Published : 26 Dec 2014 10:55 AM
Last Updated : 26 Dec 2014 10:55 AM

மெல்போர்ன் டெஸ்ட்: மீண்டும் கேப்டன் ஸ்மித் அபாரம்; ஆஸ்திரேலியா 259/5

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்துள்ளது.

மீண்டும், எந்த ஒரு இந்திய பந்து வீச்சுக்கும் அசராத கேப்டன் ஸ்மித் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 72 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். பிராட் ஹேடின் பல பவுன்சர்களை எதிர்கொண்டு புதிய பந்தில் நிலைத்து 23 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். இருவரும் இணைந்து 6-வது விக்கெட்டுக்கு 43 ரன்களைச் சேர்த்துள்ளனர்.

ஸ்மித் இந்த டெஸ்ட் தொடரில் வைத்துள்ள சராசரி 223.50 என்பது குறிப்பிடத்தக்கது. 447 ரன்களை இந்தத் தொடரில் அவர் 2 சதங்கள், இரண்டு அரைசதங்களுடன் எடுத்துள்ளார்.

நாளை இவர்கள் இருவரையும் உடனடியாக வீழ்த்துவதோடு டெய்ல் எண்டர்களை சொற்பமாக இந்தியா வீழ்த்தினால்தான் இந்த டெஸ்ட் போட்டியில் வாய்ப்புகள் ஏற்படும். இல்லையெனில் கடந்த டெஸ்ட் போன்று கடைசி 5 வீரர்களை 250-260 ரன்கள் எடுக்கவிட்டால் மீண்டும் இந்திய அணிக்கு தோல்வி நெருக்கடியே ஏற்படும்.

இன்று காலை மெல்போர்னின் ஃபிளாட் மட்டையாளர்களுக்கான ஆடுகளத்தில் ஸ்மித் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார்.

இந்திய அணியிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக அறிமுக வீரர் கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். வருண் ஆரோனுக்கு பதிலாக மொகமது ஷமி வந்துள்ளார்

டேவிட் வார்னர் கையில் காயம் பட்டாலும் ஆடுவேன் என்று பிடிவாதமாக களமிறங்கினார். ஆனால் அவர் 2-வது ஓவரில் உமேஷ் யாதவின் லிஃப்டர் பந்துக்கு தோனியிடம் கேட்ச் கொடுத்து 0-வில் அவுட் ஆனார். ரவுண்ட் த விக்கெட்டில் வீசி அவரை செட்டில் ஆகவிட்டுக் கொண்டிருந்த பவுலர்கள் இன்று ஓவர் த விக்கெட்டில் வீசி அவரது பலவீனத்தைக் கண்டுபிடித்தனர்.

நல்ல அளவில் விழுந்த பந்து நன்றாக எழும்ப வார்னர் நின்ற இடத்திலிருந்து அதனை தொட்டார், பந்து மட்டையின் மேல்பகுதி விளிம்பில் பட்டு தவனிடம் 3-வது ஸ்லிப்பில் கேட்ச் ஆனது.

அதன் பிறகு வாட்சன், ராஜர்ஸுக்கு சில சுலபமான பவுண்டரி பந்துகளை வீசினர் இந்திய வேகப்பந்து கூட்டணி, மேலும் கள வியூகம் நெருக்கமாக அமைக்கப் படாததால் ராஜர்ஸ், வாட்சன் சுலபமாக சிங்கிள்களை எடுத்தனர். இதனால் இடது, வலது கூட்டணி மாறி மாறி பேட்டிங் முனைக்கு வர பவுலர்கள் லெந்த் கண்டுபிடிக்க கஷ்டப்பட்டனர். இந்நிலையில் உணவு இடைவேளைக்கு சற்று முன்னர் வாட்சனுக்கு தவன் கேட்சை கோட்டை விட்டார். 3 முறை பிடித்து விட முயன்றும் முடியவில்லை.

ராஜர்ஸ் வாட்சன் இருவரும் அரைசதம் கண்டனர். அரைசதம் கண்ட பிறகு ராஜர்ஸ், வாட்சனை அடுத்தடுத்து ஷமி, அஸ்வின் ஆகியோர் வீழ்த்தினர். 9 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அரைசதம் காணாத வாட்சன் 52 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தை ஸ்வீப் செய்ய முயன்று எல்.பி.ஆனார்.

பிறகு கேப்டன் ஸ்மித், ஷான் மார்ஷ் இணைந்து நிலைத்து ஆடி முக்கியமான 69 ரன்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். தேநீர் இடைவேளை முடிந்து ஷான் மார்ஷ் 32 ரன்களில் ஷமி பந்தை எட்ஜ் செய்து தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அறிமுக வீரர் ஜோ பர்ன்ஸ் போட்டிக்கு முன்பு பயங்கரமாகப் பேசினார் ஆனால் 13 ரன்களில் அவர் யாதவ் பந்தை புல் ஆட முயன்று, பந்து மட்டையின் அடிவிளிம்பில் பட்டு தோனியிடம் கேட்ச் ஆனது.

ஹேடின் ஷாட் பிட்ச் பவுன்சர்களை சரியாகக் கையாளவில்லை. ஆனால் அஸ்வினை நேராக ஒரு சிக்சர் அடித்தார்.

இன்று ஆஸ்திரேலியா அடித்த 20 பவுண்டரிகளில் ஷமி 9 பவுண்டரிகளையும், இசாந்த் 5 பவுண்டரிகளையும் விட்டுக் கொடுத்தனர். 2 சிக்சர்களும் அஸ்வின் பந்தில் அடிக்கப்பட்டது.

மொத்தத்தில் முதல் நாள் ஆட்டம் இரு அணிகளும் சரிசமமாகத் திகழ்ந்தன.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x