Published : 13 Jul 2019 08:58 AM
Last Updated : 13 Jul 2019 08:58 AM

அரை இறுதி சுற்றுடன் வெளியேற்றம்: இந்திய அணியின் செயல் திறனை மறு ஆய்வு செய்கிறது சிஓஏ குழு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரை இறுதி சுற்றுடன் வெளியேறிய இந்திய கிரிக்கெட் அணியின் செயல் திறனை உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழு (சிஓஏ) மறு ஆய்வு செய்ய உள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, அரை இறுதி ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியிடம் தோல்வியடைந்த நிலையில் நாளை இங்கிலாந்தில் இருந்துதாயகம் புறப்படுகிறது. லீக் சுற்றில் இந்திய அணி அபாரமாக விளையாடிய நிலையில் அரை இறுதி சுற்றுடன் வெளியேறி உள்ளது ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி உள்ளது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் செயல் திறனைஉச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழு (சிஓஏ) மறு ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து சிஓஏ குழுவின் தலைவர் வினோத் ராய் கூறுகையில், “கேப்டன் விராட் கோலி,பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடைவெளியில் இருந்து திரும்பி வந்த பிறகு அணியின் செயல் திறன் குறித்து மறு ஆய்வு செய்வோம்.

இதற்கென தேதி, நேரத்தை ஒதுக்க மாட்டோம். ஆனால் நாங்கள், அவர்களிடம் பேசுவோம். மேலும் எதிர் கால தொடர்கள் குறித்து தேர்வுக்குழு தலைவரிடமும் பேசுவோம்” என்றார். மறு ஆய்வு கூட்டம் தொடர்பாக வேறு எந்த தகவலையும் கூற வினோத் ராய் மறுத்துவிட்டார். எனினும் மறு ஆய்வு கூட்டத்தின் போது விராட் கோலி, ரவி சாஸ்திரி, எம்எஸ்கே பிரசாத் உள்ளிட்டோரிடம் சிலமுக்கியமான கேள்விகள் எழுப்பக்கூடும் என தெரி கிறது.

இதில் முக்கியமானதாக அம்பதி ராயுடு தேர்வு விஷயத்தை கையாண்ட விதம் குறித்து கேள்வி எழுப்பக்கூடும். பேட்டிங் வரிசையில் 4-வது இடத்துக்கு அம்பதி ராயுடு உறுதியான வீரர் என தேர்வுக்குழுவினர் நம்பவில்லை என்றால் உலகக் கோப்பை தொடர் தொடங்குவற்கு முன்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற கடைசி தொடர் வரை ஏன் அம்பதி ராயுடு அணியில் நீடித்தார் என்பதற்கு இந்திய அணி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும்.

அம்பதி ராயுடு உலகக் கோப்பை தொடருக்கான மாற்று வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தார். ஆனால் காயம் காரணமாக இருமுறை வீரர்களை மாற்றிய போதிலும் அம்பதி ராயுடு அழைக்கப்படவில்லை. இதன் விளைவாக அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் அம்பதி ராயுடு ஓய்வு பெறுவதாக அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாவதாக அணியில் 3 விக்கெட் கீப்பர்களை தேர்வு செய்தது ஏன்? என்ற கேள்வி எழுப்பப்படலாம். குறிப்பாக தினேஷ் கார்த்திக் நீண்ட காலமாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படவில்லை, மேலும் ஐபிஎல் தொடரிலும் அவரிடம் இருந்து பெரிய அளவிலான பங்களிப்பு இல்லாத நிலையில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதற்கும், சிஏஓ குழு காரணங்களை கேட்டறியக்கூடும். உலகக் கோப்பை தொடரில் மகேந்திர சிங் தோனியுடன் ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் ஆகியோர் பல்வேறு ஆட்டங்களில் விளையாடும் லெவனில் இடம் பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரை இறுதி ஆட்டத்தில் 240 ரன்கள் இலக்கை துரத்திய போது 5 ரன்களுக்கு 3 விக்கெட்களை பறிகொடுத்த நிலையில் தோனியை7-ம் நிலையில் களமிறக்கியது ஏன்? என்பது குறித்த கேள்வி மூன்றாவதாக இருக்கலாம். தோனியை 7-வது வீரராக களமிறக்க பேட்டிங் பயிற்சியாளர் சஞ்ஜெய் பங்கரே முடிவு செய்ததாக கிரிக்கெட் வட்டாரங்களில் அறியப்படுகிறது. இதுதொடர்பாக ரவி சாஸ்திரி தனது கருத்தை தெரிவிக்கும்படி கேட்கப்படலாம்.

அணித் தேர்வுக்குழுவில் தற்போது 5 பேர் உள்ளனர். இது பிசிசிஐ-யின் ஆண்டுக்குழு கூட்டம் நடைபெறும் வரை தொடரும். இதனால் தேர்வுக்குழு தலைவர் வீரர்களின் தேர்வின் போது அதிக உறுதியுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படலாம்.

இந்த ஆய்வின் போது வினோத்ராய் தலைமையிலான சிஓஏ குழு,அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பை தொடருக்கான அணித் தேர்வு குறித்து தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிராத்திடம் ஆலோசிக்க உள்ளது. - பிடிஐ தோனியை 7-வது வீரராக களமிறக்க பேட்டிங் பயிற்சியாளர் சஞ்ஜெய் பங்கரே முடிவு செய்ததாக கிரிக்கெட் வட்டாரங்களில் அறியப்படுகிறது. இதுதொடர்பாக ரவி சாஸ்திரி தனது கருத்தை தெரிவிக்கும்படி கேட்கப்படலாம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x