Last Updated : 16 Dec, 2014 12:58 PM

 

Published : 16 Dec 2014 12:58 PM
Last Updated : 16 Dec 2014 12:58 PM

விராட் கோலியின் அணுகுமுறை சரியா?

டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றதுமே பலர் மனதில் எழுந்திருக்கக்கூடிய கேள்வி இதுதான். “வெற்றிபெற வேண்டும் என்று ஆடியது சரியா?” இந்திய அணித் தலைவர் விராட் கோலி, பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்த ஒரு கருத்து இதற்குப் பதிலாக அமைந்தது. “டிராவுக்காக ஆடியிருந்தால் 150 ரன் வித்தியாசத்தில் தோற்றிருப்போம்.” இது சரிதானா? டிராவுக்காக ஆடியிருந்தால் இந்தியா படு கேவலமாகத் தோற்றிருக்குமா? இப்போது வெற்றிக்காக ஆடியதால்தான் வெற்றிக்கு மிக அருகில் வர முடிந்ததா? கடைசியில் தோல்விதான் கிடைத்தது என்றாலும் இந்த அணுகுமுறையில் ஏதேனும் பலன் இருக்கிறதா?

ஒரு போட்டியை எப்போது டிரா செய்ய முயற்சிக்க வேண்டும்? அடிக்க வேண்டிய ரன் விகிதம் 5 அல்லது அதற்கு மேல் இருக்கும்போது. முக்கியமான விக்கெட்டுகள் விழுந்துவிட்ட நிலையில் இனி வெற்றிபெற வாய்ப்பில்லை என்பது தெளிவாகத் தெரியும்போது. அடிக்கப்போனால் விக்கெட் விழும் என்பது உறுதியாக இருக்கும்போது. அடிலெய்டில் இத்தகைய நிலைகளில் ஏதேனும் இருந்ததா? இல்லை என்பது கண்கூடு.

ஒரு ஓவருக்கு சுமார் 4 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற நிலை. கடைசி நாள் ஆட்டத்தின் முதல் பகுதியில் விரைவிலேயே இரண்டு விக்கெட்டுகள் விழுந்தாலும் முரளி விஜயும் கோலியும் தாக்குப் பிடித்து ஆடி இன்னிங்ஸை நிலை நிறுத்தினார்கள். உணவு இடை வேளைக்கு முன்பு 2 விக்கெட் இழப் புக்கு 105. ரன் தேவை விகிதம் நான்குக் குப் பக்கத்திலேயே இருந்தது. இந்தியா வெற்றிபெறலாம் என்னும் நிலை உருவானது. ஆனால் கடைசி நாள் ஆடுகளத் தில் ஆடுவது கடினம் என்பதாலும் இந்திய மட்டை வரிசையின் தடுமாற்றம் குறித்த யதார்த்தத்தாலும் வெற்றி குறித்த ஐயமும் வலுவாகவே இருந்தது.

தவறு எங்கே?

தவறு எங்கே நடந்தது? வெற்றி பெற முயன்றதாலா? முன்னணி மட்டையாளர் யாரும் வெற்றி பெற முயலும் ஆவேசமான ஷாட்களால் அவுட் ஆகவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். ஆடுகளம் சுழல் பந்துக்குச் சாதகமாக இருந்தது என்றாலும் ஆட முடியாத அளவில் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும். குறிப்பாக ரோஹித் சர்மாவும் சஹாவும் அவுட் ஆன விதம் சுழல் பந்தைக் கணித்து ஆடுவதில் அவர்களது அனுபவமின்மையை அம்பலப்படுத்தியது.

லயன் மட்டையாளரின் கண் பார்வை மட்டத்துக்கு மேல் பந்தைத் தூக்கி வீசிக்கொண்டிருந்தார். அப்படிப்பட்ட பந்துகளை முன்னே நகர்ந்து பந்து விழும் இடத்துக்குச் சென்று ஆடலாம். அல்லது பந்து எவ்வளவு எழும்புகிறது, எப்படித் திரும்புகிறது என்பதைக் கணித்து ஆட வசதியாகப் பின் காலில் சென்று காத்திருக்க வேண்டும். ரோஹித்தும் சஹாவும் இதைச் சரியாகச் செய்யவில்லை. ரஹானேயும் தவனும் தவறான முறையில் தீர்ப்பளிக்கப்பட்டு வெளி யேறினார்கள். அடிக்கடி தடுமாறி னாலும் உறுதியான மனநிலையுடன் ஆடிக்கொண்டிருந்த விஜய் சதத்தை நெருங்கும்போது பதற்றத்தால் ஆட்டமிழந்தார்.

ஆக்கபூர்வமான அணுகுமுறை

ரஹானே அல்லது சஹா ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் கோலியும் விஜயும் எடுத்த ரன்களுக்குப் பலன் கிடைத்திருக்கும். கோலி அவுட் ஆனபோது மட்டையாளர் என்று சொல்லத்தக்க யாருமே களத்தில் இல்லை என்னும் நிலையில் முடிவு என்பது வெறும் சம்பிரதாயமாகிவிட்டது.

வெற்றி பெற வேண்டும் என்னும் ஆக்கரீதியான அணுகுமுறையுடன் கவனத்துடன் ஆடிக்கொண்டிருந்த கோலியும் விஜயும் களத்தில் இருந்தவரை டிராவைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை. இந்த அளவுக்கு ஆடிய பிறகும் வெற்றி பெற முடியுமா என்னும் ஐயத்துடன் டிராவுக்காக ஆடினால் அது தன்னம்பிக்கை இன்மையையே வெளிப்படுத்தும். அதுவே தோல்வியடைந்ததற்குச் சமம். அத்தகைய மனநிலையுடன் ஆடும் மட்டையாளரை வீழ்த்துவதும் எளிது.

வெற்றி என்பது சாத்தியமில்லை என்னும் நிலையில்தான் டிராவுக்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். அதுவே போர்க்குணம். அதை வெளிப்படுத்தியதற்காக கேப்டன் கோலியையும் அவரது அணுகுமுறைக்கு ஏற்ப ஆடிய இந்திய மட்டையாளர்களையும் பாராட்ட வேண்டும்.

ரோஹித் ஓரிரு ஸ்வீப் ஷாட்களை ஆட முயன்றபோது பந்து மட்டையில் படாமல் நழுவியது. ஆனால், மறுமுனையில் இருந்த கோலி அவரை அதைரியப்படுத்தவில்லை. எந்த ஷாட் சரி என்று உன் மனதுக்குப் படுகிறதோ அதை நீ ஆடு என ஊக்கப்படுத்தினார். இதுதான் ஆக்கபூர்வமான அணுகுமுறை.

ரோஹித் அவுட் ஆன விதம் அவரது பலவீனத்தை அம்பலப்படுத்துகிறது. அதை வைத்து அந்த அணுகுமுறை தவறு என்று சொல்ல முடியாது. மேலும் அனுபவம் கூடக்கூட இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ரோஹித், சஹா போன்றவர்கள் மேலும் நன்றாக ஆடக்கூடும். ஆனால் பயந்து பயந்து ஆடினால் ஒருபோதும் போராட முடியாது. வெற்றியை யாரும் தாம்பாளத் தட்டில் வைத்துக் கொடுக்க மாட்டார்கள். அனுபவமும் போர்க்குணமும் சேர்ந்துதான் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும்.

சென்னை டெஸ்ட்

மட்டையைக் கையில் ஏந்திய முனிவரைப் போல அத்தனை நேரம் ஆடிக்கொண்டிருந்த கோலி ஒரு கணம் அவசரப்படாமல் இருந்திருந்தால் அவரது அணுகுமுறைக்கு உரிய பலன் கிடைத்திருக்கலாம். அப்படிக் கிடைக்காமல்போனதால் அந்த அணுகுமுறையைக் குறை சொன்னால் இந்தியாவால் ஒருபோதும் அசாத்தியமான வெற்றிகளைப் பெறவே முடியாது. 2008-ல் சென்னை டெஸ்டில் கிட்டத்தட்ட அசாத்தியமான இலக்கு (387) இருந்தபோது நான்காம் நாள் மாலை வீரேந்திர சேவாக் ஆடிய துணிச்சலான ஆட்டம்தான் (68 பந்துகளில் 83) வெற்றிக்கு வித்திட்டது.

அடுத்த நாள் சச்சின் டெண்டுல்கரும் யுவராஜ் சிங்கும் மிக அற்புதமாக ஆடி வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் சென்றாலும் சேவாகின் தீரமிக்க இன்னிங்ஸ்தான் வெற்றியைப் பற்றி யோசிக்கலாம் என்பதைச் சாத்தியமாக்கியது. இதுபோன்ற தருணங்களில்தான் ஒரு அணி தன் எல்லையை விரிவுபடுத்துகிறது.

கோலியின் அணுகுமுறையும் அத்தகையதுதான். ஒருவேளை டிராவுக்காக ஆடியிருந்தால் விக்கெட்டை இழக்கக் கூடாது என்னும் பதற்றமே விக்கெட் இழப்பைத் துரிதப்படுத்தியிருக்கவும் கூடும். முயலைக் கொன்ற அம்பைக் கையில் வைத்திருப்பதைக் காட்டிலும் யானையைக் கொல்ல முயன்று தோற்ற வேலை ஏந்துவதே வீரனுக்கு அழகு என்கிறார் வள்ளுவர். இந்தியா வீரனைப் போலப் போராடியது. வெற்றி, தோல்வியைவிட முக்கியமானது இது.

பாராட்டுவோம்

இந்த டெஸ்ட் தொடரை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானல் அதற்கான விளம்பரங்களில் ‘சிறியவர்கள் பெரியவர்களாகும் தருணம்’ என்னும் ஒரு வாக்கியத்தைப் பயன்படுத்துகிறது. இந்தத் தொடரின் சவாலைக் குறிக்கும் வாக்கியம் அது. இளம் இந்திய அணியை மனதில் கொண்டு எழுதப்பட்டது. இந்தப் பையன்கள் தாங்கள் பெரியவர்களாகி வருவதை நிரூபித்திருக்கிறார்கள். அதற்காக அவர்களைப் பாராட்டுவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x