Published : 08 Jul 2019 12:51 PM
Last Updated : 08 Jul 2019 12:51 PM

பாகிஸ்தானை வெளியேற்ற இங்கிலாந்திடம் வேண்டுமென்றே தோற்றதா இந்திய அணி?: சர்பிராஸ் அகமது பதில்

உலகக்கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானை வெளியேற்றுவதற்காக வேண்டுமென்றே இங்கிலாந்து அணியிடம் இந்தியா தோற்றதா? என்ற கேள்விக்கு பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது பதில் அளித்துள்ளார்.

உலகக்கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணியும், நியூஸிலாந்து அணியும் 11 புள்ளிகள் பெற்றிருந்தும், நிகர ரன்ரேட் அடிப்படையில் நியூஸிலாந்துக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைத்தது. இந்தியா, நியூஸிலாந்து அணிகளை வீழ்த்தி இங்கிலாந்து அரையிறுதி வாய்ப்பு பெற்றது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெல்ல வேண்டிய சூழலில் 31 ரன்களில் தோல்வி அடைந்தது. அந்த ஆட்டத்தில் இந்திய அணிவென்றிருந்தால், இங்கிலாந்துக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைத்திருக்காது, பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் சென்றிருக்கும்.

பாகிஸ்தானை வெளியேற்றும் நோக்கில்தான் இந்திய அணி வேண்டுமென்றே இங்கிலாந்திடம் இந்தியா தோற்றதாக சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டது. பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலரும் குற்றம்சாட்டினார்கள்.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் வெளியேறியதையடுத்து லாகூருக்கு பாகிஸ்தான் அணியினர் நேற்று திரும்பினார்கள். விமானநிலையத்தில் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவரிடம் பாகிஸ்தானை வெளியேற்ற இந்தியஅணி வேண்டுமென்றே இங்கிலாந்திடம் தோற்றதா, உண்மையான தோல்வியா அது என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு சர்பிராஸ் அகமது பதில் அளிக்கையில், " இந்தியா அடைந்த தோல்வியை சந்தேகப்படக்கூடாது. நீங்கள் கூறுவதுபோல் எங்களை வெளியேற்றுவதற்காக இந்தியா தோற்றது எனக் கூறுவதும் சரியல்ல. எங்களுக்காகவே இந்திய அணிதோற்றதாக நாங்கள் நினைக்கவில்லை. இங்கிலாந்து அணி சிறப்பாகப் பந்துவீசியது.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் நாங்கள் மோசமாக விளையாடவில்லை.அதற்காக வெட்கப்படவும் இல்லை. முதல் 5 போட்டிகள் எங்களுக்கு மிகவும் கடினமாக  இருந்தது. ஆனால், அதன்பின் தோல்வியில் இருந்து மீண்டு நாங்கள் வெற்றி பெற்றோம்.

இந்த தோல்விக்காக பாகிஸ்தான் அணி வாரியம் என்னை கேப்டன் பதவியில் இருந்து நீக்குவதாக இருந்தால், முடிவு எடுக்கலாம். ஆனால், தனிப்பட்ட முறையில், அணியில் உள்ள வீரர்களை நான் நன்கு அறிவேன். பெரும்பாலும்இளம் வீரர்கள். உலகக் கோப்பையில் நாம் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றால்தான் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும். குறிப்பாக அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை நடக்கிறது. அதற்கு தயராக வேண்டும்.

நாங்கள் விளையாடிய விதம் எங்களுக்கு முழுமையான மனநிறைவை அளிக்கிறது. இங்கிலாந்தில் கடினமான சூழலைச் சந்தித்தோம். ஆதலால், கேப்டன் பதவியில் விலகும் எண்ணம் இல்லை தொடர்ந்து வாய்ப்பளித்தால் இன்னும் சிறப்பாக அணியை வழிநடத்துவேன்.

இவ்வாறு சர்பிராஸ் அகமது தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x