Published : 14 Dec 2014 01:14 PM
Last Updated : 14 Dec 2014 01:14 PM

ஐஎஸ்எல்: சென்னையை பந்தாடியது கேரளா

கொச்சியில் நேற்று நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதி முதல் சுற்றில் (முதல் லெக்) கேரளா பிளாஸ்டர்ஸ் 3-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி. அணியைத் தோற்கடித்தது.

இதன்மூலம் லீக் சுற்றில் சென்னையிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ள கேரளா, தனது இறுதிச்சுற்று வாய்ப்பையும் பிரகாசமாக்கிக் கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் 15 நிமிடங்கள் சென்னை ஆதிக்கம் செலுத்தியது. அதன்பிறகு ஆட்டம் கேரளா வசமானது. 27-வது நிமிடத்தில் விக்டர் கொடுத்த கிராஸில், கேரள வீரர் ஐஷ்ஃபாக் அஹமது கோலடித்துவிட்டு தனது டி-சர்ட்டை கழற்றி சுற்றினார்.

இதையடுத்து அவரை மஞ்சள் அட்டையால் எச்சரித்தார் நடுவர். முதல் கோல் விழுந்தபோது மைதானத்தில் இருந்த சுமார் 61 ஆயிரம் ரசிகர்களும் உற்சாகமாயினர். கேரள அணியின் உரிமையாளர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங்குடன் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரும் மகிழ்ச்சி பெருக்கில் துள்ளிக்குதித்தார். முதல் கோலடிக்கப்பட்ட மகிழ்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள்ளாகவே அடுத்த கோலை (29-வது நிமிடம்) அடித்தது கேரளா. இந்த கோலை இயான் ஹியூம் அடித்தார். பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 52-வது நிமிடத்தில் இலானோவுக்குப் பதிலாக புருனோ களமிறக்கப்பட்டார்.

சென்னை அணி தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை ஆடினாலும், கடைசி வரை கோலடிக்க முடியவில்லை. இதனிடையே 90-வது நிமிடத்தில் கேரளத்தின் சுஷாந்த் கோலடிக்க, அந்த அணி 3-0 என அபார வெற்றி பெற்றது. வரும் செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெறவுள்ள அரையிறுதி 2-வது சுற்றில் கேரளாவும், சென்னையும் மோதவுள்ளன. அதில் சென்னை அணி அதிக கோல் வித்தியாசத்தில் வென்றாலொழிய அரையிறுதிக்கு முன்னேற முடியாது. ஒருவேளை இரு அணிகளும் சமநிலை பெற்றால், இறுதிச்சுற்றை தீர்மானிக்க கூடுதல் நேரமும், பெனால்டி ஷூட் அவுட்டும் வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x