Last Updated : 02 Jan, 2015 11:24 AM

 

Published : 02 Jan 2015 11:24 AM
Last Updated : 02 Jan 2015 11:24 AM

பத்ம பூஷண் விருதுக்கு தோனி, சுஷீல் குமார் பெயர்கள் பரிந்துரை: கோலி, மிதாலி ராஜுக்கு பத்ம விருது கிடைக்குமா?

மல்யுத்த வீரர் சுஷீல் குமார், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஆகியோரின் பெயர்கள் பத்ம பூஷண் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதில், மத்திய உள்துறை அமைச்சகம் மனது வைத்தால் மட்டுமே நடப்பாண்டில் சுஷீல்குமாருக்கு பத்ம பூஷண் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

சுஷீல் குமார் 2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும், 2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.

ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றதையடுத்து பத்ம பூஷண் விருதுக்கு அவர் பெயரை விளையாட்டு அமைச்சகம் 2012-ம் ஆண்டு முதன்முறையாக பரிசீலித்தது.

உள்துறை நிராகரிப்பு

ஆனால் உள்துறை அமைச்சகம் அப்பரிந்துரையை நிராகரித்து விட்டது. சுஷீல்குமாருக்கு 2011-ம் ஆண்டுதான் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இரு பத்ம விருதுகள் ஒரே நபருக்கு வழங்கப்படும்போது குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இடைவெளி பேணப்பட வேண்டும் என வழிகாட்டு நெறிமுறையைக் காட்டி, உள்துறை அமைச்சகம் நிராகரித்திருந்தது.

இதனால், 2016-ம் ஆண்டுக்கு முன்பாக சுஷீலுக்கு பத்ம பூஷண் விருது சாத்தியமில்லை எனக் கூறப்பட்டது. தற்போது மீண்டும் அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச தகுதியின் அடிப்படையில், உள்துறை அமைச்சகம் 5 ஆண்டு இடைவெளி என்ற விதியை உள்துறை அமைச்சகம் தளர்த்திக் கொள்ள முடியும். எனவே, அந்த அடிப்படையில் அவருக்கு விருது வழங்கலாம் என கருதப்படு கிறது.

விளையாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, “விதிமுறைகள் தெரியும். இருப்பினும், சுஷீல் பத்ம பூஷண் விருதுக்குத் தகுதியானவரே. இதுவரை பத்ம விருதுகளுக்காக சாய்னா நெவால் உட்பட 20 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பத்ம ஸ்ரீ விருதுக்காக 3 பெயர்களை பரிந்துரைத்துள்ளோம்” என்றனர்.

தோனி, கோலி

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி யிலிருந்து ஓய்வு பெற்றுள்ள மகேந்திர சிங் தோனியின் பெயர் பத்ம பூஷண் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தோனி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும் ஒருநாள் மற்றும் டி-20 அணிக்கான கேப்டனாக நீடிக்கிறார்.

இதுதவிர கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளில் விராத் கோலி (பத்ம ஸ்ரீ), மிதாலி ராஜ் (பத்ம ஸ்ரீ) ஆகியோர் பெயர்களும் பத்ம விருதுகளுக்காக விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மகளிர் டேபிள் டென்னிஸில் எட்டு முறை தேசிய பட்டம் வென்ற முன்னாள் வீராங்கனை இந்து புரி, குத்துச் சண்டை தேசிய பயிற்சியாளர் குர்பாக்ஸ் சிங் சந்து, கால்பந்து வீரர் சமர் பானர்ஜி ஆகியோர் பெயர்களும் பத்ம ஸ்ரீ விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x