Last Updated : 17 Feb, 2015 10:30 AM

 

Published : 17 Feb 2015 10:30 AM
Last Updated : 17 Feb 2015 10:30 AM

மேற்குவங்கம், கோவா, ஆந்திராவில் இடைத்தேர்தலில் ஆளும் கட்சிகள் வெற்றி

மேற்குவங்கம், ஆந்திரா, கோவா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அந்தந்த மாநிலங்களில் ஆளும் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 13-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மேற்குவங்க மாநிலத்தில் கிருஷ்ணகஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சத்யஜித் பிஸ்வாஸ் 95,467 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் தனக்கு அடுத்தபடியாக வந்த பாஜக வேட்பாளரைவிட 37,033 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

இதே மாநிலத்தில் பொங்கான் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மமதபால தாகுர் 5,39,990 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் தனக்கு அடுத்தபடியாக வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் தேவேஷ் தாஸைவிட 2,11,794 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

ஆந்திர மாநிலம் திருப்பதி சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில், மாநிலத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.சுகுணா 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போட்டியிடவில்லை. காங்கிரஸ் டெபாசிட் இழந்தது.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், கோவா மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால் காலியான பனாஜி சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் பாஜக வேட்பாளர் சித்தார்த் குன்கோலீன்கர் காங்கிரஸ் வேட்பாளரைவிட 5,368 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

அருணாச்சலப் பிரதேச மாநிலம் லிரோமோபா சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நையமர் கர்பக், பாஜக வேட்பாளரைவிட 119 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

பாஜக சதி முறியடிப்பு: மம்தா

கொல்கத்தா

மேற்கு வங்க மாநிலம் புருளியா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் இடைத்தேர்தல் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:

இடைத்தேர்தலில் வெற்றியை பெற்றுத் தந்த கட்சித் தொண்டர்களுக்கு தலை வணங்குகிறேன். இது பொது மக்களின் மாயவித்தை. அதிசய நிகழ்வு. பாஜகவும் ஒருசில ஊடகங்களும் எங்கள் கட்சிக்கு எதிராக கூட்டு சதியில் ஈடுபட்டன. அதை மக்கள் முறியடித்திருக் கிறார்கள்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி வலிமையாகவும் ஒற்றுமையாக வும் உள்ளது என்பதை உணர்த் தும் வகையில் முடிவுகள் அமைந் துள்ளன. மதவாதத்தைத் தூண்டி வரும் சக்திகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டி இருக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சாரதா சீட்டு நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, திரிணமூல் காங்கிரஸ் முக்கிய பிரமுகர் களை சிபிஐ கைது செய்து வந்தது.

இதனால் ஆளும் கட்சியின் செல்வாக்கு சரிந்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், இடைத் தேர்தல் முடிவு அக்கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x