Last Updated : 01 Dec, 2014 08:46 AM

 

Published : 01 Dec 2014 08:46 AM
Last Updated : 01 Dec 2014 08:46 AM

கிரிக்கெட் போட்டியில் பந்து தாக்கி இந்திய வம்சாவளி அம்பயர் மரணம்: ஒரே வாரத்தில் நிகழ்ந்த 2-வது சோக சம்பவம்

இஸ்ரேல் தேசிய லீக் கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன் அடித்த பந்து தாக்கியதில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த நடுவர் ஹிலெல் அவஸ்கார் (55) உயிரிழந்தார்.

ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸ் பவுன்சர் தாக்கி உயிரிழந்த துக்கத்திலிருந்து மீள்வதற்குள் அவஸ்கார் மரணத்தால் அடுத்த அதிர்ச்சியை சந்தித்துள்ளது கிரிக்கெட் உலகம்.

இஸ்ரேலில் உள்ள துறைமுக நகரமான ஆஷ்தாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேசிய லீக் கிரிக்கெட் போட்டியில் அவஸ்கார் நடுவராக செயல்பட்டிருந்தார். அப்போது பேட்ஸ்மேன் ஸ்ட்ரெய்ட் திசையில் அடித்த பந்து எதிர்முனையில் இருந்த ஸ்டெம்பின் மீது பட்டு அவஸ்காரின் கழுத்துப் பகுதியில் தாக்கியது. அப்படியே மைதானத்தில் சரிந்த அவஸ்காருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

வீரர்கள் வேதனை

இது தொடர்பாக யோனா என்ற கிரிக்கெட் வீரர் கூறுகையில், “பேட்ஸ்மேன் வேகமாக அடித்த பந்து முதலில் எதிர்முனையில் இருந்த ஸ்டெம்பில் பட்டு, பின்னர் அவஸ்காரின் கழுத்துப் பகுதியில் தாக்கியது. அவர் அப்படியே சரிந்து விழுந்தார். வீரர்கள் அனைவரும் சேர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் அவரை காப்பற்றமுடியவில்லை. அவரின் மரணம் வீரர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார். அவஸ்காருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் கூறுகையில், “பந்து தாக்கியவுடனேயே அவஸ்காருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது” என்றனர்.

கடைசிப் போட்டி

இஸ்ரேல் கிரிக்கெட் சங்க தலைமைச் செயல் அதிகாரி நார் குட்கெர் கூறுகையில், “இந்த சீசனில் அவஸ்கார் நடுவராகப் பணியாற்றியதுதான் கடைசிப் போட்டி. அவருடைய மரணம் இஸ்ரேல் கிரிக்கெட் வட்டாரத்தில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இருந்தோம். அவருடைய மரணம் அவருடைய குடும்பத்தினருக்கும், இஸ்ரேல் கிரிக்கெட்டுக்கும் மிகப்பெரிய இழப்பாகும்” என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் இஸ்ரேல் போலீஸார், அவஸ்காரின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.

சாதனை மன்னன்

இஸ்ரேல் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்த அவஸ்கார், அந்த அணியின் கேப்டனாகவும் இருந்தார். அவர் 5 ஐசிசி டிராபி போட்டிகளில் இஸ்ரேல் அணிக்காக விளையாடியிருக்கிறார். கடைசியாக 2006-ல் நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப் 2-வது டிவிசன் போட்டியில் விளையாடினார். இடது கை சுழற்பந்து வீச்சாளரும், அதிரடி பேட்ஸ்மேனுமான அவஸ்கார், ஓர் ஆட்டத்தில் அதிகபட்சமாக 244 ரன்கள் குவித்துள்ளார். அதுதான் இன்றளவிலும் இஸ்ரேல் லீக்கில் தனியொருவர் எடுத்த அதிகபட்ச ரன் சாதனையாக உள்ளது. கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு நடுவரான அவஸ்கார், இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் நடுவராக செயல்பட்டு வந்தார்.

அவஸ்காரின் மரணத்தைத் தொடர்ந்து இஸ்ரேலில் நடைபெற்று வரும் வின்டர் லீக் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் அடுத்த வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

மும்பையில் பிறந்தவர்

அவஸ்காரின் பூர்வீகம் மும்பையாகும். தனது 12 வயது வரை மும்பையில் வளர்ந்த அவர், பின்னர் இஸ்ரேலுக்கு இடம்பெயர்ந்தார். இது தொடர்பாக அவருடைய நெருங்கிய நண்பர் சாமுவேல் கூறுகையில், “அவஸ்கார் மும்பையில் இருந்து இஸ்ரேலுக்கு வந்தபோது அவருக்கு 10-லிருந்து 12 வயதுக்குள் இருக்கும். அவர் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் ஆற்றல் வாய்ந்த வீரராகத் திகழ்ந்தார்” என்றார். அவஸ்காருக்கு மனைவியும், இரு மகள்களும் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x