Last Updated : 26 Nov, 2014 03:37 PM

 

Published : 26 Nov 2014 03:37 PM
Last Updated : 26 Nov 2014 03:37 PM

உலகக்கோப்பை: இந்திய அணியில் இடம்பெற ஹர்பஜன் இலக்கு

ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் நடைபெறும் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவதே இலக்கு என்று ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியை தனது கேப்டன்சி மூலம் இறுதிப் போட்டி வரை அழைத்துவந்த ஹர்பஜன் சிங் கூறியதாவது, “நான் உலகக் கோப்பை போட்டிகளுக்கு திரும்ப இலக்கு நிர்ணயித்துள்ளேன். ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் விளையாடுவது மகிழ்ச்சியான ஒரு தருணம். எந்த ஒரு வீரருக்கும் உலகக் கோப்பை என்பது மிக முக்கியமான ஒன்று, நான் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

தினமும் நான் விழித்தவுடன் நினைப்பதெல்லாம் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவது பற்றிதான். நாட்டிற்காக மீண்டும் ஒரு முறை சிறப்பாக ஆடுவதற்காக என்னை நான் ஊக்கப்படுத்தி வருகிறேன். அனைத்து போட்டிகளிலும் ஆட எதிர்நோக்கியுள்ளேன். எனவே உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம்பெறுவதை உறுதி செய்வதே என் இலக்கு.எனது பவுலிங் குறித்து நான் திருப்தியாக உணர்கிறேன்.

விஜய் ஹசாரே இறுதிப் போட்டி வரை அணியை அழைத்து வந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். ஆனாலும், கோப்பையை வெல்லாமல் போனது வருத்தமளிக்கவேற் செய்கிறது” என்றார்.

ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வது எப்படி?- ஹர்பஜன் ஆலோசனை

"ஆஸ்திரேலியாவை அவர்கள் சொந்த மண்ணில் நாம் அதிரடி மனோபாவத்துடன் எதிர்கொள்வது அவசியம். இந்த ஆஸ்திரேலிய அணி பலவீனமான அணி என்றே சிலர் கூறுகின்றனர். 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த அணி அல்ல இது.

ஆனால், ஆஸ்திரேலியாவில் இவர்கள் ஆடும்போது அந்த அணி அபாயகரமான அணியாகும். அவர்கள் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்துபவர்கள், அவர்களுக்கு இணையாக ஆட வேண்டுமெனில் ஆக்ரோஷமாக ஆடவேண்டும். தன்னம்பிக்கையான மன நிலை வேண்டும்.

ஆக்ரோஷம் காட்டுவது என்றால் அவர்களுடன் வாய் பேச்சில் மோதுவது, வசைபாடுவது என்ற அர்த்தத்தில் கூறவில்லை. எப்படி விளையாடுகிறோம் என்பதில் ஆக்ரோஷம் காட்டவேண்டும். பேட்டிங், பவுலிங், சரியான காய் நகர்த்தல்களைச் செய்வது, சரியான களவியூகம் அமைப்பது (தோனிக்கு கூறுகிறாரோ?), அணியின் தேவைகளுக்கு ஏற்ப பந்து வீசுவது. இவைதான் நான் ஆக்ரோஷம் என்று கருதுகிறேன்.

எப்போதும் நாம்தன் முன்னிலையில் இருக்க வேண்டும், நாம்தான் இங்கு ஆதிக்கம் செலுத்த வந்துள்ளோம், ஆட்டம் நமது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை அவர்களுக்குக் காட்டவேண்டும். இதுதான் ஆக்ரோஷமான மனோநிலை என்று கூறுகிறேன்.

ஒருகாலத்தில் நடுவர் டேரல் ஹேர் என்னை த்ரோ செய்பவர்களுக்கு முன்னோடி, உதாரணன் என்றெல்லாம் கூறினார், ஆனால் இன்று பந்து வீச்சை சரிசெய்து கொண்டமைக்கு என்னையே முன்னோடியாக, உதாரணமாக காட்டியுள்ளது. இதுவே அனைத்து கேள்விகளுக்குமான விடை.” என்றார் ஹர்பஜன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x