடரை முற்றிலும் இழந்தது. மேலும் தொடர்ந்து நியூசி.யிடம் 2-வது ஒருநாள் தொடரையும் இழந்துள்ளது பாகிஸ்தான்.

டாஸ் வென்ற நியூசி. முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. மெக்கல்லம் 5 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 27 பந்துகளில் 31 ரன்களை எடுத்து மார்டின் கப்திலுடன் இணைந்து 47 பந்துகளில் 43 ரன்கள் தொடக்கத்தை கொடுக்க, மார்டின் கப்தில் 88 பந்துகளில் 8 பவுண்டரி ஒரு சிக்சர் சகிதம் 76 ரன்களை எடுத்தார். கேன் வில்லியம்சுடன் இணைந்து 128 ரன்களை 2-வது விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்டது.

அதன் பிறகு வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்து பாக். பந்து வீச்சை மைதானம் நெடுக சிதறடித்தனர். பிலாவல் பட்டி தாக்குதலில் சிக்கினார். இவர் 10 ஓவர்களில் 93 ரன்களை கொடுத்து விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை. நியூசிலாந்து அணி கடைசி 10 ஓவர்களில் 116 ரன்களை விளாசியது. இதில் ராஸ் டெய்லர் 36 பந்துகளில் 73 ரன்களை அடித்து நொறுக்கினார்.

கடைசி ஓவரில் 2 பந்துகள் மீதமிருக்கையில் 92 ரன்களில் இருந்த ராஸ் டெய்லர் பிலாவல் பட்டி வீசிய பந்தை டீப் எக்ஸ்ட்ரா கவரில் அருமையான சிக்சரை அடித்து கடைசி பந்தை தேர்ட் மேன் திசையில் பவுண்டரி அடித்து 70 பந்துகளில் 13 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 102 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

நியூசிலாந்து அணியின் 100-வது ஒருநாள் சதமாகும் இது. கேன் வில்லியம்சன் ஒரு முனையில் பவர் ஷாட்கள் இல்லாமலேயே அழகாக பவுண்டரிகளை அடித்து 80 பந்துகளில் சதம் கண்டார். 88 பந்துகளில் 14 பவுண்டரி 1 சிக்சருடன் அவர் 112 ரன்கள் எடுத்து அகமது ஷேஜாதின் ஃபுல்டாஸை நேராக லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிலாவல் பட்டி மோசமாக வீசினார். ஷாட் பிட்ச் அல்லது ஓவர் பிட்ச் என்று வீச மெக்கல்லம் இவரை 3 பவுண்டரிகள் ஒரு சிக்சர் விளாசினார்.

இதனால் பவர் பிளேக்கு முன்னமேயே அப்ரீடி பந்து வீச அழைக்கப்பட்டார். மெக்கல்லமிற்கு முதல் ஓவரில் ஸ்டம்பிங் வாய்ப்பைக் கோட்டை விட்டார் சர்பராஸ் அகமட். ஆனால் 2-வது ஓவரில் அப்ரீடி பந்தை கட் செய்ய முயன்று அவர் பவுல்டு ஆனார். சர்பராஸ் அகமட் மீண்டும் ஒரு தவறு செய்தார் அதுதான் மிகவும் மோசமானதாக அமைந்தது. கடைசி 36 பந்துகளில் 73 ரன்கள் விளாசிய டெய்லர் 25 ரன்களில் இருந்த போது இதே அஃப்ரீடி பந்தில் சர்பராஸ் ஒரு ஸ்டம்பிங்கை மீண்டும் கோட்டைவிட்டார். 38-வது ஓவரில் இந்த ஸ்டம்பிங் வாய்ப்பு பறிபோனபோது டெய்லர் 25 ரன்களில் இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

30 ஓவர்களில் 181/2 என்று இருந்த நியூசிலாந்து கடைசியில் 369 ரன்களை எடுத்தது.

கடந்த டிசம்பர் முதல் கேன் வில்லியம்சன் 11 இன்னிங்ஸ்களில் 753 ரன்களை விளாசியுள்ளார். சராசரி 75.3. மேலும் கடந்த 19 இன்னிங்ஸ்களில் 12 முறை அவர் அரைசதம் கடந்துள்ளார்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் ஹபீஸ், ஷேஜாத் மூலம் 111 ரன்கள் தொடக்கம் கண்டது. இருவரும் சில டைட் பந்து வீச்சு மற்றும் டைட் பீல்டிங்கிற்கு எதிராக நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். ஷேஜாத் 62 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்த நிலையில் நேதன் மெக்கல்லம் பந்தில் முதல் விக்கெட்டாக பெவிலியன் திரும்பினார். பிறகு யூனிஸ் கான் (11) விக்கெட்டையும் பிளைட் பந்து மூலம் அடிக்க வைத்து வெளியேற்றினார் நேதன் மெக்கல்லம்.

மொகமது ஹபீஸ் அருமையாக விளையாடி வந்தார். அவர் 89 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்கள் சகிதம் 86 ரன்கள் எடுத்து கிராண்ட் எலியட் பந்தில் அவுட் ஆனார். இதற்கு முதல் பந்துதான் அவர் தப்பித்தார். ஆனால் அடுத்த பந்தே மீண்டும் ஒரு ஷாட்டை முயன்று வெளியேறினார்.

அதிரடி மன்னன் ஷாஹித் அஃப்ரீடி 11 ரன்கள் எடுத்திருந்த போது வெட்டோரியின் வைடு பந்தை டீப் எக்ஸ்ட்ரா கவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதிவேக வீச்சாளர் மில்னவிடம் 4 ரன்களில் உமர் அக்மல் வெளியேற 34-வது ஓவர் முடிவில் பாகிஸ்தான் 194/5 என்று ஆனது.

மிஸ்பா உல் ஹக் மட்டும் ஒரு முனையில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 45 ரன்கள் எடுத்து ஆடி வந்தார். ஆனால் அவரும் 43-வது ஓவரில் சவுதீயிடம் ஆட்டமிழந்தார். கடைசியில் பாகிஸ்தான் 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோற்றது.

நியூசி. தரப்பில் சவுதீ, மில்ன, மெக்கல்லம், கிராண்ட் எலியட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற போல்ட், வெட்டோரி தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக கேன் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x