Last Updated : 02 Jul, 2019 01:23 PM

 

Published : 02 Jul 2019 01:23 PM
Last Updated : 02 Jul 2019 01:23 PM

அரையிறுதியில் பாகிஸ்தான் நுழைந்தால் மற்ற அணிகளுக்குத்தான் ஆபத்து: வக்கார் யூனிஸ் எச்சரிக்கை

உலகக்கோப்பை அரையிறுதிக்கு பாகிஸ்தான் தகுதிபெற்றால், அவர்களின் ஆட்டம் ஆபத்தானதாக இருக்கும் என்று முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பைப் போட்டியில் தொடக்கத்தில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்த பாகிஸ்தான் அணி கடந்த 3 போட்டிகளில் வெற்றி பெற்றது. இப்போது 8 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 9 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது.

இன்னும் பாகிஸ்தான் அணிக்கு வங்கதேசத்துடனான ஆட்டம் மட்டுமே இருக்கிறது. இந்த ஆட்டத்தில் வென்றாலும், இங்கிலாந்து அணி நியூஸிலாந்து அணியிடம் தோல்விஅடைந்தால்தான் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் செல்ல முடியும்.

பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதிபெறுவது முன்பு இந்திய அணியின் கைகளில் இருந்த நிலையில், தற்போது நியூஸிலாந்து பக்கம் சென்றுள்ளது. நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவில்தான் பாகிஸ்தான் அணியின் வாழ்வு இருக்கிறது.

ஆனால், அரையிறுதிக்குள் ஒருவேளை பாகிஸ்தான் அணி சென்றுவிட்டால், அனைத்து அணிகளுக்கும் ஆபத்தான அணியாக மாறிவிடும் என முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐசிசி இணையதளத்தில் வக்கார் யூனிஸ் எழுதியள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:

அரையிறுதிக்கு பாகிஸ்தான் தகுதிபெறும் எனும் நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கிறது. ஒருவேளை அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி தகுதிபெற்றுவிட்டால், சர்பிராஸ் அகமது தலைமையிலான அணி மற்ற அணிகளுக்கு மிகப்பெரிய ஆபத்தான அணியாக மாறிவிடும்.

வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெறுவதோடு, எங்களின் தரத்தையும் உயர்த்திக்கொள்ளும் வகையில் விளையாடுவோம்.

உண்மையில், இதுபோன்ற கட்டத்தில் பாகிஸ்தான் அணி இருப்பது சிறிது பயங்கரமாகத்தான் இருக்கிறது. 1992-ம் ஆண்டு உலகக் கோப்பை வரலாறு திரும்பப்போகிறதா. அதுபோன்று நடக்க சில நல்லமுடிவுகளை எதிர்பார்க்க வேண்டும். குறிப்பாக வங்கதேச அணியை வெல்ல வேண்டும்.

ஆப்கானிஸ்தான் அணியை சிறிது சிரமப்பட்டுத்தான் பாகிஸ்தான் வென்றது. ஆனால் அதைக் காட்டிலும் வங்கதேசத்துடன் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடுவார்கள். முன்னாள் சாம்பியன்கள் விளையாடியதைப் போன்று, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையடவில்லை. எப்படியாகினும் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு கைவிட்டுப்போகவில்லை

உலகக் கோப்பையில் இருந்து தொடக்கத்திலேயே வெளியேறி இருக்க வேண்டியநிலையில் அதிர்ஷ்டவசமாக தப்பி, இன்னும் அரையிறுதிக்கான போட்டியில் இருக்கிறோம். உண்மையில் இதற்கு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிய இமாத் வாசிமிற்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

பாகிஸ்தான் அணியில் பக்கர் ஜமான் பேட்டிங்கில் தடுமாறுகிறார் என்பதற்காக அவரை மாற்றிவிடக்கூடாது. தற்போது இருக்கும் பாகிஸ்தான் விளையாடும் 11 வீரர்கள் கொண்ட அணியை மாற்றாமல் வைத்திருக்க வேண்டும். பக்கர் ஜமானுக்கு இந்த தொடர் மோசமாக இருந்தாலும், அவர் திறமையான பேட்ஸ்மேன். அவரை கைவிட்டு வேறுவீரரை களமிறக்கலாம் என்று நினைத்துவிடாதீர்கள்.

இவ்வாறு வக்கார் யூனிஸ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x