Published : 13 Nov 2014 10:29 AM
Last Updated : 13 Nov 2014 10:29 AM

கொல்கத்தாவில் இன்று 4-வது ஒருநாள் ஆட்டம்: அதிரடியைத் தொடரும் முனைப்பில் கோலி படை

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது.

முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்திய அணி, எஞ்சிய ஆட்டங்களிலும் அதிரடி வெற்றியைப் பெறுவதில் தீவிரமாக இருப்பதால் இந்தப் போட்டியிலும் பெரிய அளவில் ரன் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் தொடரை இழந்துவிட்ட இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கும்.

இந்திய அணியில் இதுவரை ஆடாத மற்றும் கடைசி இரு போட்டிகளுக்காக அணியில் சேர்க்கப்பட்டுள்ள வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிப்பதற்கு இந்தப் போட்டி நல்ல வாய்ப்பாக இருக்கும். உலகக் கோப்பைக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் இந்திய அணி தங்களின் பலத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ள இது சரியான தருணம்.

ரோஹித், உத்தப்பா

ஷிகர் தவன், ரவீந்திர ஜடேஜாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் காயத்திலிருந்து மீண்டுள்ள ரோஹித் சர்மா மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரோஹித் சர்மாவை 5-வது பேட்ஸ்மேனாக களமிறக்க தோனி விரும்பினாலும், தற்போதைய கேப்டன் கோலியோ, “ரோஹித் சர்மா இதற்கு முன்பு களமிறங்கிய அதே இடத்திலேயே இலங்கைக்கு எதிராகவும் களமிறக்கப்படுவார்” என சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் அஜிங்க்ய ரஹானேவுடன் ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்குவது உறுதியாகியுள்ளது. விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள ராபின் உத்தப்பா, மிடில் ஆர்டரில் களமிறங்குவார் என தெரிகிறது.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் உமேஷ் யாதவுடன் வினய் குமார் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈடன் கார்டன் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அஸ்வின், அக்ஷ்ர் படேல், கரண் சர்மா என 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மென்டிஸ் வருகை

கடந்த 3 போட்டிகளில் படுதோல்விகளைச் சந்தித்த இலங்கை அணி அஜந்தா மென்டிஸ், திரிமானி, சன்டிமல் உள்ளிட்டோரின் வருகையால் ஓரளவு பலம் பெற்றுள்ளது. பேட்டிங்கில் சரியான தொடக்கம் அமையாமல் இலங்கை அணி தடுமாறி வருகிறது. அதனால் இந்த ஆட்டத்தில் ஜெயவர்த்தனா தொடக்க வீரராக களமிறக்கப்படுவார் என தெரிகிறது. அதற்கு அவரும் விருப்பம் தெரிவித்துள்ளார். ஜெயவர்த்தனா, கேப்டன் மேத்யூஸ், தில்ஷான் ஆகியோரை மட்டுமே பேட்டிங்கில் நம்பியுள்ளது இலங்கை. பின்வரிசையில் சன்டிமல், திரிமானி ஆகியோர் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த அணியின் ரன் குவிப்பு அமையும்.

மென்டிஸின் வருகை அந்த அணியின் பந்துவீச்சுக்கு பலம்சேர்க்கும் என்றாலும், இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த அந்த அணி போராட வேண்டியிருக்கும். சமிந்தா எரங்காவின் வருகை இலங்கையின் வேகப்பந்து வீச்சுக்கு வலு சேர்த்துள்ளது.

உலகக் கோப்பையில் ரோஹித் முக்கிய பங்கு வகிப்பார்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய வீரராக ரோஹித் சர்மா திகழ்வார் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

ரோஹித் சர்மா அடிக்க ஆரம்பித்துவிட்டால் மிகப்பெரிய அளவில் ரன் குவிப்பதோடு, வெற்றியையும் தேடித்தந்துவிடுவார். அவருடைய பங்களிப்பு அணிக்கு முக்கியமானது. அது அவரை மீண்டும் அணிக்கு கொண்டு வரும்.

அவர் இதற்கு முன்பு எந்த இடத்தில் களமிறங்கினாரோ அதே இடத்தில் மீண்டும் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. அது உலகக் கோப்பைக்கு முன்னதாக அவருக்கும், அணிக்கும் நம்பிக்கையைக் கொடுக்கும். இந்தத் தொடரின் எஞ்சிய இரு போட்டிகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள முத்தரப்புத் தொடர் ஆகியவை ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக சிறப்பாக விளையாட உதவும். அவரால் முடிந்த அளவுக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பை நாங்கள் வழங்குவோம்” என்றார்.

150-வது ஆண்டு கொண்டாட்டம்

வரலாற்றுச் சிறப்புமிக்க ஈடன் கார்டன்ஸ் மைதானத்தின் 150-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நேற்று தபால் தலை வெளியிடப்பட்டது. இதில் முன்னாள் இந்திய கேப்டன் அஜித் வடேகர், திலீப் வெங்சர்க்கார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சங்ககாரா அதிருப்தி

இந்தியாவுக்கு எதிரான கடைசி இரு போட்டிகளில் தனக்கு ஓய்வளிக்கப்பட்டது வருத்தமளிப்பதாக இலங்கையின் மூத்த வீரரான குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “குறிப்பாக ஒரு தொடரில் அணி தோற்றுக் கொண்டிருக்கும்போது அந்தத் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேற யாரும் விரும்பமாட்டார்கள்.

இலங்கை அணி தோற்கும்போதெல்லாம் நாங்கள் அனைவரும் ஒன்றாக இருந்து வெற்றிப் பாதைக்கு திரும்புவதையே விரும்புகிறோம். ஒரு தொடரில் வெற்றி பெறும்போது ஒருவரை நீக்கினால் அதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றார்.

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா, அம்பட்டி ராயுடு, சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா, அஸ்வின், உமேஷ் யாதவ், தவல் குல்கர்னி, வினய் குமார், ஸ்டூவர்ட் பின்னி, கரண் சர்மா, அக்ஷர் படேல், கேதார் ஜாதவ்.

இலங்கை: ஏஞ்செலோ மேத்யூஸ் (கேப்டன்), குசல் பெரேரா, திலகரத்னே தில்ஷான், லஹிரு திரிமானி, மஹேல ஜெயவர்த்தனா, தினேஷ் சன்டிமல், ஆஷன் பிரியாஞ்சன், நிரோஷன் டிக்வெல்லா, திசாரா பெரேரா, நுவன் குலசேகரா, லஹிரு கேமேஜ், சதுரங்கா டி சில்வா, சீகுகே பிரசன்னா, அஜந்தா மென்டிஸ், சமிந்தா எரங்கா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x