Last Updated : 02 Jul, 2019 11:31 AM

 

Published : 02 Jul 2019 11:31 AM
Last Updated : 02 Jul 2019 11:31 AM

விம்பிள்டன் டென்னிஸ்: முன்னாள் சாம்பியன் வீனஸ் வில்லியம்ஸை வெளியேற்றிய 15 வயது பள்ளிச் சிறுமி

லண்டனில் தொடங்கிய விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் முன்னாள் சாம்பியன் வீனஸ் வில்லியம்ஸை அதிர்ச்சித் தோல்வியுறச் செய்தார் 15 வயது பள்ளிச் சிறுமி.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றானதும், பாரம்பரியம் மிக்கதுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் தொடங்கி நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் தரவரிசையில் 310 இடத்தில் இருக்கும் 15 வயது சிறுமி கோரி காஃப்பை எதிர்த்து மோதினார் 39 வயதான முன்னாள் சாம்பியனும் அமெரிக்க வீராங்கனையுமான வீனஸ் வில்லியம்ஸ்.

வீனஸ் வில்லியம்ஸின் அசுரத்தனமான சர்வீஸ்கள், முன்கை ஆட்டம், ஏஸ்கள் முன் இந்த சின்னச்சிறு சிறுமி எவ்வாறு தாக்குப்பிடிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், அனைத்தும் தலைகீழாக நடந்தது.

களத்தில் இறங்கியதில் இருந்து பம்பரமாகச் சுழன்று காஃப் விளையாடினார். வீனஸ் வில்லியம்ஸின் பல சர்வீஸ்களை  பிரேக் செய்தார் காஃப். வீனஸ் வில்லியம்ஸ் திணறும் அளவுக்கு சர்வீஸ்களையும், ஏஸ்களையும் காஃப் வீசி ,  முதல் செட்டை 6-4 என்ற வீதத்தில் கைப்பற்றி அதிர்ச்சி அளித்தார்.

2-வது செட்டிலும் கோரி காஃப் கையே ஓங்கி இருந்தது. இருவரும் சரிக்குச் சமமாக மோதிக்கொண்டதால், 4-4 என்ற செட்களில் ஒரேமாதிரியாக இருந்தனர். ஆனால், கோரி காஃபின் வேகத்துக்கு வீனஸ் வில்லியம்ஸால் ஈடுகொடுக்க முடியவிலலை இதனால் 2-வது செட்டையும் 6-4 என்ற செட்களில் கைப்பற்றினார் கோரி காஃப்.

முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் வீனஸ் வில்லியம்ஸுக்கு இந்தத் தோல்வி தனது வாழ்நாளில் மறக்க முடியாததாக அமைந்துள்ளது. 39 வயதாகும் வீனஸ் வில்லியம்ஸ் தன்னைக் காட்டிலும் 24 வயதான பள்ளிச் சிறுமியிடம் தோல்வி அடைந்தார்.

முதல் ஆட்டத்தின் போது தரவரிசையில் 310 இடத்தில் இருந்த கோரி காஃப், இந்த வெற்றியால், தரவரிசையில் 215 இடத்துக்கு முன்னேறுவார்.

இந்த வெற்றி குறித்து கோரி காஃப் கூறுகையில், " நான் வெற்றி பெற்றபின் எனக்கு வில்லியம்ஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார். நானும் அவரின் விளையாட்டுக்கு நன்றி தெரிவித்தேன். இந்த வெற்றியை நினைத்து எவ்வாறு மகிழ்ச்சி அடைவது எனத் தெரியவில்லை. ஒரு போட்டியில் வென்றபின், நான் அழுதது இதுதான் முதல் முறை. என்னுடைய உணர்ச்சிகளை எவ்வாறு வெளிப்படுத்துவது எனத் தெரியவில்லை.

நான் வீனஸ் வில்லியம்ஸுக்கு எதிராக ஒவ்வொரு புள்ளியும் எடுக்கும்போது உற்சாகமாக இருந்தது. ஆனால், எனக்கு நானே என்னை சமாதானப்படுத்திக்கொண்டேன். மகிழ்ச்சியை கட்டுப்படுத்திக்கொண்டேன். வெற்றி பெற்ற பின் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை" எனத் தெரிவித்தார்.

2-வது சுற்றில் சுலோவோகிய வீராங்கனை மக்தலேனா பாரிகோவாவுடன் மோதுகிறார் கோரி காஃப்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x