Published : 09 Dec 2014 02:09 PM
Last Updated : 09 Dec 2014 02:09 PM

தவறாகத் தொடங்கி சரியாக நிறைவு செய்த இந்தியா: ஆஸ்திரேலியா 354/6

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் தொடக்கத்தில் தவறாக பந்து வீசிய இந்திய அணி முடிவில் சிறப்பாக வீசியது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 354 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் ஸ்டீவன் ஸ்மித் 72 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸின் மறைவைத் தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்ட முதல் டெஸ்ட் போட்டி, இன்று அடிலெய்டில் துவங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக புதிய வீரர் கரன் சர்மா சேர்க்கப்பட்டார்.

துவக்க வீரராக ரோஜர்ஸுடன் களமிறங்கிய வார்னர், ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தவறான தொடக்கம்:

மொகமது ஷமியும், வருண் ஆரோனும் தொடக்க ஓவர்களை தவறான முறையில் தொடங்கினர். ராஜர்ஸ், வார்னர் இருவரும் இடது கை ஆட்டக்காரர்கள். ஓவர் த விக்கெட்டில் வீசி பந்தை உடலின் குறுக்காக வெளியே இழுப்பதுதான் அவர்களைப் பதட்டமடையச் செய்திருக்கும், ஆனால் ரவுண்ட் த விக்கெட் எடுத்து இடது கை பேட்ஸ்மென்கள் இருவரும் இரு கண்களாலும் பந்தை பார்க்கும்படியாக வீசினர். மேலும் பந்தின் லெந்த் ஓவர் பிட்சாக அமைந்தது. குட் லெந்த்திற்கு சற்று முன்னே பந்தை பிட்ச் செய்து வெளியேவோ, உள்ளேயோ கொண்டு சென்றிருக்க வேண்டும், மாறாக நேர் நேர் தேமாவாக வீசினர்.

இதனால் ஒரு நாள் போட்டியைப் போல, பவுண்டரிகளில் ரன் சேர்த்தார் வார்னர். இந்திய பந்துவீச்சளர்கள் முகமது ஷமியும், வருண் ஆரோனும் செய்வதறியாது திகைத்தனர். வருண் ஆரோன் தனது முதல் 2 ஓவர்களில் 5 பவுண்டரிகளை விட்டுக் கொடுக்க மொகமது ஷமி 3 பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தார். 4-வது ஓவர் முடிவில் 40 ரன்கள் என்று ஸ்கோர் போர்டு காட்டியது

தொடர்ந்து இவர்கள் இப்படியேதான் வீசினர். இருவரும் 12 ஓவர்களில் முறையே 75 மற்றும் 77 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தனர்..

இஷாந்த் சர்மா வந்துதான் எப்படி வீச வேண்டும் என்று காண்பித்தார் ரவுண்ட் த விக்கெட்டில் வீசினாலும் ஓவர் தி விக்கெட்டில் வீசினாலும் சரியான இடங்களில் பந்தை பிட்ச் செய்ய வேண்டும் என்பதை அறிந்து செயல்பட்டார்.

மறுமுனையில் நிதானமாக ஆடிவந்த ரோஜர்ஸ் 9 ரன்களுக்கு, இஷாந்த் சர்மாவின் ஓவரில் ஆட்டமிழந்தார். அது ஒரு துல்லியமான லெந்த் பந்து. வெளியே எடுத்துச் சென்றார். ராஜர்ஸ் அதனை ஆட சபலம் கொண்டு வீழ்ந்தார். தொடர்ந்து அதிரடியாகவே ஆடிவந்த வார்னர் 45 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்தார். ஆனால் புதிதாக களமிறங்கிய ஷேன் வாட்சன், 12 ரன்கள் மட்டுமே எடுத்து வருண் ஆரோன் பந்தில் ஆட்டமிழந்தார்.

60 ரன்களில் முதுகுவலி காரணமாக வெளியேறிய கிளார்க்:

உணவு இடைவேளைக்கு சிறுது நேரம் முன்பு, ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க், வார்னருடன் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து இந்த ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 106 பந்துகளில் வார்னர் சதத்தை தொட்டார். சக வீரர் பிலிப் ஹியூஸின் மறைவுக்கு அடுத்து அடித்த சதம் என்பதால் தனது கொண்டாடத்தை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தினார். மறுமுனையில் கிளார்க் 69 பந்துகளில் அரை சதம் எடுத்தார்.

உறுதியாக ஆடிவந்த இந்த இணையால் கண்டிப்பாக வலுவான ஸ்கோரை ஆஸ்திரேலியா எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, 60 ரன்கள் எடுத்திருந்த கிளார்க், முதுகில் ஏற்பட்ட காயத்தினால் மேற்கொண்டு ஆடமுடியாமல் களத்தை விட்டுச் சென்றார்.

அடுத்து களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித், வார்னருடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தார். 145 ரன்கள் எடுத்திருந்த போது கரண் சர்மாவின் பந்தில் வார்னர் ஆட்டமிழந்தார். கரண் சர்மாவின் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. கரண் சர்மா இந்தத் தருணங்களில் அபாரமாக வீசி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கோலியும் சரியான இடத்தில் பீல்டரை நிறுத்தி வைத்திருந்தார். வார்னர் மேலேறி வந்து மிட்விக்கெட்டில் சிக்ஸ் அடிக்க நினைத்தார். பந்து உயரம் சென்ற அளவுக்கு தூரம் செல்லவில்லை.

சரியான நிறைவு:

தேநீர் இடைவேளைக்குப் பிறகு கரண் சர்மா அபாரமாக வீசினார். விக்கெட் எடுப்பது போல் இருந்தது அவரது பந்து வீச்சு. இடையில் முரளி விஜய், வார்னருக்கு ஒரு ரன் அவுட் வாய்ப்பை கோட்டை விட்டார். கரண் சர்மா ஒரு ஸ்டம்பிங் வாய்ப்பை உருவாக்கினார் ஆனால் தகையவில்லை.

வார்னர் ஆட்டமிழந்தவுடன் ஆஸ்திரேலியாவின் அதிரடி ரன்குறைப்பும் குறைந்தது. களத்தில் இருந்த மிட்சல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித் இருவரும் நிதனமான டெஸ்ட் பாணி ஆட்டத்தை தொடர்ந்தனர். 84 ஓவர்கள் முடிவில் 345 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த ஆஸ்திரேலியா, 2-வது புதிய பந்தை எடுத்த பின்பு அடுத்த சில ஓவர்களில் மேலும் 3 விக்கெட்டுகளை இழந்தது.

ஆரோன் வீசிய ஓவரில் 41 ரன்கள் எடுத்த மார்ஷ் ஆட்டமிழந்தார். ஷமி தனது அடுத்தடுத்த ஓவர்களில் லயனையும், ஹாடினையும் வெளியேற்றினார். 90-வது ஓவரில் ஹாடின் ஆட்டமிழந்தவுடன், இன்றைய நாள் ஆட்டம் முடிந்தது. முடிவில் 354 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்திருந்தது.

அபாய வீரர் மிட்செல் மார்ஷ் வருண் ஆரோனின் கூடுதல் பவுன்சில் கல்லியில் கோலியிடம் கேட்ச் கொடுத்தார். நேதன் லயன் காலைப் பயன்படுத்தாததால் 3 ரன்களில் ஷமியின் பந்தை ஸ்டம்பில் வாங்கி விட்டுக் கொண்டார். பிராட் ஹேடின் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் போராடிக்கொண்டிருந்தார். கடைசியில் ஷமியின் அபாரமான பந்தில் சஹாவிடம் கேட்ச் கொடுத்து 0-வில் வெளியேறினார்.

விக்கெட் எடுக்க முடியாத நேரங்களில் ரன்களைக் கட்டுப்படுத்துவது அவசியம். இந்திய பவுலர்கள் இசாந்த் சர்மா நீங்கலாக மற்றவர்கள் இதில் சோடை போயினர். இதனா. 90 ஓவர்களில் 354 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் டைட் செய்திருந்தால் 290 அல்லது 300 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என்பது இந்தியாவுக்கு மனரீதியான பலத்தை அளித்திருக்கும். நாளை 400 ரன்களுக்குள் ஆஸ்திரேலியாவை சுருட்ட முடிந்தால் உண்மையில் இந்த பந்து வீச்சு வரிசை தன் காரியத்தை சரியாகச் செய்து முடித்ததாகவே கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x