Published : 22 Feb 2015 11:29 AM
Last Updated : 22 Feb 2015 11:29 AM

உலகக் கோப்பை: ஆப்கனிடம் திணறி வென்றது இலங்கை

இலங்கை - ஆப்கனிஸ்தான் இடையே நடைபெற்ற உலகக் கோப்பை லீக் போட்டியில், இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கடைசி கட்டத்தில் வென்றது.

233 ரன்கள் இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு, முதல் பந்திலேயே ஆப்கன் அதிர்ச்சி அளித்தது. திரிமன்னே ரன் ஏதும் எடுக்காமல் வீழ்ந்தார். அடுத்த ஓவரில் தில்ஷான் விழ, 6-வது ஓவரில் சங்கக்காராவும் வெளியேறினார். 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்களை மட்டுமே இலங்கை எடுத்திருந்தது.

கருணரத்னே 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க மறுமுனையில் ஜெயவர்த்தனே பொறுப்பாக ஆடி ரன் சேர்த்தார். இடைப்பட்ட ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலங்கை இலக்கை நோக்கி பயணித்தது. 41-வது ஓவரில் மேத்யூஸ் 44 ரன்களுக்கு வீழ்ந்தார். ஜெயவர்த்தனே 118 பந்துகளில் தனது 19-வது ஒரு நாள் சதத்தை எட்டினார்.

52 பந்துகளில் 55 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜெயவர்த்தனே ஆட்டமிழக்க ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியது. களத்தில் இருந்த பெரேரா, மெண்டிஸ் ஜோடி முதலில் சற்று நிதானித்தாலும் அடுத்த சில ஓவர்களில் தேவைக்கேற்ப அதிரடியாக ரன் சேர்க்க ஆரம்பித்தனர். முடிவில் 48.2 ஓவர்களில் இலங்கை வெற்றி இலக்கைக் கடந்தது. பெரேரா 43 ரன்களுடனும், மெண்டிஸ் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆட்ட நாயகனாக ஜெய்வர்த்தனே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக, இலங்கை டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. ஆப்கன் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் 3-வது வீரராக களமிறங்கிய ஸ்டானிக்சாய் அரை சதம் எடுத்தார். இலங்கையின் சிறப்பான பந்துவீச்சால் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்திய ஆப்கன் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ரன்களை எடுத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x