Published : 27 Dec 2014 12:56 PM
Last Updated : 27 Dec 2014 12:56 PM

பட்டுக் கூந்தலுக்குச் செம்பருத்தி

மற்றொரு பெயர்: செம்பரத்தை

தாவரவியல் பெயர்: Hibiscus rosa-sinensis

அடையாளம்: சிவப்பு நிற மலர்கள் பூக்கும், சுமாரான உயரத்துக்கு வளரும் புதர்த் தாவரம். பல்வேறு நிறங்கள், இதழ் எண்ணிக்கையில் வேறுபாட்டுடன் செம்பருத்தியில் பல வகைகள் உள்ளன. வருடம் முழுவதும் பூக்கக் கூடியது. வீடுகள், தோட்டங்களில் அதிகம் வளர்க்கப்படுகிறது. இதன் கிளைகளைக் கொண்டு இனப்பெருக்கம் செய்யலாம்.

தாயகம்: கிழக்கு ஆசியா

பொதுப் பயன்பாடு: பசிஃபிக் தீவுகளில் சாலட்களில் சேர்த்துச் சாப்பிடப்படுகிறது. இலை, பூ, வேர்ப் பகுதிகள் மருத்துவக் குணம் கொண்டவை. முடி உதிர்தல், சிறுநீர் கோளாறுகள், வெள்ளைப்படுதல் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

கைமருத்துவப் பயன்பாடு: சீன மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. சருமப் பாதுகாப்புக்கு உதவும். மலரை அரைத்துப் பூசிக்கொண்டால், புறஊதா கதிர்களைக் கிரகித்துக்கொண்டு சூரியத் தடுப்பாகப் பயன்படுகிறது.

செம்பருத்திப் பூவுடன் நான்கு மடங்கு தண்ணீர் சேர்த்து, கால் பாகமாகக் குறையும் வரை கொதிக்க வைக்கவும். இந்தக் கஷாயத்தைக் காலை, மாலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் சூடு, மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், வயிற்றுவலி, காய்ச்சல் முதலியவை குணமாகும்.

செம்பருத்திப் பூவுடன் ஆடாதோடை இலைகளைச் சம அளவில் சேர்ந்து கஷாயம் செய்து குடித்தால் வறட்டு இருமல், இருமலுடன் கூடிய இளைப்பு குணமடையும்.

செம்பருத்திப் பூவின் சாற்றுடன், 4 மடங்கு நெல்லிக்காய் சாறு, சிறிதளவு வெந்தயம், கற்றாழை சாற்றைச் சேர்த்து எண்ணெய் காய்ச்ச வேண்டும். இதைத் தலையில் தேய்த்தால் தலைவலி, கண், காது வலி, பல் வலி, மூச்சுக் கோளாறு முதலியவை நீங்கும். தலைமுடி உதிர்தல், இளநரை, பொடுகு போன்றவை குறையும்.

- நேயா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x